Rabbit proof fence

Rabbit Proof Fence
********************
"ஹாய், Stone Hearted...", என்றுதான் அழைப்பாள், என் தோழி ஒரு காலத்தில்....(கல்நெஞ்சக்காரனாம்)

ஆனால், என்னையும் கண்கலங்க வைத்த திரைப்படம் என்றால், அது ராபிட் ஃப்ருப் ஃபென்ஸ் படம் மட்டுமே.

"ஆறுகள் எல்லாம் வற்றிப் போச்சுன்னா கடல்கிட்ட முறையிடலாம். ஆனா அந்த கடலேஏஏஏ வத்தி போச்சுன்னா....?",
இது ஒரு பிரபலமான வசனம் இல்லையா?. இந்த வசனத்திற்கு எடுத்துக்காட்டுதான் rabbit proof fence.

படத்தின் கதைக்கு போவதற்கு முன் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு மாபெரும் அரசாங்கத் தவறு என்ன என்று சொல்லிவிடுகிறேன்.

ஆஸ்திரேலியா சுதந்திரம் அடைந்த பின்பு, அங்கு வணிக நோக்கத்தில் குடியேறிய வெள்ளை ஆஸ்திரேலியர்கள் அங்குள்ள பழங்குடி இன பெண்களுடன் தொடர்பு கொண்டனர்.

இந்த வெள்ளை ஆஸ்திரேலியர்களுக்கும், ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கும் பிறந்த குழந்தைகள் அரை ஜாதி (half caste) குழந்தைகள் என்று அழைக்கப்பட்டனர்.

ஆஸ்திரேலியா அரசாங்கமே இப்படிப்பட்ட குழந்தைகளை வளர விடவில்லை. அவர்களது சந்ததியும் பெருக விடவில்லை. அந்தக் குழந்தைகளுக்கு நான்கு ஐந்து வயது முடிந்தவுடன் பெர்த் நகரத்தில் உள்ள மோரே ரிவர் செட்டில்மெண்ட் (moore river settlement) என்ற இடத்திற்கு உள்ள இடத்தில் உள்ள campக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். (திருத்திக் கொள்ளுங்கள் தினேஷ். அழைத்து அல்ல, இழுத்துச் சென்று விடுவார்கள்). அங்கு அவர்களுக்கு ஆங்கிலேய வீட்டில் எப்படி வேலை செய்யவேண்டும், கலாச்சாரம் என அனைத்தும் பயிற்றுவிக்கப்பட்டது பின்பு அக்குழந்தைகளுக்கு திருமண வயது வரும்போது, வெள்ளை ஆங்கிலேயன் யாராவது விரும்பினால் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் அல்லது அவனுக்கு ஆசை நாயகியாக இருக்கலாம் இதுதான் விதி.
அவள் மற்றொரு அரை ஜாதி இளைஞனை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதுதான் அரசாங்கத்தின் சட்டம். மொத்தத்தில் அந்த இனம் அழிந்து போகவேண்டும் என்று நினைத்தது ஆஸ்திரேலிய வெள்ளை அரசாங்கம். இது அரசாங்கத்தின் மாபெரும் தவறு.

1850 இல் மேற்கு ஆஸ்திரேலியாவில் சுமார் ஐந்தடி உயரமுள்ள ஏறத்தாழ 1900 கிலோமீட்டர்களுக்கு ஒரு வேலி போடப்பட்டது அந்த வேலியின் பெயர்தான் ராபிட் ப்ரூப் ஃபென்ஸ்.
(ராபிட் என்றால் முயல்... ஃபெண்ஸ் என்றால் வேலி... ).

முயல்களை தடுக்கும் வேலி என்று பொருள்படும் இந்த வேலியை முயல்கள் மற்றும் காட்டு விலங்குகள், விவசாய நிலங்களை சேதப்படுத்தாமல் இருப்பதற்காக ஆஸ்திரேலியாவினர் அமைத்தனர்.

இப்போது ஆஸ்திரேலியப் பழங்குடியினர் அரை ஜாதி  மக்கள் பற்றியும், ராபிட் ப்ரூப் பென்ஸ் பற்றியும் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா... இனி வாருங்கள் கதைக்குப் போகலாம்.

2002 இல் வெளிவந்த இத்திரைப்படம் 1931 கதைக்களமாகக் கொண்டது. அரை ஜாதி இனத்தைச் சேர்ந்த
மோலி (14 வயது) மற்றும் அவள் சகோதரி டெய்சி (8 வயது) ஜிகாலாங் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள்.  சகோதரிகளை ஆஸ்திரேலிய அரசாங்கம், வலுக்கட்டாயமாக மூரே ரிவர் செட்டில்மெண்ட் காம்பிற்கு இழுத்துச் செல்கிறது. அங்கு அவர்களுடன், அவர்களது கசின் சகோதரி கிரேசியும்(10) சேர்ந்து கொள்கிறாள்.

மூவரும் அங்கிருந்து தப்பி, வீட்டுக்கு செல்ல நினைக்கும் போது ஆயிரக்கணக்கான மைல் அப்பால் இருப்பதை உணர்கிறார்கள். வீட்டிற்கு போவதற்கு வழி தெரிய வேண்டுமே?. என்ன செய்ய?.. இங்குதான் ராபிட் புரூப் பென்ஸ் வருகிறது.

அந்த ஃபென்ஸ் ஜிகாலாங் ஊரையும் கடந்து செல்வதால் எப்படியாவது அந்த ரேபிட் புரூப் பெண்ஸ் யை கண்டுபிடித்து விட்டால், அதன் ஓரமாகவே நடந்து சென்றால் அவர்களது கிராமத்தை அடைந்து விடலாம்.
பின்னால் துரத்தி வரும் அரசாங்கத்தினரயும் வழியில் உணவு பிரச்சினைகளையும் சமாளித்து, 3 சகோதரிகளும் வீடு திரும்பினார்களா என்பதுதான் கதை.

தமிழ் சினிமாவில், மொத்தமே பத்தோ பன்னிரண்டோ கதைகள் தான் இருக்கின்றன. அதையே உல்டா செய்து தான் எல்லா படங்களும் வருகின்றன என்று நான் எங்கோ படித்த ஞாபகம்.

உறவு சிக்கல்கள் அல்லது வலிமை வாய்ந்த வில்லனை நொறுக்கும் கதாநாயகன்.  அவ்வளவுதாங்க மொத்த தமிழ் சினிமாவின் கதையே. எல்லா தமிழ் படங்களையும் இந்த ஒரு வரி கதையில் அடக்கிவிடலாம் ஆனால் உலக சினிமா அப்படி அல்ல...
நேற்றுப் பார்த்த படம் ஒரு தினுசு என்றால் இது ஒரு தினுசு.

உங்களது மகனையோ மகளையோ யாராவது ஒரு நாள் திடீரென இழுத்துச் சென்று விட்டால், உங்களுக்கு எப்படி இருக்கும்...?.
மோலியின் தாயாக நடித்திருப்பவர்... உணர்ச்சிகளை அள்ளிக் கொட்டி இருக்கிறார்...

மோலி தான் (சிறுமியின் உண்மையான பெயர் எனக்கு தெரியவில்லை) படத்தின் ஹீரோ, ஹீரோயின், கதை எல்லாமே...

படத்தின் வழி நெடுகிலும் உணர்வுகளையும் பாசத்தையும் அள்ளித் தெளித்திருக்கிறார்.

ஒரு அக்கா என்பவள், இரண்டாவது தாய் என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தைப் பார்த்த பின்பு, அந்த முடிவை மாற்றிக் கொண்டேன்.. அக்கா இருப்பவர்களுக்கு அக்கா தான் தாய்.

தங்கைக்கு காலில் இருந்து ரத்தம் வர, தான் பசியால் மயங்கி விழும் நிலையில் இருந்தாலும், தங்கையை தூக்கி கொண்டு நடப்பது.... அப்பப்பா மோலி நமக்கு அக்காவாக இல்லாமல் போய்விட்டளே என்று ஏங்க வைக்கிறாள்...

தங்களைச் சுற்றி நிறைய முயல்கள் ஓடினாலும், முதல் நாள் இரவில் நெருப்பு மூட்ட முடியாத காரணத்தினால் உணவின்றி தவிக்கிறார்கள்.பின்பு அடுத்த நாள் ஒரு வழிப்போக்கனிடம் நெருப்பு பற்ற வைக்க தீப்பெட்டி வாங்குகிறார்கள். அங்கேயும் தங்கைக்கு பசிக்குமே என்று மோலி படும் வேதனை,  நம் கண்களை வியர்க்க வைத்து விடுகிறது...

மோலி, தன் தாயாரை பார்த்தவுடன் ஓடி போய் கட்டி கொள்கிறாள். அது எல்லா படத்திலும் ஒரு இயல்பான காட்சிதான் என்றாலும், அவர்கள் ஒன்று சேரும் போது மனதைப் பிசைகிறது.
அதிக சந்தோஷதிலும், கண்ணீர் வருமோ...?.

மூன்று மாதங்களில் சுமார் 1800 மைல்கள் நடக்கிறார்கள், சகோதரிகள். வழி நெடுகிலும் நாமும் அவருடன் சேர்ந்து நடந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது..

வாழ்வின் மீதான ஆசையையும் உறவுகளின் வலிமையையும் வலியோடு எடுத்துச் செல்லப்படும் விதம் அருமையிலும் அருமை.

படத்தின் மற்றொரு ப்ளஸ் இசை...
அடடா சும்மா தாலாட்டியே அழ வைக்கிறது.

இந்தப் படம் தமிழில் டப் செய்யபடவில்லை என்றாலும், யூ ட்யூபில் பார்ப்பதற்கு கிடைக்கிறது.

டவுன்லோட் செய்து டிவியில் பாருங்கள்... அப்போதுதான் சப் டைட்டில் படித்து புரிந்து கொள்ள முடியும். ( கொய்யால... அவ்ளோ வேகமா English subtitle போட்டால் எப்படிடா படிக்குறது...?).

2008 ல், ஆஸ்திரேலியப் பிரதமர் இந்த இனவெறி சம்பவத்திற்கு, உலக மக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்புக் கோரினார். அது இன்றளவும் ஹிஸ்டாரிக்கல் அப்பாலஜி என்று அழைக்கப்படுகிறது

இன்னொரு பிரச்சனையும் உள்ளது இந்த படம் யூடியூபில் ஒரே பைலாக இல்லை.  94 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம் நூற்றுக்கும் மேற்பட்டு பிட்டு பிட்டாக பிரிந்து கிடக்கிறது. எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து பார்த்து, படித்து புரிந்து கொள்ள வேண்டியது உங்கள் சாமர்த்தியம்.....





-கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (29-Sep-21, 6:41 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 48

மேலே