முதலும் கடைசியுமான கேள்வி
பள்ளிக்கு சென்று படிக்கிறோம்.பள்ளிக்கு பின் படித்ததை மறக்கிறோம். கல்லூரிக்கு செல்கிறோம், கற்பதை விட, கற்பனை அதிகமாக ஓடிட வித விதமான இன்பங்களை நுகர கற்றுக்கொள்கிறோம்.இதே நேரத்தில் துவங்குகிறது, இளமையின் அபரிமிதமான ஏக்கம். இளம் பெண்கள் யாரை பார்த்தாலும் காதல் கொடுக்கும் தாக்கம்.கல்லூரி வாழ்க்கை, பிறர் சம்பாதிப்பில் சுகமாக கழிந்தவுடன். நம் வாழ்க்கையை வாழ வேலை செய்து சம்பாதிக்கவேண்டும் என்கிற நிலை. வேலை தேடி கண்டு பிடித்து புதிய வாழ்க்கையை துவங்குகிறோம். வேலை கண்ட பின் சேலை பின்னால் சுற்றி வர மோகம் வருகிறது. காதல் , சாதல், மோதல், ஊடல் இதுபோல பல வகை வர்ணங்கள்.ஒரு வழியாக திருமணம் புரிந்து புது வாழ்வை வரவேற்கிறோம்.தேன்நிலவு வான் நிலவு என கொஞ்ச நாட்கள் மெய்மறக்கிறோம். ஓரிரண்டு ஆண்டுகளில் அப்பா அம்மா என்று உயர்ந்துவிடுகிறோம். திருமண புதிதில் புரிந்து வந்த சாதனைகள் குறைய தொடங்குகிறது. அலுவலகத்திலும் குடும்பத்திலும் பொறுப்புகள் சுமைகள் கூடுகிறது. அதன் பிறகு வாழ்க்கையில் இருந்த ஆவல் குறைந்து அமைதி தேடல்.பிள்ளைகள் பெரியவர்களானவுடன் அவர்களை கரை சேர்க்க நெருடல்.சர்க்கரை வியாதி ரத்த அழுத்தம் இதய நோய் இதுபோல் ஏதோ ஒன்று நம்மிடம் தோழமை கொள்ள தவறுவதில்லை. நண்பர்கள் பலர் இருப்பினும் யார் உண்மை நண்பர் என்று அறிகிறோம். சில நேரங்களில் நண்பன் என்று எவனாவது இருக்கிறானா என்று யோசித்து பார்க்கிறோம்.
இவ்வளவு வருடங்கள் வாழ்ந்து என்ன சாதித்தோம் என்ற மனக்குறை.பழையதை நினைத்து ஆதங்கம் , வருங்காலத்தை நினைத்து கவலை.இந்த நினைவுகளால் நிகழ்கால மகிழ்ச்சியை விட்டு கொடுக்கிறோம்
நம் நலனுக்காக நாம் வெறுத்த நபர்களை மன்னித்து மறக்கிறோம்.நான் இன்னும் எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்திருக்கவேண்டும்.என்பது போன்ற எண்ணங்கள் நினைவுகளில் வந்து அலை மோதும்.
மீண்டும் இளமை திரும்பினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஒரு நப்பாசையுடன் கூடிய சிந்தனைகளும் நம்மை தாக்க தவறாது. உன்ன உணவு உடுக்க உடை உறைய ஒரு இடம் இதுவே போதும்
நாம் அமைதியுடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு என்னும் தத்துவம், நம்முள் உருவாகி வாழ்வின் பெரிய ரகசியத்தை வெளிப்படுத்தும்.
பிறந்தோம், வளர்ந்தோம் , நிறைய குறை கண்டோம், குறைய நிறை கொண்டோம். இப்போது நரை கண்டு கொண்டோம். இனி அடுத்து என்ன என்கிற கேள்வி கடைசி மூச்சு வரை தொடர்ந்து வரும். அதன் பிறகு?
ஆனந்த ராம்