கலைநிறைந்த போதே ககன மதி ஒளியின்பம் ஈந்துமேல் ஓங்கியே தங்கும் - வரம், தருமதீபிகை 888

நேரிசை வெண்பா

கலைநிறைந்த போதே ககன மதியும்
நிலையுயர்ந்து நீர்மை சுரந்து - தலைமையாய்
எங்கும் ஒளியின்பம் ஈந்துமேல் ஓங்கியே
தங்கும் வெளியே தழைத்து 888

- வரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

விண்ணில் உள்ள சந்திரன் கலைகள் நிறைந்தபோது ஒளி மிகுந்து நிலை உயர்ந்து இனிய நீர்மைகள் சுரந்து எங்கும் பிரகாசமாய் இன்பங்கள் ஈந்து வருவான்; அதுபோல் மண்ணில் உள்ள மனிதனும் கலை தெளிந்தபோது எவ்வழியும் தலைமையாய் நிலை உயர்ந்து யாண்டும் மேன்மையாய் விளங்குவான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உயர்வுடையராய் வாழவே யாவரும் எங்கும் விரும்புகின்றனர். இயல்பான அந்த விருப்பம் உயர்வின் நிலைமை தலைமைகளை விளக்கி நிற்கிறது. கருதிவரும் அளவே உறுதி நலங்கள் மருவி வருகின்றன. கருத்தும் குறிப்பும் சீவர்களுடைய விருத்திகளைத் துலக்கி விளைவுகளைக் காட்டியருள்கின்றன.

உள்ளம், உணர்வு, உயிர் என உரையாடி வருகின்றோம்; ஆன்ம ஒளிகளின் விழிகளே உணர்வும் உள்ளமும். தூய உள்ளமும், தெளிந்த உணர்வும் சேர்ந்தபொழுது அந்த மனிதன் அதிசய மேன்மைகளை நேர்ந்து துதி மிகுந்து திகழ்கின்றான்.

முனிவர், யோகர், சித்தர், ஞானிகள் எனத் தோன்றியுள்ளவர் எவரும் மனநலமும் மதிநலமும் வாய்ந்து வந்தவரே யாவர். மனமும் மதியும் கனமும் கதியும் தரும் இனமாயுள்ளன.

அறிவு கூர்மையாய்த் தெளிவடைவது நீர்மையான மேலோர்களுடைய சீர்மைகளைத் தோய்ந்து வருவதv னாலே யாம். மேலான உணர்வு நலங்கள் நல்ல நூல்களிலேயே மேவியுள்ளன. இனிய கலைகள் என நிலவியுள்ள அவற்றை உரிமையோடு பழகி வருபவன் பெரிய கலைஞனாய்ப் பெருகி வருகிறான்.

கலிவிருத்தம்
மா விளம் விளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

பொருவி லாஇதி காச புராணங்கள்
தெருளு மாந்தர் சிறப்புளர் ஆகுவர்;
தரும நூலும் புராணத்தின் தன்மையும்
கருதி ஓர்ந்த வரேகலை வல்லரே. - கூர்மபுராணம்

சிறந்த கலைஞன் என உயர்ந்துவர வுரியவனை இது உணர்த்தியுள்ளது. சகலகலாவல்லி என்று சரசுவதி தேவிக்குப் பெயர் அமைந்துள்ளமையால் கலையின் மகிமைகளைத் தெரிந்து கொள்ளுகிறோம். கலைகள் குறைந்த பொழுது மனிதன் சிறுமதியனாய்ச் சீரழிகின்றான். அவை நிறைந்த அளவு பெருமதியன் எனப்பேர் பெற்று நிற்கின்றான். கலை நிறைந்து வர மதி ஒளி மிகுந்து வருகிறது; அது குறைந்தால் அது தேய்ந்து போகிறது. வானத்தில் உள்ள சந்திரன் இந்த ஞானத்தை உலகத்துக்கு நேரே தெளிவாய் உணர்த்திக் கொண்டிருக்கிறான்.

நேரிசை வெண்பா

கலையிழந்த மாந்தர் கதியும் மதியும்
நிலையும் ஒருங்கே இழந்து - முலையிழந்த
மங்கையென நின்று மருண்டு மதிமயங்கி
வெங்கயவர் ஆவர் விரைந்து - கவிராஜ பண்டிதர்

கலையறிவை இழந்த பொழுது மனிதன் மருவி நிற்கும் புலைநிலையை இதனால் உணர்ந்து கொள்கிறோம். ஒளி இருளை நீக்குவது போல் கல்வி மடமையை நீக்கி யருளுகிறது. அத்தகைய கல்வி இல்லையானால் எவ்வழியும் பொல்லாத அல்லலேயாம்.

Better be unborn than untaught, for ignorance is the root of misfortune. (Plato)

மூடம் துன்பங்களுக்கு மூலவேர்; அதனை நீக்க வுரிய கல்வியை மனிதன் கல்லாமல் இருப்பதை விட அவுன் பிறவாமல் ஒழிவது நல்லது எனப் பிளாட்டோ என்னும் கிரீஸ் தேசத்துப் பெரியார் இவ்வாறு கூறியிருக்கிறார்.

Education makes the man. [Cawthorn]

கல்வி மனிதனை உருவாக்குகிறது என இது குறித்துளது.

மனித உருவில் மருவியிருந்தாலும் கல்லாதவன் மிருகமாய் இழிந்து நிற்கிறான். கற்றவன் தேவராய் உயர்ந்து திகழ்கிறான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Oct-21, 9:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 48

சிறந்த கட்டுரைகள்

மேலே