செய்த வினைப்பயனே சேரவரும் இனிய நல்வினையை இன்னே புரிக இனிது - விதி, தருமதீபிகை 898

நேரிசை வெண்பா

செய்த வினைப்பயனே சேரவரும்; ஈசனுமே
எய்த அயல்யாதும் ஈயானே - உய்தியெலாம்
உன்னிடமே உள்ளனகாண்; ஓர்ந்தினிய நல்வினையை
இன்னே புரிக இனிது 898

- விதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நீ செய்த வினையின் பயனே உன்னை வந்துசேரும்; மாறாக வேறு யாதும் வாராது; ஈசனும் ஈயான்; உயர்வு தாழ்வெல்லாம் உன்னிடமே உள்ளன; இந்த உண்மையை உணர்ந்து நன்மையை விரைந்து செய்து உயர்ந்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தந்தை, மைந்தன் என இந்தவாறு காரண காரியத் தொடர்பாய் மனித சமுதாயம் மருவி வருதல் போல் வாழ்வும் கரும விளைவுகளை உரிமையோடு கலந்து வந்துள்ளன. இயற்கை நியமம் வியத்தகு நிலையில் எல்லா வற்றையும் இயக்கி வருகிறது.

முன்னும் பின்னும் தாம் செய்த வினைகளின் பலன்களை நுகர்ந்தே சீவர்கள் தொடர்ந்து படர்ந்து வருகின்றனர். எவர் வாழ்வும் அவரவருடைய விதியின் வழியே பதிவாயுளது. பழமையில் செய்தவினை கிழமையாய்ப் பதிந்தது; அந்த ஊழ் ஊட்டியவாறே இன்பமும் துன்பமும் எவ்வழியும் கால்நீட்டி எழுகின்றன. அவ்வாறு எழுந்தனவே அனுபவங்களாயின.

வேண்டாத துன்பமும் மேவல்போல் இன்பமும்
வேண்டா விடினுமுண்(டு) உந்தீ பற
விதிவழி நெஞ்சேஎன்(று) உந்தீ பற. (அவிரோதவுந்தியார், 90)

இன்னிசை வெண்பா

ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்
வேண்டார்மன் தீய; விழைபயன் நல்லவை;
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுத லரிது 109 பழவினை, நாலடியார்

நேரிசை வெண்பா

நீடுந் தலைகீழ்கால் மேலாகி நின்றாலுங்
கூடும் படியன்றிக் கூடாதால் - ஓடி
வருந்தாமல் உள்ளபடி வந்திடக்கண் டாறி
இருந்தாலென் நெஞ்சே யினி. 407 சிவானந்த மாலை

கலித்துறை

ஆமே ஒருவர் ஒருவருக்(கு) இடரை அகற்றுவதும்
ஆமே ஒருவர் ஒருவருக்(கு) இடைநன்மை ஆக்குவதும்
தாமே துசெய்த னரன்னது தாமே புசிப்பதன்றிப்
போமே தலையில் பொறித்தான் பிறழ்ந்து நினைப்பினுமே.

– விநாயக புராணம்

தாம் செய்த வினைகளின் பலன்களையே யாரும் அனுபவிப்பர்; வேறு மாறாக எவரும் எதையும் பெற முடியாதென இவை உறுதியாய் உணர்த்தியுள்ளன.

கரும விளைவுகள் அதிசய மருமங்களாய் மருவி உயிரினங்களை ஊடுருவி நிற்கின்றன. தமக்கு நேருகிற கேடுகளை உணராமல் தீமைகளைச் செய்து கொண்டு திரிவது மடமைக் களிப்புகளாயுள்ளன. செய்த எதுவும் செய்தவனைச் சேர்ந்து கொள்கிறது.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும். 319 இன்னாசெய்யாமை

காலையில் ஒருவன் பிறர்க்குத் துன்பம் செய்யின் மாலையில் அது அவனுக்குக் தானாகவே வந்துசேரும் என வள்ளுவர் இவ்வாறு வினைப்பயனை விளக்கி விதிமுறையைத் துலக்கியிருக்கிறார்.

முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு.
பிற்பகல் காண் குறுாஉ.ம். (சிலப்பதிகாரம், 21)

முற்பகல் செய்வினை பிற்பகல் உறுநரின். (பெருங்கதை, 1-56)

முற்பகல் ஓர்பழி முடிக்கின் மற்றது
பிற்பகல் தமக்குறும் பெற்றி என்னவே. (கந்த புராணம்)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். (கொன்றைவேந்தன்)

வினையின் விளைவுகளைக் குறித்து வந்துள்ள இவை இங்கே சிந்திக்கத்தக்கன. பிறர்க்குக் கேடு செய்கின்றவன் தன் உயிர்க்கே கொடிய துன்பங்களை விளைத்துக் கொள்கிறான். ’தன்வினை தன்னைச் சுடும்’ என்பது பழமொழியாய் வந்துள்ளது. செய்த தீவினை செய்தவனைச் சுட்டுப் பொசுக்கி நீறாக்கிவிடும் என்பதை இதில் தெரிந்து நிலைமைகளை ஓர்ந்து கொள்கிறோம்.

Punishment is a close attendant on guilt. [Horace]

செய்த தீமையைத் தொடர்ந்தே தண்டனையும் அடர்ந்து நிற்கிறது என இது குறித்திருக்கிறது. தனக்கு வருகிற துயரை உணராமல் இடர்களைச் செய்து படுதுயராய் உழல்வது மனிதனிடம் கொடிய மூடமாய் நெடிது ஓங்கியுள்ளது.

அறியவுரியதை அறியாமையால் அல்லலைச் செய்து எல்லையில்லாத தொல்லைகளை அடைகிறான். நல்ல மதி மாண்டு போகவே பொல்லாத விதி மூண்டு வர நேர்ந்தது. மனிதன் அரிய கல்விகளைக் கற்கிறான். பெரிய செல்வங்களைப் பெறுகிறான்; ஆனால் அறிய வேண்டியதைச் சரியாய் அவன் அறிந்து கொள்வதில்லை.

தன்னுடைய நினைவு செயல்களிலிருந்தே வினை விளைகிறது; அந்த வினையே பின்பு விதியாய் வருகிறது; வினைமூலம் இனியதானால் நல் விதி; கொடியது ஆனால் தீ விதி; நல் விதி யாண்டும் இன்பம் நல்கும்; தீவிதி என்றும் துன்பமே தரும்; இந்த உண்மையை ஒருவன் என்று உணர்ந்து நன்று புரிகிறானோ அன்றே அவன் அல்லல் எல்லாம் நீங்கி நல்ல சுகங்களைப் பெறுகிறான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Oct-21, 9:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

சிறந்த கட்டுரைகள்

மேலே