குறை சொன்னால் மனதுக்கு ஒரு அல்பமான நிறை

ஒருவர் குறையை பற்றி இன்னொருவரிடம் குறிப்பிடுவது அல்லது ஒருவரை பற்றி இன்னொருவரிடம் புகார் செய்வது, இவை இரண்டும் சொல்ல போனால், மனித இயல்புதான். இது வெளி மனிதர்களுக்கு மட்டும் பொருந்துவது இல்லை நம் வீட்டுக்குள்ளே இருக்கும் நமது சொந்தங்களுக்கும்தான். இந்த மாதிரி குறைகளை மற்றவரிடம் கூறுகையில் , குறை கூறப்பட்டவர் மற்றவருக்கு தெரிந்தவராயிருந்தால் அவரும் வேறு சில அவரது குறைகளையும் மற்றவரிடம் அவிழ்த்து விடுவார். அதன் பின் குறைகளை கேட்ட மனிதர் இன்னுமொருமுறை குறைசொல்லப்பட்டவரை சந்திக்கும்போது அவர் மற்றவரிடமிருந்து கேட்ட குறைகளையும் அவரிடமே கூறி விடுவார். ஒரு சிலர் யார் இதை தனக்கு சொன்னார்கள் என்பதை கூற மறுத்து விடுவார்கள். " உனக்கு ஏம்ப்பா யார் இதை சொன்னாருன்னு. ஏதோ காதுல கேட்டதை உன்னிடம் பகிர்ந்து கொண்டேன்" என்பார். நாம் ஒருவேளை இந்த மனிதரிடம் இன்னொருவரை பற்றி குறைகள் சொல்லிவிட்டால், அந்த நல்ல மனிதர் நம்மை பற்றி அவர் அறிந்த அல்லது அவரது கண்ணோட்டத்தில் புரிந்து கொண்ட நம்முடைய சில குறைகளை மற்றவரிடத்தில் பரிமாறிக்கொள்வார். இப்படி செய்கையில் ஒவ்வொருவரும் மற்றவர்மீது கொண்டுள்ள பகை அல்லது வெறுப்பை காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் பொதுவாக செய்ய மாட்டார்கள். அடிப்படையிலேயே மனிதனின் மனம் எதிர்மறை விஷயங்களையே அதிகம் நாடுகிறது. அதன் விளைவுதான் ஒருவர் குறைகளை அடுத்தவரிடத்தில் கூறுதல் சகஜமாக இருக்கிறது. இதில் ஒரு வேடிக்கை என்ன என்றால் மற்றவர் குறையை ஒருவர் நம்மிடத்தில் கூறிவிட்டு " நான்தான் இதை உனக்கு சொன்னேன் என்று அவனிடம் சொல்லிவிட்டதே. ஏதோ என்னுடைய நெருங்கிய நண்பன் என்பதால் உன்னிடம் பகிர்ந்தேன். அவ்வளவு தான்" என்பார்கள்.
சிறுவயதிலேயே இந்த குறை கூறும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டதால் அதை பெரிய வயதில் விடுவது மிகவும் கடினம். ஆனால் அடிமனதில் மற்றவர் குறைகளை அடுத்தவரிடம் முறையிடிடக்கூடாது என்று திடமாக நினைத்து, விழிப்புணர்வுடன் கவனித்து வந்தால் நாம் இந்த குறை கூறும் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியும். குறை சொல்லாமல் இருக்க பழகிவிட்டால் நாம் மற்றவர்களிடம் கொண்டுள்ள பகை மற்றும் எதிர்மறை மனப்பான்மை மறைய துவங்கிவிடும். இதன் மூலம் நம் மனதில் உள்ள கசடுகள் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து மனது சுத்த படும். அதே சமயம், ஒருவரிடம் உள்ள நல்ல குணங்களை பழக்கங்களை தாராளமாக மற்றவரிடம் சொல்ல தயக்கம் கொள்ள கூடாது.

"மற்றவரின் நிறையை தண்டோரா போடு. குறைகளை எப்போதும் ஆறப்போடு "

ஆனந்த ராம்

பின் குறிப்பு: இந்த கட்டுரை எழுதிய என்னை பற்றி யார் என்னென்ன குறைகளை கண்டுபிடித்து எத்தனை பேரிடம் முறையிடுவாரோ , தெரியவில்லையே ஆண்டவா?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (20-Oct-21, 1:32 pm)
பார்வை : 146

மேலே