மசுகு-வின் - ஆட்டுமந்தைகளா நாம் HERD MENTALITY

[ம.சு.கு]வின் : ஆட்டுமந்தைகளா நாம் ? [HERD MENTALITY]


ஒரு கலைநிகழ்ச்சிக்கு செல்கின்றோம். அங்கு கல்யாணி ராகத்தில் நல்ல கீர்த்தனை ஒன்று பாடப்படுகிறது. நமக்கோ சங்கீத ஞானம் சுத்தமாய் கிடையாது. அந்த கீர்த்தனையும் தெலுங்கில் இருந்தபடியால் ஒன்றும் புரியவில்லை. ஆனால் முடிவில் கை தட்டுகிறோம்! ஏனென்றால் எல்லோரும் தட்டுகிறார்கள்!!


எண்ணிம நாணயச் (Cryptocurrency) சந்தை


கடந்த ஆண்டு சந்தையில் எண்ணிம நாணயம் [BITCOIN] என்ற ஒன்று புதிதாய் பெரும் வரவேற்பை பெற்றது. எல்லோரும் இந்த எண்ணிம நாணயத்தில் முதலீடு செய்கிறார்கள், அதுதான் இனி எதிர்காலம் என்று எண்ணி பலரும் அதை பின்தொடர, அதன் விலை பல லட்சங்களை கடந்து விற்பனையானது. எல்லாஅரசாங்கங்களும் அதை அங்கீகரிக்க மறுக்கவே, அதன் விலை பாதிக்கு கீழே குறைந்தது. பின்னர் சில காரணங்களுக்காக திரும்பவும் விலை கூடுகிறது.


இந்த வகை எண்ணிம நாணயங்களுக்கு இன்னும் இந்தியாவில் நாணய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. இருந்தும் எல்லோரும் வாங்குகிறார்கள் என்பதற்காக நம்மில் பல படித்த மேதாவிகள் கூட அதில் முதலீடு செய்து பல கோடிகளை இழந்துள்ளனர் [ஒரு சிலர் லாபம் அடைந்திருக்கலாம்]. அதுவொரு மிகப்பெரிய சூதாட்டம் என்பதை சொன்னாலும் புரிந்துகொள்வதில்லை.


இப்படி எண்ணிம நாணயம் மட்டும் அல்லாது, பங்குச் சந்தைகளிலும் ஏராளமாய் கூட்டத்தின் பின் சென்று தொலைத்தவர்கள் ஏராளம்.


பின்தொடருபவர்கள் சாதாரணமானவர்களே !


ஒரு சில இடங்களில் கூட்டத்தினரை பின்தொடர்வது சரியாக இருக்கலாம். உதாரணத்திற்கு, ஒரு புதிய ஊருக்குச் செல்கிறோம். அங்கு எந்த உணவகத்தில் கூட்டம் அதிகமாக இருக்கிறதோ, அங்கு சென்றால் உணவு நன்றாக இருக்க வாய்ப்பு அதிகம்! அதே சமயம், இந்த கூட்டத்தை பின்தொடரும் பழக்கம், நமக்கு பெரும்பாலும் வெற்றியைத் தராது. மாறாய் அது நம்மை மிகவும் சாதாரணமானவராக வைக்க மட்டுமே வழிவகை செய்யும்.


படித்தவைகள் மறந்துபோனால்


“ஆயிரம் பேர் சொல்கிறார்கள் என்பதற்காக எந்த ஒரு பொய்யும் உண்மையாகி விடாது”


என்பது மிகப் பழமையான வழக்குமொழி. நாமே பலமுறை கேட்டிருப்போம். ஆனால் தேவையான நேரத்தில் அதைமறந்துவிட்டு, கூட்டத்தின் பேச்சை கேட்டு அலசி ஆராயாமல் பல தருணங்களில் கூட்டத்தை பின் தொடர்து மாட்டிக்கொள்கிறோம்.


ஒருபுறம் இப்படி ஏன்? எதற்கு? என்ற கேள்வியே கேட்காமல் முன்னே செல்லும் கூட்டத்தை பின்தொடர்ந்து நேரத்தையும் பொருளையும் வீணடிக்கிறோம்!


மறுபுறம் சமுதாய அமைப்பில் நம்மை விட சற்று மேல்தட்டு மக்களைப் பார்த்து, அவர்களை போன்ற வாழ்க்கை முறையை அமைக்க விரும்பி தேவையற்ற பலவற்றை செய்யத் துவங்கி மாட்டிக்கொள்கிறோம்!


பகட்டின் பின்னால் சென்றால்?


உதாரணத்திற்கு, நம் பக்கத்து வீட்டு அக்கா ஒரு புதிய விலையுயர்ந்த கைபேசி வாங்கியது குறித்து நம்மிடம் பெறுமை பேசுவார்கள். அதைப்பார்த்து நமக்கு உள்ளூர சற்றே பொறாமை வரும். நாமும் அதைப்போல வாங்கியே தீரவேண்டும் என்ற ஆடம்பர மோகத்தினாலும், கவுரவத்திற்காகவும் பகட்டினாலும் உந்தப்பட்டு, வேறு அவசியத் தேவைகளுக்காக சேர்த்துவைத்த பணத்தைக் கொண்டு அந்த விலையுயர்ந்த கைபேசியை வாங்கிவிடுகிறோம். நமக்கு அதில் உள்ள பல செயலிகள் தேவையற்றவைகளாக இருந்தாலும் பெரும் விலை கொடுத்து ஆடம்பர மோகத்தில், பகட்டைத் தொடர்ந்து போய் மாட்டிக் கொள்கிறோம்.


எல்லோரும் மாறுபட்டவர்களே!


உலகில் உள்ள எல்லோருக்கும், நாம் மனித இனத்தவர் என்கின்ற ஒரே ஒரு நிலை மட்டும்தான் பொதுவானது. அந்த ஒரு பொதுத்தன்மையைக் கடந்து, மற்றவையெல்லாம் மனிதனுக்கு மனிதன் மாறுபட்டிருக்கிறது. எல்லாருக்கும் பொதுவான உணவு, உடை, இருப்பிடம் என்ற மூன்று அத்தியாவசிய தேவைகள் இருந்தாலும், அவற்றிலும் எண்ணற்ற வேறுபட்ட தேர்வுகளை ஒவ்வொருவரும் கொண்டிருக்கின்றனர். ஒருவர் உண்பது இன்னொருவருக்கு பிடிப்பதில்லை. இந்த அத்தியாவசிய மூன்று தேவைகளை கடந்து, மனிதனின் எண்ணற்ற குணாதிசயங்களும், உடல்-உணர்வுகள் சார்ந்த வெளிப்பாடுகளும் பலவாறு வேறுபடுகிறது. எப்படி உலகில் ஒருவருக்கு இருக்கும் கைரேகை இன்னொருவருக்கு இருப்பதில்லையோ, அதுபோல உலகில் எவரொருவர் குணங்களும், தேவைகளும் இன்னொருவருடன் ஒத்துப்போவதில்லை.


அன்பு, பாசம், மகிழ்ச்சி, வேதனை, அழுகை, காமம், கோபம், பொறாமை, என்று எத்தனையோ மனநிலைகள். இப்படி ஆயிரமாயிரம் வேறுபட்ட நிலைகளில் மனித இனம் பயணித்துக் கொண்டிருக்க, ஒருவர் எந்தச் செயலைச் செய்தாலும் மற்றவர்க்கு அது அப்படியே பொருந்துவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு. ஒருவரை அப்படியே பின்தொடர்வது நமக்கு பெரும்பாலும் ஏற்புடையதாக இருக்காது. ஏனெனில் நம்முடைய தேவைகளும் சூழ்நிலைகளும் அவர்களினின்று மாறுபட்டிருக்கும்.


உதாரணத்திற்கு; முதலீட்டாளர்களில், 25-வது வயதினர் தேர்வு செய்யும் முதலீட்டு முறையும், 60-வது வயதில் ஓய்வு பெற்றவர் தேர்வு செய்யவேண்டிய முதலீட்டு முறையும் மாறுபட்டிருக்க வேண்டும். அதை விடுத்து இருவரும் ஒரே மாதிரியான முதலீடுகளைச் செய்தால் இருவரில் ஒருவருக்கான பலன் பொருந்தாமலே இருக்கும்.


பின்தொடரும் சாபக்கேடு;


வெறுமனே கூட்டத்தினரை தொடர்வதென்பது, நமது தமிழினத்திற்கு காலங்காலமாய் இருந்துவரும் சாபக்கேடு. இந்த கண்மூடித்தனமான தொடர்கை மக்களின் ஆயிரமாயிரம் கோடி செல்வங்களை இழக்கச் செய்துள்ளது. அதிக வட்டி தருகிறோம் என்று கூறி 1990-களில் தொடங்கி இன்று வரை தேக்கு வளர்ப்புத் திட்டம், சங்கிலித்தொடர் திட்டம், காந்தப்படுக்கை திட்டம், ஈமு கோழி திட்டம் என்று எண்ணற்ற கவர்ச்சித் திட்டங்களால், ஏமாற்றுக்காரர்கள் இந்த மக்களின் ஆட்டுமந்தை குணத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளனர்.


நாம் என்ன ஆட்டு மந்தைகளா ?


ஆட்டுமந்தை


ஏதேனும் புதிய திட்டமோ, பணம் ஈட்டும் வழிமுறையோ தங்கள் செவிகளுக்கு வரும்போது, அதை சீக்கிரமாய் பின் தொடர்ந்து எல்லாரையும்விட விரைவாக அதிக செல்வம் சேர்த்துவிடலாம் என்று உங்களின் உள்ளூர ஆசை உங்களை திசைதிருப்ப முயர்ச்சித்தாலும், கட்டாயம் இந்த ‘ஆட்டுமந்தை’ என்ற சொல்லை நினைவில் வைத்தக் கொள்ளுங்கள்.


நீங்கள் ஆட்டுமந்தை இல்லை என்று எண்ணுவீர்களேயானால், எந்த ஒரு புதிய திட்டத்தையும் பின்தொடருவதற்கு முன், வழக்கமான ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை கேட்டு உங்களுக்குள் அலசி ஆராய்ந்து கொள்ளுங்கள்.


என் ஆலோசனைகள்;


ஆட்டுமந்தையுடன் சிக்காமல் நழுவிச் செல்ல என்னுடைய சிறு ஆலோசனைகள்;


இந்த சமுதாயமும், சுற்றமும் மறைமுகமாக நிர்பந்திக்க வாய்ப்பளிக்காதீர்கள்

உணர்வுகளுக்கு அடிபணிந்து விடாதீர்கள்

எல்லா செயல்கள், நிகழ்வுகளுக்கும் காரண-காரியங்களையும், நன்மை-தீமைகளையும் கண்டறியுங்கள்

நம்மை ஒதுக்கிவிடுவார்களோ என்ற பயத்தை ஒழியுங்கள்

உங்கள் இலட்சியங்களோடு ஒத்துப்போகிறதா என்று ஒப்பிடுங்கள்

உங்கள் பேராசையை சற்றே ஒதுக்கி நிதர்சனத்தை பாருங்கள்

இன்றைய காலச் சூழ்நிலை, நம்முடைய வரவு-செலவு, வழிநடத்துபவர் யார்? என எல்லா கோனங்களிலும் பார்த்து, இந்தத் திட்டம் நமக்குத் தேவைதானா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை தீர்க்கமாக சிந்தித்து முடிவு செய்யுங்கள்.


உங்கள் முடிவு


கூட்டத்தை எப்போது பின்தொடர வேண்டும்? எப்போது நம் பாதையை நாமே அமைக்க வேண்டும்! என்ற எண்ணத்தெளிவை பெறுவதில் தான் உங்கள் வெற்றி இருக்கிறது !


பின்தொடரும் சாதாரணமானவர்கள் மத்தியில்

புதிய பாதையமைப்பவர்கள் சாதிக்கிறார்கள்!

- [ம.சு.கு]
www[dot]palakkavalakkam[dot]com
palakkavalakkam[at]gmail[dot]கம

எழுதியவர் : ம.சு.கு (20-Oct-21, 10:10 pm)
சேர்த்தது : மசுகு
பார்வை : 85

மேலே