வாய்மை யுடையார் வழக்கு மூன்று – திரிகடுகம் 37

இன்னிசை வெண்பா

குறளையுள் நட்பளவு தோன்றும் உறலினிய
சால்பினிற் றோன்றுங் குடிமையும் - பால்போலுந்
தூய்மையுட் டோன்றும் பிரமாணம் இம்மூன்றும்
வாய்மை யுடையார் வழக்கு 37

- திரிகடுகம்

பொருளுரை:

பொருட்சுருக்கத்தினால் ஒருவன் நட்பின் எல்லை காணப்படும்;

பொருந்துதற்கு இனிய நற்குணச் செய்கைகளின் நிறைவில் உயர்குடிப் பிறப்பின் தன்மை விளங்கும்;

பால்போன்ற மனம் தூயனாந் தன்மையினால் நிலையினது அளவு விளங்கும்;

இந்த மூன்றும் உண்மை கூறும் பெரியோரது நெறியாம்;

கருத்துரை:

நட்பளவு, குடிமை, பிரமாணம் இம்மூன்றும் ஒரு தன்மையவாய் நல்லாரிடத்து நிற்கும்.

குறளையுள் நட்பளவு தோன்றும் என்பதற்கு (நட்பினர் இருவரைப் பிரிக்கும்படி ஒருவன் சொல்லும்) கோட்சொல்லில் அக்கோளைக் கேட்டோனது நட்பினது அளவு விளங்கும் என்றுங் கூறலாம்.

பாலில் பிரை முதலிய பொருள்களுள் ஒன்று கலக்கின், அது கெடுதல் போல, மனத்தூய்மையில் காமம் முதலிய குற்றம் மூன்றனுள் ஒன்று கலக்கினும் அத்தூய்மை கெடுமாதலால், பால் போலுந் தூய்மை எனப்பட்டது.

வாய்மையுடையார் வழக்கு - மெய்ந்நெறியுடையார் ஒழுங்கு எனலுமாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Oct-21, 9:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 55

மேலே