20 ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 20
ஆன்மீக வழியில் அமைதி......
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

நம்மில் பெரும்பாலும் மோட்சத்தின் மீது நாட்டம் கொள்ளாமல், உலகில் காணும் போகப்பொருள்களின் மீது பற்றுகொண்டு, அதன் மூலம் வரக்கூடிய இன்பம், மகிழ்ச்சி மற்றும் சுகம் இருந்தால் மட்டும் போதும் என்று நினைத்துக் கொள்வார்கள். இத்தகைய இன்பம் மகிழ்ச்சியானது நிரந்தரமாக இல்லையென்று அறிந்தாலும் அதன் மீது பற்றுகொண்டு அந்த சுகமான வாழ்வில் திருப்தி அடைந்து விடுகிறார்கள். நித்தியம் அநித்தியமான பொருள்களை அடைவதன் மூலம் அவைகளால் வரக்கூடிய இன்பம், மகிழ்ச்சி, மற்றும் இன்பதுன்பங்களின் மீது பற்றில்லாமல் இருப்பதுதான் வைராக்கியம் என்று வேதங்கள் இதிகாசங்கள் ஆன்மீக வழியில் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

வைராக்கியம் என்றால் உலகத்தில் காணும் பொருள்களின் மூலம் வரக்கூடிய ஆனந்தம் இன்பம் மகிழ்ச்சியில் பற்றின்மையாக இருப்பதுதான் ஆகும். அவ்வாறு நாம் உலகப்பொருள்களின் மீது தாமரையிலைத் தண்ணீர்போல் பற்றற்று இருந்தால் நம் வாழ்வில் நாம் விரும்பும் அமைதியைப் பெறலாம். அதேபோல் இந்த உலகத்தில் உள்ள பொருள்களை அடைவதன் மூலம் அந்தப் பொருள்களினால் வரக்கூடிய இன்பத்தின் மீது மட்டுமல்லாமல், துன்பங்களின் மீதும் பற்றில்லாமல் இருக்க வேண்டும். நமக்கு வரக்கூடிய துன்பங்களை பற்றி எப்போதும் மனதில் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கும்போது நாம் தேடும் விரும்பும் மனஅமைதி என்பது கிடைக்காது.

எனவே நாம் நமது கர்மபலன்களினால் வரக்கூடிய துன்பங்களை கண்டு கலங்கி விடக்கூடாது. நாம் துன்பம் துயரங்களின் மீது கவனம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும். மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் போன்று கவலையும் ஒரு அங்கம்தான் என்று எளிதாக கருதவேண்டும். அவ்வாறு துன்பம் துயரங்களைப் பற்றி நினைத்து நாம் வருந்திக்கொண்டிருக்காமல் இருக்கும்போது, அவைகள் நம்மை விட்டு நம்மை அறியாமல் நீங்கி விடும். அப்போது நாம் தேடும் மன அமைதி கிடைக்கும். அதற்கு நாம் ஆன்மீக வழியில் தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் சொர்க்கம் நரகம் மோட்சம் போன்ற மற்ற லோகங்களில் காணப்படும் பொருள்கள் மூலம் வரக்கூடிய இன்பத்தில் துன்பத்தில் பற்றில்லாமல் இருப்பது பற்றி தெளிவாக வேதங்கள் இதிகாசங்கள் தெளிவாகக் கூறுகிறது.

இராமாயணத்தில் வரும் ஜனக மன்னன் மிதிலை நாட்டில் நல்லாட்சி புரிந்து வந்தார். அவரது நல்லாட்சியைக் கண்டு அந்நாட்டு மக்களிடமிருந்து ஜனகருக்கு புகழ் ஆனந்தம் இன்பம் போன்றவை கிடைத்தது. அவ்வாறு புகழ், பெருமை போன்றவை கிடைத்தாலும் அவற்றின்மீது அவர் பற்றின்மையாக இருந்தார். அதுபோல் ஜனகர் ஆட்சியில் துன்பம் தரக்கூடிய நிகழ்வுகளைக் கண்டு அவர் மனம் கலங்கி விடாமல் அமைதியாக ஆட்சி புரிந்து வந்தார். அவர் தன் நாட்டு மக்கள் தன்னை மிகவும் புகழ்கிறார்கள் என்பதற்காக அவர் மகிழ்ச்சியில் மூழ்கவும் இல்லை. அதேபோன்று அவர் நாட்டில் தனக்கு ஏற்படும் துன்பம் தரக்கூடிய நிகழ்வுகளினால் மனக்கலக்கமடையவும் இல்லை. அவர் இன்பத்திலும் துன்பத்திலும் தாமரை இலைத்தண்ணீர் போன்று பற்றற்று ஜனகர் மிதிலையை அமைதியாக ஆட்சி புரிந்தார். அவர் ஒரு இல்லறஞானி போன்று திகழ்ந்தார் என்று இராமாயணம் என்னும் இதிகாசம் கூறுகிறது.

பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணன் ‘கடமைச் செய் பலனை எதிர்பாராதே’ என்று கூறியிருக்கிறார். ஆனால் நாம் எந்தவொரு கடமையைச் செய்யும்போது நமக்கு பலன் இல்லாமல் இருக்காது. எனவே நாம் கடமையைச் செய்யும்போது அதன்மூலம் நமக்கு தானாக வரக்கூடிய பலனை ஏற்றுக்கொள்ளாதே என்று பகவான் கூறவில்லை. கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்றுதான் கூறியிருக்கிறார். நாம் பலனை எதிர்பார்த்துச் செய்யும் கடமையில் செயல்பாடுகளில் மனதில் முழு ஈடுபாடு இருப்பதில்லை. உலகில் காணும் பொருள்களின் மீது பற்று வைத்துக் கொள்ளலாம், ஆனால் அந்தப் பற்று, மற்றும் நமது செயல்பாடுகளில் நாம் தாமரையிலைத் தண்ணீர்போல் பற்றற்று இருக்க வேண்டும். இதனைத்தான் பகவத்கீதையில் கிருஷ்ண பராமாத்மா ‘கடமைச் செய் பலனை எதிர்பாராதே’ என்று கூறியிருக்கிறார்.

நாம் ஞானிகள் சமாதி அடைந்த இடங்களுக்கு சென்று தியானம் செய்யும்போது மனதில் ஓரளவு அமைதி காணலாம். சமாதி என்றால் சமம்+ஆதி=சமாதி. சமாதி என்பது சமம் போன்ற பொருள்படும். சமாதியடைவது என்பது முடிவு பெறும் ஒரு நிலை என்று கூறுவதற்கு முடியாது. இறைவனால் நியமிக்கப்பட்ட காரியங்களை ஒரு காலவரவறைக்குள் ஆன்மீக வழியில் நடத்தி காட்டிய பிறகு மனஅமைதி அடைவதே முக்தி அடைவது ஆகும். ஆனால், அந்த ஞானியின் ஆற்றலும், அருளும் என்றும் இந்த உலகத்தில் நிலைத்திருக்கச் செய்துவிட்டு, இறைவனோடு ஞானியர்கள் இரண்டறக் கலந்து விடுகின்றனர். சமாதி நிலையில் இருப்பதும் யோகநெறியின் உச்சநிலை என்று திருமூலரால் உரைக்கப்படுகிறது.

“அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில்
நொந்தது நாய்நரி நுகரின் நுண்செரு
வந்துநாய் நரிக்குண வாகும்வை யகமே.

எண்ணிலா ஞானி உடலெரி தாவிடின்
அண்ணல் தன் கோவில் அழலிட்ட தாங்கொக்கும்
மண்ணில் மழைவீழா வையகம் பஞ்சமாம்
எண்ணரும் மன்னர் இழப்பா ரரசே.”….

ஞானியின் உடலை முறையாக புதைக்காமல், கேட்பாரற்று நிலத்தின் மேல் அழிந்து போகும்படி விட்டுவிட்டால், அந்த நாட்டில் மழையின்றி பெரும் பஞ்சம் ஏற்படும். அரசனும் தன்னோட பதவியை இழந்து விடுவான் என்றும் நாட்டுமக்களும் அத்துடன் அழிவர் என்று திருமூலர் தம்முடைய பாடல்கள் மூலம் விளக்கிக் கூறுகிறார். எனவே ஞானியரின் உடலை சமாதிக்கிரியை என்னும் முறையான சடங்கின்படி அடக்கம் செய்வதே சிறந்தது என்கிறார் திருமூலர்.

ஞானிகள் சமாதியான இடங்களில் அவர்களுடைய ஆன்மீக அதிர்வலைகள் (vibration)சூழ்ந்திருக்கும். எனவே நாம் ஞானிகள் சமாதியான இடங்களுக்கு சென்று தரிசனம் செய்து வரலாம். நாம் துன்பம் துயரங்களில் மனக்கஷ்டத்துடன் இருக்கும்போதும் ஞானிகள் சமாதியான இடங்களை தரிசனம் செய்து வரலாம். அவ்வாறு நாம் ஞானிகளின் சமாதிகளைத் தரிசனம் செய்வதன்மூலம் ஞானிகளின் அதிர்வலைகள் நம் மனதில் பரவி, நமது வாழ்வில், மனநிலையில் மாற்றம் பெற்று நாம் ஒருவிதமான மனஅமைதி பெறலாம்.

மோட்சத்தை அடைய வேண்டும் என்கின்ற விருப்பம் நம்மிடம் இருக்க வேண்டும். எந்த ஒரு செயலையும் விருப்பமுடன் செய்யும்போது, அது நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நாம் ஒரு செயலை விருப்பமில்லாமல் செய்யும்போது அது நமக்கு வேதனையாகக்கூட இருக்கும். ஆன்மீகத்தில் நமக்கு முதலில் விருப்பம் இருப்பதோடு முயற்சியும் அதில் முழுமையான ஈடுபாடும் இருக்க வேண்டும். ஒருவர் நாள்தோறும் சிறிது தூரம் நடந்து செல்வதில் விருப்பம் இருந்தால் அவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதனால் அவருடைய உள்ளமும் உடலும் ஆரோக்கியமாகவும் இருக்கும். அவர் நடப்பதற்கு சோம்பல்பட்டால், நடந்து செல்லாமல் இருந்தால் ஆரோக்கியமான உடலை இழந்து தன்னோட மகிழ்ச்சி ஆனந்தத்தினை இழக்க நேரிடும் என்பதை அவர் புரிந்து கொள்ளவேண்டும்.

விவேகம், வைராக்கியம், சமாதி, மோட்சம் இந்த நான்கு பண்புகளும் நமக்கு சிறிதளவு இருந்தாலும், நாம் அவற்றை அடைவதற்கு ஆன்மீக வழியில் முயற்சி செய்யவேண்டும். அவற்றை அடைந்தபின் நான்கு பண்புகளையும், நாம் ஆன்மிகத்தின் மூலம் நன்கு வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் வேதாந்தத்தில் கூறியுள்ளபடி அதில் முழுமையாக ஈடுபடவேண்டும். பொதுவாக அனைவரிடமும் விவேகம், வைராக்கியம், சமாதி மற்றும் மோட்சத்தில் விருப்பம் போன்ற நான்கு பண்புகளில் ஏதேனும் ஒன்று கொஞ்சமாவது நம்மிடம் இருக்கும். அவ்வாறு இந்த நான்கு பண்புகளில் ஒன்று சிறிதுகூட நம்மிடம் இல்லையெனில் ஆன்மீக நாட்டம் மற்றும் நாம் சாஸ்திரங்களில் வேதங்களில் கூறியுள்ளபடி ஆன்மீகத்தில் ஈடுபடவோ அதனை தொடரவோ முடியாது. அதாவது வைராக்கியம் விவேகம் போன்றவற்றில் சிறிதளவாவது நம்மிடம் இருக்கிறது. நம்மிடம் எவ்வளவுதான் பலஹீனங்கள் இருந்தாலும் இந்த நான்கு பண்புகளில் ஏதேனும் ஒன்று நம்மிடம் கொஞ்சமாவது இருக்கும்.

விவேகம், வைராக்கியம் சமாதி மோட்சம் இந்த நான்கு பண்புகளும் அனைவரிடமும் முழுமையாக இருக்காது. இருப்பினும் இவற்றில் ஏதேனும் ஒன்று சிறிது இருந்தாலும் அதன் மூலம் இந்த நான்கு பண்புகளையும் வளர்த்து கொள்ள முடியும். அவ்வாறு நாம் ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம், ஆன்மீக அன்பர்கள், சாதுக்களை அணுகுவதன் மூலம், சத்சங்கத்தில் ஈடுபடுவதன் மூலம் நான்கு பண்புகளையும் நாம் வளர்த்துக்கொள்ள முடியும். இவற்றின் மூலம் நாம் ஞானத்தினை அடைந்து கொள்வதோடு நாம் தேடும் விரும்பும் மனஅமைதியினை ஆன்மீக வழியில் அடையலாம்.

நமக்குப் பசி வந்து விட்டால் அதனை நீக்க வேண்டும் என்றால் நாம் சாப்பிட வேண்டும். பசி எடுக்கும்போது சாப்பிட்டு விட்டால் உடனே பசியானது நீங்கி விடும். ஆனால் நமக்கு வேண்டிய சாப்பாட்டை நாம் சமையல் மூலம் தயார் செய்வதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். நமக்கு சமையல் செய்வதற்கு ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும். அதேபோன்றுதான் ஆன்மீகத்தினை அறிந்து அதனை செயல்படுவதற்கு விடாமுயற்சியுடன் ஆரம்பத்தில் கஷ்டப்பட வேண்டும். உணவைச் சாப்பிடுவதால் வயிறு நிறைவதோடு நமக்கு ஒருவிதமான இன்பம் அப்போது கிடைக்கிறது. அதேபோல் நாம் ஆன்மீகம் குறித்த கருத்துகளை மீண்டும் மீண்டும் கேட்க, உணர,உணர ஆன்மீக நூல்களை தொடர்ந்து படிக்கும்போது தெளிவு பெற்று மனஅமைதி கிடைக்கும்.

விவேகம், வைராக்கியம், சமாதி, மோட்சம் இந்த நான்கு பண்புகளும் ஒவ்வொரு மனிதனிடமும் கொஞ்சமாவது இருப்பதினால்தான் ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்பட்டு நம்மையும் அறியாமல் தியானம் பக்தி சத்சங்கம் போன்றவற்றில் ஈடுபடுகிறோம். அந்த நான்கு பண்புகளையும் நாம் வளர்த்துக் கொள்வதற்கு ஆன்மீக வழியில் முயற்சியில் ஈடுபடவேண்டும். ஆன்மீகத்தில் முழுமையாக ஈடுபடுவதன் மூலம் நாம் தேடும் மனஅமைதி நிரந்தரமாகப் பெறுவதற்கு முடியும்.

நான்கு பண்புகளின் குணங்கள் என்ன என்பது பற்றி விளக்கத்தினை சிந்தித்துப்பாருங்கள். அதற்கு விடை கிடைக்கும். முதலில் விவேகம் பற்றி அதன் குணம் என்ன என்பது பற்றி சிந்தனை செய்வோம். விவேகம் என்றல் என்ன? விவேகத்தை அடைதல் எப்படி? விவேகத்தின் பலன்கள் எவை? நித்தியம், அநித்தியம் என்றால் என்ன? இவற்றிற்கெல்லாம் ஆன்மீகம் ஏதோவொரு வழியில் விளக்கம் அளிக்கிறது. நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு விவேகம் என்னும் அறிவு நமக்கு ஒரு கருவியாகப் பயன்படுகிறது.

நித்தியம் என்றால் மூன்று காலங்களில் அழியாத பொருள் எது என்றால் அது அழியாத நம் கண்ணுக்குத்தெரியாத உணரக்கூடியது பரம்பொருள் அல்லது பிரம்மை ஆகும். அழியாமல் இருப்பது ஒன்று ஆத்மா பிரம்மை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். உலகில் எந்தெந்தப்பொருள்கள் அழியும் பொருள்களோ அவையெல்லாம் பரம்பொருளுக்கு வேறாக இருக்கின்ற செயல்படுகின்ற பொருள்கள் ஆகும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். இந்த உலகத்தில் நமது வாழ்க்கையில் அழியாத பொருள்களைப் பார்த்திருப்போமா என்பதை சிந்தித்துப் பாருங்கள். அழியக்கூடியபொருள்கள் அனைத்தும் பரம்பொருளுக்கு வேறானது. அனைத்தும் அழியக்கூடியது நிலையற்றது ஆகும். இதனை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள உதவுகின்ற உன்னதக் கருவிதான் விவேகம் என்னும் அறிவு ஆகும்.

இந்த உலகத்தில் நாம் அழியாத எந்தப் பொருளையும் பார்க்க முடியாது. ஏன் எந்தக் கண்களால் ஒரு பொருளைப் பார்க்கிறமோ, அந்தக் கண்களே ஒரு காலத்தில் அழிந்து போகக்கூடியதுதான். நமது மனதில் அவ்வப்போது தோன்றும் நினைக்கக்கூடிய எண்ணங்களும் நாள்தோறும் அழியக்கூடியதுதான். அதேபோல் உலகில் எந்தப் பொருளும் மாறாமல் இருப்பதில்லை. ஒவ்வொரு பொருளும் வெவ்வேறு காலங்களில் அழிந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு பொருள் அழியும் காலம் வேண்டுமானால் மாறுபடலாம். ஆனால் அந்தப் பொருளும் ஒரு காலத்தில் அழிந்து விடும் என்பதை நாம் உணரவேண்டும். அப்படி அழியாத பொருள் ஒன்று உண்டு என்றால் அது பரம்பொருள் மட்டும்தான். அந்த பரம்பொருளை காணவேண்டும் என்றால் ஆன்மீக வழியில் செல்ல வேண்டும். அதுதான் அழியாத நமது கண்ணுக்குத்தெரியாத நம்மால் உணரக்கூடிய பரம்பொருள் ஆகும். அதன் மூலம் நாம் தேடும் விரும்பும் நிரந்தரமான மனஅமைதி கிடைக்கும். (அமைதி தொடரும்)

எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (28-Oct-21, 11:19 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 48

மேலே