நண்பனிடம் தோற்றுவிட்டேன் ஆழ்ந்த நட்பினாலே

பல்லவரத்தை தாண்டியுள்ள ஹஸ்தினாபூர் என்ற இடத்தில ராமு அதிகம் வீடுகள் இல்லாத இடத்தில சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்தான். 42 வருடங்களுக்கு முன்னால் அந்த இடத்திற்கு ஒரே ஒரே பேருந்து தான் பல்லவரத்திலிருந்து சென்று வந்தது. அதுவும் இரண்டு மணிக்கு ஒரு பேருந்து என்ற விகிதத்தில். மாலை ஐந்து மணிக்கு ராமு மாதவனுடன் பேருந்திலிருந்து இறங்கினான். பத்து நிமிட நடைக்கு பின் மாதவன் " ராமு, நீ ஒரு 15 நிமிடம் இங்கேயே இரு. நான் என் மாமாவை சென்று பார்த்து விட்டு வந்து விடுகிறேன்." "சொன்ன நேரத்திற்குள் வந்து விடு மாதவா. இங்கே வேடிக்கை பார்க்க ஆட்கள் கூட தென்படவில்லை" என்றான் ராமு .
மாதவன் அவன் மாமா வீட்டிலிருந்து வெளியே வரும்போது இரவு ஏழு மணி. அங்கிருந்து கடைசி பேருந்து இரவு ஏழரை மணிக்கு. ஆறரை மணிக்கு பின் ராமுவுக்கு இருப்பு கொள்ளவில்லை. அப்படி இப்படி என்று சாலையில் திரிந்த வண்ணன் இருந்தான். அப்படியே ஊர்ந்து மாதவன் மாமா வீட்டுக்கு முன் நின்று வீட்டிற்குள் கவனித்தான். அப்படி பார்க்கையில் அவனுடைய மாமாவின் பெண் ராமுவை கண்டுவிட்டாள் போலிருக்கிறது. வெளியே வந்தவுடன் ராமு கோபத்துடன் கேட்டான் " ஏன்டா, 15 நிமிடம் என்று சொல்லிவிட்டு ஏழு மணிக்குதான் சாவகாசமாய் வருகிறாய். நான் உன்னுடன் வந்து வெளியே காத்துக்கொண்டிருக்கிறேன் என்பதை மறந்து விட்டாயா"?
மாதவன் " சாரி டா ராமு, நான் எதிர்பார்க்காத விதமாக நேரமாகி விட்டது. நீ இந்த வீடு பக்கம் வந்து நின்றதை என் மாமா பொண்ணு சித்ரா கவனித்துவிட்டு என்னிடம் கேட்டாள் " உன்னுடன் யாரவது வந்திருக்கிறார்களா என்று." இதை கேட்டவுடன் ராமு இவ்வளவு நேரம் காத்து நின்றதை மறந்துவிட்டு " ஓ, அப்படியா, தூரத்திலிருந்து அவள் எப்படி இருக்கிறாள் என்று தெரியவில்லை. ஆனால் நல்ல உடல் வாகு என்று மட்டும் தெரிந்து கொண்டேன்" என்றான். மாதவன் "டேய், அதெல்லாம் ஒண்ணும் இல்லை. ஆனால் சித்ரா நல்ல அழகுதான். படிப்பிலும் ரொம்ப கெட்டிக்காரி" என்றான்.
இப்படி ஒரு தடவை இல்லை பத்து தடவை இல்லை 30 முறையாவது மாதவன் ராமுவை வெளியே காக்கவைத்து விட்டு அவன் உறவினரையோ அல்லது தெரிந்த நண்பரையோ அவர்களின் வீட்டில் சென்று பார்த்து வரும்போது மாதவனை உள்ளே அழைத்து செல்ல மாட்டான். எப்போதும் மாதவன் 'இதோ 10 நிமிடங்கள் 20 நிமிடங்களில் வந்து விடுகிறேன்' என்று சொல்லித்தான் செல்வான். ஒரு மணிக்கு பிறகு தான் வெளியே வருவான். ஒரு விதத்தில் இதற்கு ராமுவும் காரணம். எப்போதாவது மாதவன் ராமுவை தன்னுடன் அவர்கள் வீட்டிற்குள் வரச்சொல்வான். ஆனால் ராமுதான் " வேணாம் மாதவா, அங்கே எனக்கு பொழுது போகாது. அவர்களும் உன்னுடன் மனம் விட்டு பேசமாட்டார்கள் நான் இருந்தால்" என்று சொல்லிவிடுவான்.

இந்த இருவரும் பள்ளியிலிருந்தே அப்படி ஒரு நெருங்கிய நண்பர்கள். ராமு காலேஜில் பிகாம் படித்து கொண்டிருந்தான். மாதவன் வேலைக்கு தேடிக்கொண்டிருந்தான். ஒரு நாளைக்கு இருவரும் இரண்டு முறையாவது சந்தித்து கொள்வார்கள். இருவர் வீட்டிற்கும் இடையே 10 நிமிடம்தான் நடை. காலேஜ் சேருவதற்கு முன் இந்த இருவரும் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்கு ஒவ்வொரு செவ்வாயன்றும் காலை ஐந்தரை மணிக்கு புறப்பட்டு எலுமிச்சம்பழம் எடுத்து சென்று, தரிசனம் செய்துவிட்டு எட்டரை மணி அளவில் திரும்புவார்கள். இப்படி 52 வாரங்கள் ஒவ்வொரு செவ்வாயும் சென்று வந்துள்ளார்கள். இருவர் வீடுகளிலும் நன்கு அறிவார்கள் ராமுவும் மாதவனும் அவ்வளவு நெருங்கிய நண்பர்கள் என்று. ராமு வீட்டில் அவனது இளைய சகோதரி சொல்வாள்" ராமு, இந்த மாதவனை அதிகம் நம்பாதே. அவனுக்கு வேண்டிய வேலைகளை சாதித்துக்கொண்டு உன்னை கழட்டிவிட்டுடுவான்" என்று. அதை ராமு ஏற்க மாட்டான். மாறாக " அப்படி எல்லாம் இல்லை.அவன் என்னுடைய உயிர் நண்பன். எனக்காக எது வேண்டுமானாலும் செய்வான்" என்று பதில் கூறுவான்.
அப்போது ராமு இன்னமும் காலேஜ் சேரவில்லை. அந்நேரத்தில் ராமுவின் வீட்டில், ஸ்ரீதர் ராஜேஸ்வரி என்ற புது மண தம்பதியினர் வாடகைக்கு இருந்தனர். ஸ்ரீதருக்கு ராமு என்றல் பிடிக்கும். ராமு கொள்கை உள்ளவன், மறைக்காமல் உண்மையை பேசுபவன் மேலும் அவனுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாக என்பதால். ஒரு முறை ஸ்ரீதர் அவர் வேலை பார்க்கும் தொழிற்சாலையில் ராமுவுக்கு ஒரு வேலை வாங்கி தருவதாகவும் அதற்கு ராமு சம்மதமா என்றும் கேட்டபோது " சார், நன்றி. ஆனால் நான் பட்ட படிப்பு படித்து விட்டு பின்னர் தான் வேலை சேரலாம் என்று இருக்கிறேன்" என்று சொன்னான். ஸ்ரீதர் " ராமு நீ வேலை செய்துகொண்டே தொலைதூர கல்வி (கரெஸ்பாண்டன்ஸ் கோர்ஸ் ) மூலம் பட்டப்படிப்பு படிக்கலாமே" என்றார். அதே நேரத்தில் மாதவன் வேலைக்காக மிகவும் தேடி கொண்டிருந்தான். இதை நினைவில் கொண்டு ராமு " சார், நான் ஒரு விண்ணப்பம் வைக்கிறேன் உங்களிடம்" என்றபோது " சொல் ராமு" என்றார் ஸ்ரீதர். " என் நண்பன் மாதவன் வேலைக்காக மிகவும் அலைந்து கொண்டிருக்கிறான். அவன் வீட்டில் பணமுடை அதிகமாய் இருப்பதால். எனக்கு தருவதாக இருக்கும் அந்த வேலையை மாதவனுக்கு வாங்கி கொடுக்க முடியுமா" என்றான்.
அதற்கு ஸ்ரீதர் " அவனை பற்றி எனக்கு தெரியும். ரொம்ப அளக்க அளக்க பேசுவான். ஆனால் சொன்ன வார்த்தையை காப்பாற்ற மாட்டான். நான் உனக்குத்தான் வேலை வாங்கி தருகிறேன் என்றேன் தவிர வேறு யாருக்கும் இல்லை" என்றார்.

ராமுவுக்கு வருத்தமாகிவிட்டது. அதற்கு ஏற்றாற்போல் அடுத்த நாள் மாதவன் ராமுவிடம் அவன் வீடு பொருளாதார பிரச்சினைகளை சொல்லி மிகவும் வருந்தினான். இதை கேட்டு விட்டு ராமுவால் சும்மா இருக்கமுடியவில்லை. அன்று இரவே ஸ்ரீதரிடம் " சார், தப்பாக நினைக்காதீர்கள். தயவு செய்து எப்படியாவது மாதவனுக்கு அந்த வேலையை வாங்கி கொடுங்கள். அவன் அக்கா கல்யாணத்திற்கு நிறைய கடன் வாங்கியுள்ளார்களாம். அவன் அப்பா தபால் தந்தி அலுவலகத்தில் ஒரு குமாஸ்தா தான். அதிக சம்பளம் இல்லை. அவன் அண்ணன் இரண்டாம் வருடம் பிஎஸ்சி படித்து கொண்டிருக்கிறான். இடையில் விட முடியாது. கொஞ்சம் நீங்க மனசு வச்சா அவன் குடும்பத்துக்கு எவ்வளவோ உபகாரமாக இருக்கும்." என்றபோது ஸ்ரீதருக்கு மறுக்க முடியவில்லை. " ராமு உனக்காகத்தான் நான் இந்த வேலையை அவனுக்கு வாங்கி தரப்போகிறேன்" என்றார். ராமு மிகவும் மகிழ்ந்து அவருக்கு நன்றி சொல்லி பாராட்டினான். வேலை கிடைத்தது. மாதவன் இரன்டு ஷிப்ட்களில் வேலை செய்ய வேண்டி வந்தது. ஸ்டோர்ஸ் வளாகத்தில் அவனுக்கு வேலை.

1976 ஆம் வருடத்தில் மாதவனுக்கு 700 ரூபாய் மாத சம்பளம் கிடைத்தது. மாதவனும் அவன் தாயும் ராமுவுக்கு மிக்க நன்றி தெரிவித்தார்கள். கிட்ட தட்ட மூன்று வருடங்கள் வேலை செய்து , இடையில் தொலைதூர கல்வி வாயிலாக மாதவன் பிகாம் பட்டம் பெற்றான். பின்னர் வேலைசெய்துகொண்டே கரெஸ்பாண்டென்ஸ் கோர்ஸ் மூலமாக மனித வளாகம்( HR ) பாடத்தை படித்து டிப்ளமோ வாங்கினான். இதன் மூலம் அவனுக்கு 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் HR அலுவலகத்தில் வேலை கிடைத்ததால் ஸ்ரீதர் வாங்கி கொடுத்த வேலையை விட்டு விட்டான். அதன் பிறகு HR இல் PG செய்துவிட்டு சுயமாக HR கன்சல்டன்ட் தொழில் துவங்கினான். உழைப்பு அதிருஷ்டம் இரண்டும் கைசேர்ந்ததில் அவன் தொழில் நன்கு பெருகி வளர்ந்தது. இரண்டே வருடங்களில் சென்னை மாம்பலம் பகுதியில் சொந்த வீடு ஒன்றை வாங்கி அதிலே அவன் HR கம்பெனியை நிர்வகிக்க ஆரம்பித்தான்.

இதனிடையில் ராமு பிகாம் முடித்துவிட்டு ஒருவருடம் அலைந்த பின் 1980 ஆம் ஆண்டு ஒரு நிர்வாகத்தில் ட்ரட் அப்பேரென்டிஸ் ( trade apprentice ) ஆக Rs 300 மாத ஊதியத்தில் சேர்ந்தான். பின்னர் ஒரு வருடம் கழித்து கம்பெனி ட்ரைனி (trainee ) ஆக Rs.400 தொகை பெற்று அதே நிர்வாகத்தில் வேலை தொடர்ந்தான். 1984 ஆண்டு துவக்கத்தில் அவன் மாத சம்பளம் Rs 1000 . அதே நேரத்தில் அவன் நண்பன் மாதவன் மாதம் ஒன்றுக்கு சராசரியாக Rs 10000 சம்பாதித்து கொண்டிருந்தான். வாழ்க்கையில் விதியின் வேலை எப்படி எல்லாம் இருக்கிறது என்பதற்கு இது உதாரணம். ராமு வேலை செய்த நிர்வாகத்தில் தொழிலாளர் கிளர்ச்சி தொடங்கியது. ராமு வேலை செய்துவந்த நிர்வாகம் தொழிற்சாலையை மூடிவிட்டது. இதனால் ராமு வேறு இடங்களுக்கு விண்ணப்பித்தான். வட இந்தியாவில் தொலை தூரத்தில் அரசு பொதுநல நிர்வாகம் ஒன்றில் ராமுவுக்கு வேலை கிடைத்து அவன் சென்னையை விட்டு வெளியேறினான். 8 வருடங்கள் வட இந்தியாவில் வேலை செய்துவிட்டு பின்னர் அதே நிர்வாகத்தில் ஹைதராபாத் கிளையில் 1992 ஆம் ஆண்டு சேர்ந்து மீதி இருந்த ஊழிய நாட்களை அங்கேயே கழித்தான். இப்போது கூட குடும்பத்துடன் அங்குதான் வசித்து வருகிறான்.

ராமுவுக்கு 1989 ஆண்டு திருமணம் ஆனபோது மாதவன் நேரில் சென்று வாழ்த்தினான். ஆனாலும் ராமு மாதவன் இடையிலான நட்பு கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது. நேரில் காணவில்லை என்றால் நினைவிலும் இருக்காது என்பதை போல் இருவரும் அவரவர் வேளைகளில் மூழ்கி போனார்கள். ராமு எப்போதாவது எழுதும் கடிதத்திற்கு உடனடியாக மாதவன் பதில் கொடுக்க மாட்டான். காரணம் வேலை நிமித்தம் காரணமாக என்பான். மாதவனின் இந்த போக்கை ராமு விரும்பவில்லை. இருப்பினும் வருடம் ஓரிரு முறை சென்னை சென்று வரும்போது மாதவனை ஒரு முறை சந்தித்து வந்தான். ஆனாலும் மாதவனின் பழகும் விதம் ராமுவுக்கு பிடிக்கவில்லை. எப்போதும் தன்னுடைய HR சாதனைகள் பற்றித்தான் மாதவன் பேசி வந்தான். இதற்கிடையில் ராமுவின் தம்பி கண்ணன் வேலை இழந்து தவித்து கொண்டிருந்தான். ராமுவின் குடும்பம் பெரிய குடும்பம். தவிர அவனது தந்தை அவன் இரண்டாம் வருடம் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது காலமாகிவிட்டார். இதனால் ராமுவின் குடும்பத்திலும் பொருளாதார பிரச்சினைகள் அதிகம் வர தொடங்கியது.

மாதவனின் முக்கிய வேலையே அவனுக்கு வேலைக்காக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தகுந்த நிர்வாகத்தில் தகுந்த வேலை வாங்கி தருவது தான். ராமு மாதவனிடம் தன் தம்பிக்கு ஏதேனும் உகந்த வேலை பார்த்து தருமாறு சொன்னான். மாதவனும் நிச்சயமாக செய்து கொடுக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தான். ஆனால் மாதவன் கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை. கண்ணன் குமாஸ்தா வேலைக்கு தான் தகுந்தவன், ஆனால் தானோ அதிகாரிகள் நிலை வேலைகளுக்கு மட்டுமே தகுந்த ஆட்களை தேர்வு செய்வதாக கூறிவிட்டு அதன் பின் அதை பற்றி ஒன்றுமே கூறாமல் விட்டுவிட்டான். மாதவனின் இந்த அசட்டை ராமுவுக்கு மிகுந்த வருத்தத்தையும் கோபத்தையும் விளைவித்தது. ஏற்கெனவே அதிக உணர்ச்சிவசப்படும் குணம் படைத்த ராமு 17 வருடங்களுக்கு முன்னால் நடந்த தனக்கு வந்த வேலை வாய்ப்பை மாதவனுக்கு கொடுத்த சம்பவத்தை நினைத்து பார்த்தான். அவனை இரண்டு காரணங்கள் மிகவும் துன்புறுத்தியது. ஒன்று தருமம் தலை காக்கும் என்ற வார்த்தை தனக்கு பலிக்காமல் போய்விட்டது என்ற எண்ணம். இன்னொன்று நான் தான் அவனுடைய உயிர் நண்பன் என்று சொல்லி அலைந்த மாதவன், தான் தம்பிக்கு ஒரு வேலை பார்த்து வைக்க முடியும் என்ற போதும், கண்டுகொள்ளாமல் விட்டது. இந்த சம்பவத்தின் பிறகு ராமு மாதவனை ஒதுக்கலானான்.
இடையில் மாதவன் சென்னையில் கல்யாணம் முடித்தான். இளவயதில் தான் ஆருயிர் நண்பனாக மாதவன் இருந்த ஒரே காரணத்தால் வடஇந்திய ஹரித்வாலிருந்து, முக்கிய அலுவலக பணிகளை கூட பொருட்படுத்தாமல் அவன் திருமணத்திற்கு சென்னை வந்து சென்றான். ராமு அலுவலகம் சென்றவுடன் அவனுடைய உயர் அதிகாரி அவனை மிகவும் கடிந்து கொண்டார், முக்கியமான நேரத்தில் வேலைகளை முடிக்காமல் சென்னை சென்றதற்காக. நண்பனுக்காக அதையும் ராமு பொறுத்துக்கொண்டான்.

அதன் பிறகு ராமு மீண்டும் சென்னை வர முயற்சி செய்யும்போது மாதவன் அவனுக்கு இரண்டு கம்பனிகளிலிருந்து நேர்முக தேர்வுக்கு ஏற்பாடு செய்தான். நிச்சயமாக ஒரு கம்பெனியில் ராமுவுக்கு வேலை கிடைத்து விடும் என்றும் உறுதி கூறினான். ஆனால் இரண்டு நிர்வாகங்களிலும் ராமுவுக்கு வேலை கிடைக்கவில்லை. தான் தம்பிக்கும் செய்யவில்லை தனக்கும் செய்யவில்லை என்ற எண்ணம் ராமுவுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

மாதவன் திருமணத்திற்கு பின் ஓரிருமுறை ராமு அவர்கள் வீட்டிற்கு சென்றான். மாதவன் மனைவி உபசரிப்பை கண்டு ராமு திடுக்கிட்டான். பெரிய வீடு, கார் என்று இருந்தும் அவளுக்கு கொடுக்கும் மனமில்லாமல் இருப்பது ராமுவுக்கு கோபத்தையும் எரிச்சலையும் உண்டு பண்ணியது. இதன் பிறகு ஓரிருமுறை மாதவன் அவன் தொழில் விஷயமாக ஹைராபாத் வந்து சென்றான், விமானத்தில் தான். ஒருமுறை தன்னிடம் பணம் பற்றாக்குறை என்று சொல்லிவிட்டு ராமுவிடம் Rs 1500 வாங்கி சென்றான் . கடைசிவரை அதை அவன் ராமுவுக்கு திருப்பி தரவில்லை. ராமு அவனுக்கு பணம் கொடுத்ததை பெரிதாகவே நினைக்கவில்லை. ஆனால் இவ்வளவு பணம் சம்பாதித்தும் பணத்தை திருப்பி கொடுக்கும் எண்ணம் மாதவனுக்கு ஏன் இல்லை என்ற ஆதங்கம் தான் அவனுக்கு இருந்தது.

1995 ஆண்டு தான் மாதவனும் ராமுவும் சந்தித்துக்கொண்ட கடைசி வருடம். அதன் பிறகு இருவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்தது. மாதவன் அவ்வப்போது ஏதாவது தொலை கட்சி நிகழ்ச்சியில் வந்து கொண்டிருந்தான். அப்போதெல்லாம் அவன் ராமுவுக்கு செல் போன் மூலம் தெரிவித்து அவனது நிகழ்ச்சியை பார்க்க சொல்வான். ஆனால் இன்று வரை ராமு மாதவனின் ஒரு தொலை கட்சி நிகழ்ச்சியையும் பார்க்கவில்லை. இதையும் சொல்ல வேண்டும். மூன்று வருடங்களுக்கு முன் மாதவன் காலமடைந்தான். செய்தி கேட்டு ராமு மாதவனின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி கொண்டான்.

ராமுவுக்கு வாழ்க்கையில் ஆருயிர் நண்பர்கள் என்று இருந்தவர்கள் இருவர். ஒருவன் மாதவன். இன்னொருவன் ஹரிஹரன். பின் வந்த காலத்தில் இவனும் ராமுவிடம் கடனாக பெரிய தொகையை பெற்றுக்கொண்டு 15 வருடங்களாகியும் கொடுக்காமல் இருக்கிறான். ஆரம்ப காலத்தில் தான் கூடிய விரைவில் வாங்கிய பணத்தை கொடுத்துவிடுவேன் என்றெல்லாம் வாக்களித்து விட்டு, சம்பாதித்த பணத்தின் பெரும்பகுதியை மது, மாது, சூதாட்டம் என்பதில் செலவழித்து, கடன் மேல் கடன் வாங்கி தற்போது தனக்கென்று சேமிப்பு எதுவும் இல்லாமல் பிள்ளையின் தயவில் இழிவான வாழ்வை வாழ்ந்து வருகிறான். ராமு ஹரிஹரனை இப்போது மதிப்பதே இல்லை. அவன் பாதை மாறி போகும்போது பலமுறை ராமு அவனை எச்சரித்து அறிவுரை கூறினான். ஆனால் ஹரிஹரன் அவன் பேச்சை ஒரு காதில் வாங்கி இன்னொரு கதுவழியாக விட்டுவிடுவான். இந்த இரண்டு நண்பர்களை தவிர ஒன்றிரண்டு நண்பர்கள் இருந்தனர் ராமுவுக்கு. ஆனால் காலப்போக்கில் அவர்களும் காற்று திசை மாறி செல்வது போல் சென்று விட்டார்கள். இன்று வரை ராமுவுக்கு கிடைக்காத யோகம் 'உயிர் நண்பன்' யோகம். ஏன், அவனுக்கு நண்பர்களே மிகவும் குறைவுதான். ராமு நினைப்பான் " நண்பர்கள் எனக்கு நிரந்தரமாக அமையாதது என் துர்பாக்கியம்' என்று.

கடவுள் ராமுவுக்கு அளித்த மூன்று பெரும் வரன்கள். ஒன்று லட்சணமான, அன்பான, நேர்மையான, ஒழுக்கமான, புனிதமான, அருமையாக அறுசுவை சமையல் செய்யும் மனைவி கிடைக்க பெற்றது. இன்னொன்று அவன் நிர்வாகத்தில் வேலை செய்தபோதும் சரியாக செய்யாத போதும், ஒரு வேலையும் செய்யாத போதும் ஊதியஒய்வு பெறும்வரை அவனுக்கு கைநிறைய சம்பளம் கிடைத்த வண்ணம் இருந்தது. மூன்றாவது அவனது நகைச்சுவை உணர்வு.

மேற்கூறியவற்றால் ஒய்வு பெற்ற பின்னும் அவன் மனைவியுடன் பொதுவாக ஆரோகியதுடன், அவளது சமையலை ரசித்து சாப்பிட்டு, ஏதோ அவனால் முடியும் எழுத்து படைப்புக்களை, கவிதை, கட்டுரை, நகைச்சுவை , சிறுகதை என்ற பகுதிகளில் கொடுத்து மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வருகிறான். ராமுவுக்கு இயல்பாகவே கருணை மற்றும் கொடுக்கும் கொடை உள்ளம். வறுமை என்று இவனிடம் செல்பவருக்கு ஏதாவது ஒரு உதவி செய்யாமல் இவன் இருக்கமாட்டான். தற்போது இவர்களது இரு மகன்களும் அவரவர்களே உழைத்து நன்றாக பிழைத்து வருகிறார்கள். இனி அவர்களது வாழ்வு அவர்கள் கையில்.

இவ்வளவு இருப்பினும் ராமுவின் மனதில் தான் இளமையில் சரியாக வாழாமல் இருந்து விட்டோம், உயர்ந்த படிப்பு படித்தும் அதை சரியான வகையில் உபயோகிக்க தவறி விட்டோம் என்ற ஆதங்கம் மற்றும் ஏக்கம். எந்த ஒரு மனிதனுக்குத்தான் வருங்காலத்தில் இதை போன்ற சிந்தனைகள் இருக்காது? பாடும் கலை ஓரளவுக்கு ராமுவுக்கு உண்டு. ஆனால் அவன் கனவு கண்ட அளவு அவன் பாடுதலில் வெற்றி பெற முடியவில்லை. எழுத்தில் திடீரென்று நாட்டம் கொண்டு இரண்டு புத்தகங்கள் கூட சுயமாக வெளியிட்டான். ஆனால் இதுவரை பெரிய போணி ஒன்றும் ஆகவில்லை. இருப்பினும் இன்னும் சில புத்தகங்கள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு இருக்கிறது. இவ்வளவு இருந்தும் ராமுவிடம் இருந்த பெரிய பலவீனம் அவனது பயம் மற்றும் கவலை. மற்றவர்களுக்காக, சமுதாயத்திற்காக பயந்து பயந்தே அவன் இதுவரை வாழ்ந்துவிட்டான். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கவலை கொள்வான் . ஆனால் அவனது குறிப்பிடும்படியான மன மாறுதல் காரணமாக ராமு இப்போது மிகவும் துணிவும் தைரியமும் கொண்டு வாழ தொடங்கிவிட்டான். இதனால் கவலைகளில் அவன் பாதிப்பு அடைவதில்லை. இந்த தருணத்தில் அருமையான கருது செறிவு மிக்க பழைய திரைப்பட பாடல் வரிகளை கீழே நினைவு கூற விழைகிறேன்:

"அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா"

இந்த பாடலை நான் 55 வருடங்களுக்கு முன்பிருந்தே கேட்டு ரசித்து பாடிவந்தாலும், பாடலின் வரிகளை உண்மையாகவே வாழ்க்கையில் கடைபிடிப்பது கடந்த ஒரு வருட காலமாகத்தான். இப்படி கூறவே ஒருவருக்கு தைரியம் தேவை தானே?

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (27-Oct-21, 10:04 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 187

மேலே