வானவரும் அன்னவனைச் சூழ்வார் தொடர்ந்து தொழுது - சிறப்பு, தருமதீபிகை 933

நேரிசை வெண்பா

பிறந்த பிறப்பால் பிறவாத இன்பம்
பிறந்து வரவே பெருகிச் - சிறந்தொருவன்
வாழ்வானே ஆமாயின் வானவரும் அன்னவனைச்
சூழ்வார் தொடர்ந்து தொழுது. 933

- சிறப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மனிதன் எனப் பிறந்த ஒருவன் நிலையான புனித இன்பம் நிறைந்து வருமாறு வாழ்ந்து வர வேண்டும்; அவ்வாறு வரின் அவனைத் தேவரும் உவந்து ஆவலோடு சூழ்ந்து வருவார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அருமையுடையது என மனிதப் பிறவி பெருமை அடைந்துள்ளது; அத்தகைய அரியதை மருவி வந்துள்ளவன் அதற்குரிய பயனை அடைவது பெரிய கடமையாய் அமைந்தது. அரிய நல்ல கருவியை உரிமையாய்ப் பெற்றவன் அதனால் பெறவுரியதை விரைந்து பெறவில்லையானால் இழிந்த மடையனாகி அவனுடைய வாழ்வு பழிபடிந்து இழிவடைந்து பாழாகின்றது.

அறிவுடைய பிறப்பை அடைந்தவன் தன் ஆன்மா ஏதாவது சிறிது மேன்மை அடையும்படி செய்து கொண்டபோது தான் சிறந்தவன் ஆகிறான்; பிறந்த பிறப்பும் ஓரளவு உயர்ந்து திகழ்கிறது. உயிர்க்கு ஊதியம் புரியாதவன் துயர்க்கு வழி கோலித் தொலைந்து போதலால் அவன் தோற்றம் பழிக்கு இடமாய்ப் பரிதாப நிலையில் இழிந்து முடிகின்றது.

எந்தப் பிறப்பு எய்தினாலும் எவ்வழியும் துன்பங்களே நிறைந்துள்ளமையால் யாண்டும் பிறவாமையே இன்பம் என வந்தது. உள்ளம் தெளிந்த ஞானிகள் பிறப்பின் அல்லல்களைக் குறிப்போடு உணர்ந்து பிறவாத சிறப்பு நிலையைப் பெற விரைகின்றார். வெய்ய துயர்களையறிவது மெய்யறிவாகிறது.

யானை முதலா எறும்பீ றாய
ஊனமில் யோனியி னுள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும் 15

இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களின் ஊறலர் பிழைத்தும் 20

ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும் 25

ஆண்டுகள் தோறும் அடைந்தஅக் காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகற் பசிநிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில் 30

ஒருங்கிய சாயல் நெருங்கியுள் மதர்த்துக்
கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்து
எய்த்திடை வருந்த எழுந்து புடைபரந்து
ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்தங்
கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும் 35

பித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுள்
மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும்
கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும்
செல்வ மென்னும் அல்லலிற் பிழைத்தும்
நல்குர வென்னுந் தொல்விடம் பிழைத்தும் 40

புல்வரம் பாய பலதுறைப் பிழைத்தும்
தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி.. 04

- போற்றித் திருவகவல், திருவாசகம்

யானை முதல் எறும்பு ஈறாகவுள்ள பிராணி வகைகளிலிருந்து தப்பிப் பிழைத்து அரிய மனிதப் பிறவியை அடைந்தேன்; தாயின் கருப்பையில் பத்து மாதங்கள் பதைத்துக் கிடந்து உற்ற துயரங்களை எல்லாம் கடந்து உலகில் பிறந்தேன்; பிறந்த பின்பு அடர்ந்து தொடர்ந்த துன்பங்களையும் கடந்து வளர்ந்து வாலிபம் அடைந்தேன்; காமத் தீயால் வெந்து நொந்தேன்; கல்விச் செருக்கு, செல்வத்திமிர், அதிகாரநோய், ஆசைப் பேய் முதலிய பொல்லாத அல்லல்கள் யாவும் அரிதில் நீங்கினேன்; எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் உளன் என்னும் நல்ல உணர்வு உள்ளே சிறிது ஓங்கியது; அவ்வாறு ஓங்கியும் உலகப் புலைகள் ஒழிந்து மேலே நிலையாய்ப் போக முடியாமல் நெஞ்சம் மயங்கி நிற்கின்றேன் ஈசா; என்று மாணிக்கவாசகர் இறைவனை நோக்கி உருகி மறுகியிருக்கிறார், அவர் கருதி மொழிந்துள்ள உறுதிநலங்கள் யாவும் ஓர்ந்து சிந்திக்கத்தக்கன.

பிறவித் துயர்களின் நிலைகளையும், அதிலிருந்து தப்பி உய்வாரது அருமையையும், அவ்வாறு உய்ந்து போகின்ற மகான்களுடைய மகிமையையும் இங்கே நாம் ஒருங்கே உணர்ந்து கொள்கிறோம்.

உண்மை தெளிந்தவர் உயிர்க்கு உறுதி நலனை விழைந்து உயர்ந்து உய்தி பெறுகின்றார்; தெளியாதவர் உலக போகங்களில் இழிந்து களிமிகுந்து உழல்கின்றார். மனம் மருண்டு மதியிருண்டு மாய மோகங்களில் ஆழ்ந்து, மையல் மயக்கங்களில் வீழ்ந்து வெய்ய துயரங்களையே வைய மாந்தர் விளைத்து வருகின்றனர். அவ்வாறு அவல நிலையில் இழிந்து கிடந்தும் கவலையின்றி வாழ்வது மாயா வினோதமாய் மருவியுள்ளது; ஞான விழி தெளிவாயில்லாமையால் ஈன வழியில் இளிவாய் இழிந்து போகின்றார். மெய்யுணர்வே உய்யும் வழியை அருளுகிறது.

வைய மையல் நீங்கி உய்தி பெறுவது மிகவும் அரிய செயல்; அரிய பெரிய அந்தப் பேறு பெறுபவரை வானவரும் வியந்து நோக்கி வாழ்த்தி மகிழ்கின்றார். மேலான பிறவியால் பெறவுரிய மேன்மையான பலன் மீண்டும் பிறவாமையே; அதனை ஆன்ம ஞானிகள் எளிதே இனிது அடைந்து கொள்ளுகின்றனர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Nov-21, 12:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

மேலே