மரணம் வருவதறிந்தும் அரணமொன்றும் தேடாமல் வீணே திரிந்து கழிவார் - இறப்பு, தருமதீபிகை 927

நேரிசை வெண்பா

கரணங்கள் யாவும் கலங்கக் கடுகி
மரணம் வருவ தறிந்தும் - அரணமொன்றும்
தேடாமல் வீணே திரிந்து கழிவார்போல்
மூடர் எவரே முதல். 927

- இறப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அந்தக் கரணங்கள் யாவும் கலங்கி நடுங்கும்படியான மரணம் வருவதை அறிந்தும் தம் உயிர்க்கு யாதொரு உறுதி நலனையும் கருதிக் கொள்ளாமல் வீணே திரிந்து கழிவார் போல் முழுமூடர் வேறு யாரும் யாண்டும் இலர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பிறவிப் பயனைப் பெறுபவன் பெரிய மகான் ஆகிறான்; பெறாதவன் பேதையாய் இழிவுறுகிறான். உற்ற உடம்பின் உயர்வையும், உரிய வாழ்வின் குறிக்கோளையும், சாவின் துயரையும், செத்தபின் நேரும் அல்லல்களையும் உய்த்துணராமையால் ஊனமாயிழிந்து மானிடர் ஒழிந்து போகின்றார். துயரப் பிறப்பையும் துன்ப வாழ்வையும் இன்பமாயெண்ணி இறுமாந்து களித்து ஈனமாயழிந்து போவதே சிறுமாந்தரின் செயலாய் மயலோடி நிற்கிறது. வந்த காரியத்தை உணராமல் வாளா மாண்டு கழிவதே மீளாத மாய மோகமாய் யாண்டும் நீண்டு வருதலால் மனிதருடைய நிலைகள் மையல் வெறிகளாய் மருவின.

பிறப்பும் இறப்பும் துயரங்களோடு தொடர்ந்து வந்துள்ளன. பெற்ற தாய்க்குப் பிரசவ வேதனையை விளைத்துப் பெரிய அல்லல்களுடன் குழந்தை பிறக்கிறது. வாழ்விலும் எல்லையில்லாத துன்பங்களை எய்தி யுழலுகின்றது; சாவிலும் கருவி கரணங்கள் எல்லாம் கலங்கி நடுங்க மயங்கி முடிகிறது. உடலை எடுத்து வந்த போதும் அதனை விடுத்து ஓடும் போதும் துக்கங்களே பக்கம் எங்கும் தொடர்ந்திருத்தலால் பிறப்பும் இருப்பும் இறப்பும் கொடிய துன்பங்கள் என முடிவாய் அஞ்ச நேர்ந்தன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்(டு)
ஐம்மேல் உந்தி
அலமந்த போதாக அஞ்சேலென் றருள்செய்வான்.
அமருங் கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர
மழையென் றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந்
திருவை யாறே 1 - 130 திருவையாறு, முதலாம் திருமுறை, சம்பந்தர் தேவாரம்

சாகும்போது மனிதன் படுகிற பாட்டை இப்பாட்டு நன்கு வரைந்து காட்டியுள்ளது. அஞ்சி அலமந்து அல்லலாய் இறந்துபடும் சமயத்தில் அஞ்சாதே! என்று அருள் புரிந்தருளும் பரமபதி என இறைவனை ஞானசம்பந்தர் இவ்வாறு உளம் உருகித் துதித்துள்ளார். மரண வேதனைகள் மதி தெளிய வந்தன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா விளம் விளம் விளம் விளம் காய்)

பரண மாகிய பெண்டிரும் சுற்றமும் பண்டுதம் கையி(ல்)தந்த
இரண மானவை கொண்டிட இவரைவிட்(டு) இயம்பிடா திவணேகு
மரண வேதனை யாவரால் அறியலாம் மயங்கியைம் புலனந்தக்
கரணம் யாவையும் கலங்கிட வருதுயர் கடவுளே அறிகிற்பார். - குறுந்திரட்டு

மனித வாழ்வின் மருமத்தை இது உணர்த்தியுளது. மனைவி, மக்கள் எனச் சுற்றியுள்ள கூட்டத்தினிடம் முன்பு வாங்கியிருக்க கடன் தீர்ந்தவுடன் அவன் முடிந்து போகிறான்; அவ்வாறு போவதுதான் சாவாகிறது. புலன் ஒடுங்கிக் கரணங்கள் கலங்கி அழியும் அந்த மரண வேதனையை, மீண்டும் பிறவாதபடி உய்தி பெற, கடவுள்தான் அறிவார் என்று பரிதாபமாய் உரைத்தது. பிறப்பு மூப்பு இறப்புகள் பெருந்துயர்களாகின்றன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா மா மா விளம் காய்)

முதுகு பற்றிக் கைத்த லத்தால் முன்ஒரு கோல்ஊன்றி
விதிர்வி திர்த்து கண்சு ழன்று மேல்கிளை கொண்டிருமி
இதுஎன் அப்பர் மூத்த வாறென் றிளையவர் ஏசாமுன்
மதுஉண் வண்டு பண்கள் பாடும் வதரிவ ணங்குதுமே.2

- திருவதரி, திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, இரண்டாம் ஆயிரம்

கிழமாயிழிந்து தளர்ந்து சாகுமுன் பத்ரி நாராயணனை நினைந்து உய்தி பெறுவோம் என்று பரகாலனார் இவ்வாறு பிறவியின் பயனை உலகம் அறிய உணர்த்தியிருக்கிறார். உடல் முதிர்ந்து ஒழிந்து போதலை உணர்ந்த மேதைகளே உயிர்க்குறுதி நலனை விரைந்து நாடுகின்றனர். உணராத பேதைகள் இழிகின்றனர்.

தோன்றுழித் தோன்றி நிலைதவக் கரக்கும்
புற்புதச் செவ்வியின் மக்கள் யாக்கைக்கு
நினைப்பினுங் கடிதே இளமை நீக்கம்

அதனினுங் கடிதே மூப்பின் தொடர்ச்சி
அதனினுங் கடிதே கதுமென மரணம்
வாணாள் பருகி உடம்பை வறிதாக்கி
நாணாள் பயின்ற நல்காக் கூற்றும்
இனைய தன்மைய திதுவே யிதனை

எனதெனக் கருதி இதற்கென்று தொடங்கிச்
செய்தன சிலவே செய்வன சிலவே
செய்யா நிற்பன சிலவே யவற்றிடை
நன்றென்ப சிலவே தீதென்ப சிலவே
ஒன்றினும் பாடதன சிலவே யென்றிவை

கணத்திடை நினைந்து களிப்பவுங் கலுழ்பவும்
கணக்கில் கோடித் தொகுதி.. 32 - 026 கோயில் நான்மணிமாலை, பதினொன்றாம் திருமுறை. கோயில் நான்மணிமாலை

இளமை, மூப்பு, மரணம் முதலிய நிலைகளைக் குறித்துக் காட்டி மனித வாழ்வைப் பட்டினத்தார் இப்படி நயமாய் விளக்கி யிருக்கிறார். நாளும் எமன் வாய்க்குள் இரையாய்க் கழிகின்ற மனிதன் தனது அழிவு நிலையை உணர்ந்து அழியாத முழு முதல் பரமனைக் கருதி உருகி உய்ய வேண்டும் என உரிமையோடு போதித்துளார். போதனையில் வினைகளின் வேதனைகள் விளங்கின.

சாவை எதிரறிந்து வாழ்வைப் புனிதமாக்கிப் புண்ணிய சீலராய் வாழவேண்டும் என்றே மேலோர் எண்ணி நடந்து இயம்பி யருளுகின்றார், பெரியோருடைய வாய்மொழிகள் இனிய அனுபவங்கள் தோய்ந்து தனியே காண வருதலால் மனித சமுதாயத்துக்கு அவை நன்மை புரிந்து வருகின்றன.

He who should teach men to die, would, at the same time, teach them to live. [Montaigne]

மரணத்தைக் குறித்து மனிதருக்கு உணர்த்துகிறவன் அதே சமயத்தில் நன்கு வாழவும் போதிக்கிறான் என்னும் இது இங்கு அறிய வுரியது. நெறியே வாழின் சாவு நேரே தாழுகிறது.

உடல் அழியுமுன் உயிர்க்குறுதி நலனை அடைபவனே மதிமான்; அவ்வாறு அடையாதவன் மடையனாகவும் கடையனாகவும் இழிந்து கதி இழந்து போகிறான்.

உற்ற உடல்ஒழியு முன்னே உயிர்க்குறுதி
பற்றி உயர்க பரம்.

ஆன்ம நலம் ஆனந்த நிலையமாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Dec-21, 11:54 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

மேலே