26ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 26
ஆன்மீக வழியில் அமைதி......
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்


நாம் மனதைக் கட்டுப்படுத்துவதால் என்ன பயன்களை அடையலாம் என்று சிந்தித்துப் பார்த்தால் முதலில் நாம் ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம். நமக்கு ஆன்மீக வழியில் மன அமைதி, மன சாந்தி போன்றவை கிடைக்கும். மேலும் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் தன்மை, பொறுமை, ஆழ்ந்து சிந்திக்கும் திறமை போன்றவைகள் நம்மை அறியாமல் வளரும். நாம் மனதை நம் வசத்தில் கொண்டு வரும்போது சொத்து சுகங்களுடன் ஆடம்பரமாக உலகில் வாழும் பணம் படைத்தவர்களுக்கு கிடைக்காத மன நிம்மதி நமக்கு எளிதில் கிடைக்கும் என்பதை அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

நம் கண்ணுக்குத் தெரியாத இந்திரியமான மனம், ஆன்மீகத்தில் கூறியுள்ளபடி தியானப் பயிற்சியினை மேற்கொண்டால் மனம் நமக்குள் கட்டுப்படும். கண் காது மூக்கு வாய் மெய் போன்ற கர்ம இந்திரியங்கள் நம் கண்களுக்குத் தெரியக்கூடிய இந்திரியங்கள் ஆகும். நமது கர்ம இந்திரியங்களை கட்டுபடுத்தினால், மனம் நம் கட்டுபாட்டுக்குள் வந்து விடும் என்பதை உணர்ந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக கண்களை நல்லவைகளை மட்டும் பார் என்று நாம் நினைத்தால், அவைகள் நல்லவைகளை மட்டும் பார்க்கும். அதேபோல் காதுகளை ஆன்மீகக் கருத்துகளை மட்டும் கேட்க வேண்டும் என்று மனதில் நினைத்தால் அதன்படி ஆன்மீகக் கருத்துகளில் மட்டும் காதுகள் ஈடுபடத் தொடங்கும். அதற்கு நமக்கு கர்ம இந்திரியங்களை கட்டுப்படுத்தும் உறுதியான மனம் நம்மிடம் இருக்க வேண்டும் என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

நாம் ஞானத்தை அடைய வேண்டுமானால் நம் கண்ணுக்குத்தெரியாத மனம்தான் காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம் வெளி இந்திரியங்கள் எப்படி இருக்கிறது என்றால் துவாரங்களாக கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என ஐம்புலன்களாக இருக்கின்றன. பசி நீங்குவதற்கு வயிற்றுக்கு உணவு வேண்டும் என்றால் வெளி இந்திரியமான வாயின் மூலமாகத்தான் சாப்பிட வேண்டும். அதேபோல் மனதுக்கு உணவு கொடுக்கும் ஐந்து இந்திரியங்கள் கண் காது மூக்கு போன்ற இந்திரியங்கள் ஆகும். அவை ஐந்தும் மனதுக்கு வாசனையைக் கொடுக்கும் துவாரங்கள் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் ஆரோக்கியமான உணவை தேடி அதற்கு கொடுக்கிறோம். அதாவது நாம் நல்லவிதமான சத்துமிக்க உணவை சாப்பிடுகிறோம். அதேபோன்று நம் கண்ணுக்குத்தெரியாத இந்திரியமான மனது நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், நமது வெளி இந்திரியங்கள் மூலமாக நல்ல பயனுள்ள வாசனைகளை மனதிற்குள் பதிந்து வைத்துக் கொள்ளவேண்டும். தொலைக்காட்சி பார்ப்பதால் கண்ணுக்கு மட்டும்தான் கெடுதல் என்று நாம் அனைவரும் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் தொலைக்காட்சி மூலம் காட்டப்படும் காட்சிகள் அனைத்தும் வெளியில் தெரியும் கண்கள் என்னும் இந்திரியங்கள் வழியாகச் சென்று நம் கண்ணுக்குத்தெரியாத இந்திரியமான நமது மனதையும் பாதிக்கும் என்பதை நாம் அறியாமல் இருக்கிறோம். நாம் அதனை அவ்வாறு அறிந்தாலும் மனதை கட்டுப்படுத்திக்கொள்வதற்கு முடியாமல் தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகள் காட்சிகளையும் கண்கள் வழியே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

நமது கர்ம இந்திரியங்கள் மூலமாக எப்படிப்பட்ட விஷயங்களை கருத்துக்களை மனதுக்குள் பதிவு செய்யுமோ, நம் மனதும் அப்படிபட்ட கருத்துக்கள் அடிப்படையில்தான் இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நம் கர்ம இந்திரியங்கள் மூலம் நல்ல கருத்துக்களை நம் மனத்துக்குள் அனுப்பினால் அல்லது பதிவு செய்தால் மனது ஆரோக்கியமான தூய்மையுடையதாக இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வுலகில் நல்லவைகள் தீயவைகள் என்று எல்லாமே கலந்து நிறைந்துதான் காணப்படுகின்றன. அவற்றில் நல்ல பண்புகளுடன்கூடிய கருத்துக்களை மட்டும் மனதுக்குள் நம் இந்திரியங்கள் வழியாக நிரப்ப வேண்டும் அதாவது பதிவுகள் செய்யவேண்டும். அவ்வாறு மனதை நிரப்பினால் மனம் தூய்மை அடையும் மனமும் அமைதி அடையும். மனித மனம் தூய்மை அடைவதற்கு ஆன்மிகம் துணை செய்கிறது.

நாம் எந்தக் கருத்துக்களை கொடுத்தால், செயல்பாடுகள் செய்தால் பொறாமை கோபம் போன்ற தீய குணங்கள் நம்மிடம் தலைதூக்குமோ அவற்றை இந்திரியங்கள் மூலம் திணிக்காமல் பயனுள்ள கருத்துக்களை மட்டும் நம் இந்திரியங்கள் வழியாக நிரப்புவதற்கு மனதில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது நமது மனதிற்கு இந்திரியங்கள் வழியாக நல்ல செயல்பாடுகள் கருத்துக்களை மட்டும் அனுப்ப வேண்டும். அதற்கு மாறாக வேண்டாத விசயங்களை செயல்பாடுகளை கண், காது, நாசி போன்ற கர்ம இந்திரியங்கள் மூலம் மனதிற்குள் செல்வதற்கு நம்மை அறியாமல் முயற்சி செய்தால் அதற்கு தடை போட்டுவிட வேண்டும். நமது கண், காது, போன்ற கர்ம இந்திரியங்கள் மூலமாகத்தான் நம் மனம் வெளியே செல்கிறது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

நமக்கு தேவையற்ற விஷயங்களாக செயல்களாகபாடுகளாக இருந்தால் நமது கர்ம இந்திரியங்களை பயன்படுத்தாமல் நமது கண்கள், காது நாசி போன்ற இந்திரியங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து மனதை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். எடுத்தக்காட்டாக ஓர் இடத்தில் சண்டைசச்சரவுகள் நடந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது அங்கு வேண்டாத வார்த்தைகள் நடமாடிக் கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நாம் தேவையற்ற விசயங்களை காது கொடுத்துக் கேட்காமல் இருந்து விடலாம். இல்லை என்றால் நாம் அதனை மனதுக்குள் அனுப்பாமல் தேவையற்ற விஷயங்களை தடை செய்யும்பொருட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்று விடலாம்.

இதேபோன்று நமது மற்ற கர்ம இந்திரியங்களையும் கட்டுப்படுத்தி மனதை ஆரோக்கியமாக தூய்மையாக வைத்துப் பழகவேண்டும். உலகில் காணும் தீய செயல்பாடுகளைப் பார்க்கமாட்டேன் தீயவைகள் எதையும் கேட்க மாட்டேன் தீயவைகளைப்பற்றி பேசமாட்டேன் என்று நமக்கு சுட்டிக்காட்டும் மூன்று குரங்கு பொம்மைகளை நினைத்துக் கொள்ள வேண்டும். நல்லவைகளை பார்க்க வேண்டும், நல்லவைகளை கேட்க வேண்டும் நல்லவைகளை பேசவேண்டும் என்று நாள்தோறும் ஜெபம்போல் மனதிற்குள் நினைத்துக் கொள்ளவேண்டும்.

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் சுவையறியும் நாவைக் கட்டுப்படுத்த வேண்டும். நாக்குக்கு சுவையாக இருந்தால் அது உடலுக்குள் உணவை அளவுக்கு அதிகமாக அனுப்பிக்கொண்டே இருக்கும். நாம் நாவை அடக்கி உணவை உண்பதில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். நம் கர்ம இந்திரியங்கள் வழியாக மனதுக்குள் அனுப்பும் விசயங்களை இதுபோல் வடிகட்டி அனுப்பவேண்டும். அவ்வாறு அனுப்புவதில் கவனமுடன் நாம் இருந்தால் நம் மனம் நம் கட்டுக்குள் வந்து விடும்.

கண் தேவையற்றவைகளைப் பார்க்க மாட்டேன். காது தேவையற்ற விசங்களைக் கேட்க மாட்டேன் வாய் தேவையற்றவைகளைக் பேசமாட்டேன். என்று நம் கர்ம இந்திரியங்களை கட்டுபடுத்த வேண்டும். நமக்குத் தேவையானவை தேவையற்றவை என்று எப்படி நாம் அறிந்து கொள்வது என்றால், அதற்கு ஆன்மிகம் வழிகாட்டுகிறது. நமக்கு விவேக அறிவு அதற்குத் துணை புரிகிறது. இந்திரியங்களை எப்படிக் கட்டுப்படுத்துவது என்றால், எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் நமக்குள் நல்ல பண்புகள் குணங்களுடன் இருப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்து அதன்படிதான் இருப்பேன் என்று மன உறுதியுடன் இருப்பதற்கு ஆன்மீக வழியில் முயற்சி செய்து வெற்றி காணவேண்டும். மனதை ஆன்மீக வழியில் நின்று அமைதிபடுத்துவேன் இந்திரியங்களைக் என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் நல்ல கருத்துக்களை இந்திரியங்கள் மூலம் மனதிற்குள் அனுப்புவதில் கவனமாக இருப்பேன் என்று மனதில் உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும்.

எந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கும்போது தீய குணங்களுடன் பிறப்பதில்லை. அந்தக் குழந்தை நல்லவனாக கெட்டவனாக மாறுவதும் அவன் தாய் வளர்க்கும்விதத்தில் மட்டும் அல்ல குடும்பச்சூழ்நிலை மற்றும் சமூகச்சூழ்நிலையும் காரணமாகும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மனிதர்கள் ஆரம்பத்தில் சூழ்நிலைக்கு குழந்தைகள்போல் அடிமையாகாமல்தான் இருக்கிறான். நாளடைவில் மனிதன் சூழ்நிலைக்கு அடிமையாகி துன்பத்தில் வீழ்ந்து விடுகிறான். சூழ்நிலை அடிமையில் இருந்து வெளியே வரவேண்டும் என்றால் அதற்கு உலகில் காணப்படும் நல்ல பண்புகளை கருத்துக்களை செயல்பாடுகளை நம் மனதில் பதிய வைக்க வேண்டும். அதற்கு நமது கர்ம இந்திரியங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்திரியங்களையும் மனதையும் நம் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரவேண்டுமானால் ஆன்மீக வழிதான் அவனுக்குப் பெரிதும் துணை செய்யும்.

எடுத்துக்காட்டாக நண்பர் ஒருவர் ஒரு திருமண விழாவிற்கு கலந்து கொள்ள செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். திருமணம் முடிந்து சாப்பிடச் செல்வதற்கு முன்பு இரண்டு இட்லி ஒரு வடை மட்டும்தான் சாப்பிட வேண்டும் அதற்குமேல் சாப்பிடக்கூடாது என்று அவர் மனதில் நினைத்துக்கொண்டு இலையின் முன்பாக மற்றவர்களோடு உட்காருகிறார். ஆனால் அவர் இருக்கும் சூழ்நிலையின் காரணமாகவோ, இட்லி ருசியின் காரணமாகவோ ஐந்து இட்லி இரண்டு வடைகள் என்று சாப்பிட்டு முடிக்கிறார். இந்த இடத்தில் அவர் தனது கர்ம இந்திரியமான நாவினை அவர் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளாமல் இருப்பதே இதற்குக் காரணம் ஆகும். அவர் மனதில் நினைத்தற்கு மாறாக அதிக அளவில் அவர் சாப்பிடுவதற்கு மனக்கட்டுப்பாடு இல்லாமையும் ஒரு காரணமாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நண்பர் ஒருவர் பேசிப் பழகும்போது தேவையற்ற விஷயத்தை பேசி கருத்து வேறுபாடு கொள்கிறார். அதனால் அந்த நண்பரை எங்கு பார்த்தாலும் எதுவும் பேசக்கூடாது என்று மனதில் எண்ணிக் கொள்கிறோம். ஆனால் எதேச்சையாக ஓரிடத்தில் அந்த நண்பரை பார்க்கும்போது உணர்ச்சி வேகத்தில் பழக்கதோஷத்தில் எதைக் கேட்கக்கூடாது என்று நினைத்தமோ அதை அந்த நண்பரிடம் நம்மையும் அறியாமல் கேட்டு விடுகிறோம். நமது மன உறுதிப்பாடு அங்கு தோல்வி அடைந்து விடுகிறது. காரணம் அவரைச் சந்தித்த சூழ்நிலை உணர்ச்சிகளுக்கு அடிமையாகி அவ்வாறு நாம் நடந்துகொள்ளும்படி செய்து விடுகிறது.

இதிலிருந்து நமக்கு வெளியில் நடக்கும் சூழ்நிலைதான் நமது பேச்சுக்கள் சிந்தனைகள் செயல்பாடுகள் ஆகியவற்றினை முடிவு செய்கிறது என்பது தெரிகிறது. இதிலிருந்து நாம் விடுபடுவதற்கு வேண்டுமென்றால் நமது இந்திரியங்களை நம்மால் கட்டுப்படுத்து முடியவில்லையென்றால், அந்த இடத்திலிருந்து அதாவது அந்த நண்பரைப் பார்த்தாலும் அவரை பார்க்காது மாதிரி சென்றுவிட வேண்டும். அதாவது அந்தச் சூழ்நிலையில் இருந்து விலகிச் சென்று விடவேண்டும். இதுதான் தக்க உபாயம் ஆகும்.

இராமாயணத்தில் வரும் இளையபெருமாள் இலட்சுமணன் கிழித்தக் கோட்டினை சீதாபிராட்டி அப்போது தாண்டாமல் இருந்திருந்தால், அவள் இராவணன் என்ற அரக்கனால் கவர்ந்து சென்றிருக்கமாட்டாள். மேலும் சீதை தன்னோட கணவர் இராமபிரானின் வீரத்தில் நம்பிக்கை வைத்திருந்தால், கணவர் இராமபிரானைக் காப்பாற்றுவதற்காக இலட்சுமணனை அவ்விடத்தில் இருந்து செல்லும்படி கோபத்துடன் கூறியிருக்க மாட்டாள். காரணம் அந்த நேரத்தில் அந்த இடத்தில் சீதை கணவன் இராமபிரான் மேல் உள்ள அளவுக்கு மீறிய அன்பின் காரணமாக உணர்ச்சிக்கு அடிமையாகி விடுகிறாள். இதுபோன்றுதான் மனிதர்கள் தம்முடைய இந்திரியங்களைக் கட்டுப்படுத்தாமல் அதன் போக்கில் சென்று மனிதர்கள் துன்பங்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஆன்மிகம் நமது இந்திரியங்களை கட்டுப்படுத்துவதற்கு பல வழிமுறைகளைக் கதைகள் காவியங்கள் மூலம் எடுத்துக் கூறுகிறது.

ஒருவன் எந்தச் சூழ்நிலைக்குச் சென்றால் அதனால் தான் பாதிக்கப்பட்டு விடுவோம் என்று மனதில் தோன்றினால், தனது சக்திக்கு மீறியதாக இருந்தால் அதனை எதிர்கொள்ளாமல் அந்தச் சூழ்நிலைக்கு அடிமையாகாமல் விலகிச் சென்று விடுவது மற்றொரு வழிமுறையாகும். ஓரிடத்தில் நான்கு நண்பர்கள் வீணாகப் பேசி அரட்டை அடித்துக் கொண்டு இருப்பதாக வைத்துக் கொள்வோம். நாம் அங்கு சென்றாலும் நண்பர்கள் அரட்டையில் கலந்து கொள்ளாமல் ஓரிடத்தில் அமைதியாக இருந்து விடலாம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு முடிவுடன் அங்கு சென்று உட்கார்ந்து விடுவோம். ஆனால் சிறிது நேரத்தில் நாமும் அந்த வீண் அரட்டையில் நம்மையும் அறியாமல் கலந்து கொள்ளும்படி சூழ்நிலை அப்போது அமைந்து விடுகிறது. நமது முடிவில் ஒரு உறுதிப்பாடு இல்லாமையே இதற்கு காரணமாகும்.

இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டுமென்றால் நமக்கு இந்திரிய கட்டுப்பாடுகள் வரவேண்டுமானால், துஷ்டர்கள் என நமக்குத் தெரிந்தவுடன் அப்படிப்பட்ட துஷ்டர்களிடமிருந்து விலகிச் சென்றுவிட வேண்டும். நாம் சத்சங்கத்தில் அடிக்கடி கலந்து அல்லது தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும். உணவு விசயத்தில் கட்டுப்பாடு வேண்டுமானால் உணவு அமிர்தமாக இருந்தாலும் அளவோடு சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான உணவினை தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டும். வாரம் ஒருமுறை உண்ணாவிரதத்தினை கையாள வேண்டும். ஒருநாள் மட்டும் சாப்பிடாமல் இருந்து உண்ணாவிரதத்தினை கடைபிடிக்கலாம்.

பிரச்சனைகள் என்று வந்து விட்டால் அதிலிருந்து விடுபடுவதற்கு நியாயங்களை தன்மையாக சம்மந்தப்பட்டவரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அதனை எதிர்தரப்பில் கேட்கவில்லையென்றால், நாம் மவுனமாக இருந்து விட வேண்டும். இந்திரிய ஒழுக்கம் இந்த மன பக்குவம் வரவேண்டுமெனில் ஆன்மீக வழியில் சென்றால் மனப்பக்குவம் நமக்கு தானாகவே ஏற்பட்டு விடும். நமக்கு நாமே நம்மைச் சுற்றி இந்திரிய ஒழுக்கம் என்னும் வேலியை அமைத்துக்கொண்டு நம்மை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். உலக விசயங்களில் நாம் சிந்தித்து செயல்புரிய வேண்டும். நாம் இந்திரிய ஒழுக்கத்தைக் கடைபிடித்தால் மனதில் வேண்டாத எண்ணங்கள் குப்பைபோல் சேர விடாது. அதன்மூலம் நாம் தேடும் விரும்பும் மன அமைதியும் கிடைக்கும் என்பதை உணரலாம்..

பொதுவாக காலையில் எழுந்தால் எந்தவிதமான மன அழுத்தமும் இல்லாமல் மனமைதியுடன் இருப்போம். நாம் உலக விஷயங்களில் ஈடுபடும்போதுதான் மனமும் பலவிதமான எண்ணஅலைகளில் அலைபாய்ந்து துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. நாம் கர்ம இந்திரியங்களை சூழ்நிலையின் காரணமாக தவறான முறையில் பயன்படுத்தும்போது மனம் சஞ்சலம் கொள்வதற்கு ஆரம்பித்து விடுகிறது. மன அமைதி கொள்வதற்கு கண்களை மூடி தியானம் செய்கிறோம் என்று வைத்துக் கொண்டால், நாம் இதற்கு முன்பு நம் மனதில் கர்ம இந்திரியங்கள் மூலம் பதிந்துள்ளவைகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக காட்சிகளாக மனதில் வந்து ஓடிக்கொண்டேயிருக்கும். அதாவது அழகான பொருட்களைப் பார்த்தவுடன் அதன் அழகில் மயங்கி நின்றது, அப்பொருளே நம் கண்முன்பு அடிக்கடி வந்து அதன்மீது ஆவல் கொள்ளும்படி செய்கிறது. இதனை நாம் இந்திரிய கட்டுப்பாட்டுகளை ஆன்மீகவழியில் சென்று கடைபிடிக்கும்போது நாம் விரும்பும் தேடும் மன அமைதி கிடைக்கும்.

இந்திரிய ஒழுக்கத்தை எப்படிக் கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றி வேதங்கள் இதிகாசங்கள் புராணங்கள் விளக்கிக் கூறுகிறது. கண் காது மூக்கு வாய் மெய் போன்ற ஐந்து இந்திரியங்களைப் பயன்படுத்தும்போது கவனமாக பயன்படுத்த வேண்டும். ஒரே இந்திரியத்தை தீவிரமாக பயன்படுத்தும்போது தேவையில்லாமல் அடிக்கடி பயன்படுத்தும்போது அந்த இந்திரியம் செயல்படும் சக்தியை நாளடைவில் இழந்து விடுகிறது. ஒருவர் தன்னோட சக்திக்கு மீறி கைகால்களை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தும்போது நாளடைவில் கைகால்களுக்கு தொந்தரவு ஏற்பட்டு அதன் சக்தியை இழந்து கால்கள் நடக்க முடியாத சூழ்நிலைகூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவருக்கு ஒரு இந்திரியம் பழுதுபட்டு செயல் இழக்கும்போதுதான் அதன் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்து கொள்வதற்கு முடிகிறது. எடுத்துக்காட்டாக நாம் கேட்பதற்குப் பயன்படுத்தும் காது, உலகில் உள்ள வேண்டாத விஷயங்களை கேட்டோ அல்லது வெடிச்சத்தம் போன்றவற்றை அடிக்கடி கேட்டு காது கேட்கும்தன்மையை சில சமயங்களில் இழந்து விடும்படி நேரிடுகிறது. நல்ல விசயங்களை ஆன்மீக கருத்துக்கள் இனிமையான சங்கீதம் போன்றவற்றை ஆர்வமாக கேட்பதற்கு நினைக்கும்போது காது என்ற கர்ம இந்திரியம் அப்போது கேட்பதற்கு முடியாமல் போய்விடுகிறது.

பொதுவாக மனிதர்களுக்கு வயதாகி விட்டால் காது கண் போன்ற இந்திரியங்கள் எல்லாம் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்று விஞ்ஞான ரீதியில் பேசுவார்கள். அவ்வாறு விஞ்ஞானரீதியாக பார்க்கும்போது முதுமை நிலைமை அடைந்த அனைவருக்கும் எல்லாம் அவ்வாறு இந்திரியங்கள் பழுது ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் நம்மில் பலருக்கு வயதாகியும் கண் காது போன்றவை நல்ல நிலைமையில் இயங்கிக் கொண்டிருப்பதையெல்லாம் நாம் பார்க்கிறோம். அவ்வாறு விஞ்ஞானரீதியில் கூறியதுபோல் முதுமை காரணமாக கண் காது போன்றவை பாதிப்பு ஏற்படுவதில்லையே. இதனையெல்லாம் நாம் சிந்தித்து நமது இந்திரிய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். ஆன்மிகம் இதற்கு நமக்கு வழிகாட்டுகிறது.

நாம் தொலைக்காட்சி அதிகநேரம் பார்த்தால் கண்கள் பாதிக்கப்படும் என்று விஞ்ஞான அறிவு எச்சரிக்கை செய்கிறது. நாம் அதனை ஆன்மீக மூலம் சிந்தித்துப் பார்த்தால் தொலைக்காட்சியில் வரும் காட்சிகளும் கருத்துக்களும் கண் என்ற இந்திரியம் வழியாகச் சென்று நமது மனமும் பாதிக்கப்படும் என்பதை மெஞ்ஞானம் மூலம் அறிந்து கொள்ளலாம். இதிலிருந்து இந்திரிய கட்டுப்பாடு இல்லைஎன்றால் மனமும் பாதிக்கப்படும் என்பதை உணரலாம். தொலைக்காட்சியில் அடிக்கடி ஆன்மீக சம்பந்தமான கோவில்குளம், சிவனடியார்கள், ஆழ்வார்கள் போன்ற ஆன்மீக அடியார்கள் வரலாறு அவர்கள் கூறிய கருத்துக்கள் மற்றும் பக்திப்பாடல்கள் போன்றவற்றை பார்க்கும்போது கேட்கும்போது மனதில் ஒருவிதமான மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படுவதை உணரலாம்.

கெட்டபின் ஞானி என்று உலக வழக்கில் கூறுவார்கள். கெட்டபின் ஞானியாகி யாருக்கு எந்தவித உபயோகமும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் மது குடித்து குடித்து தன்னோட உடல் பாதிப்பு ஏற்பட்டால் அவனுக்கு உடலால் எந்தவித பயனும் இல்லை. அதன்மூலம் அவன் உடல்கஷ்டம் மனக்கஷ்டம்தான் படவேண்டும். எனவே ஆன்மீக வழியில் நின்று வேதங்கள் இதிகாசங்கள் புராணங்கள் கூறியுள்ளபடி இந்திரிய ஒழுக்கத்தை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அறிவுபூர்வமான ஆன்மீக சிந்தனை எது என்றால் ஒரு இந்திரியத்தை தவறான வழியில் பயன்படுத்தி இழப்பதற்கு முன்பாக, அதனுடைய முக்கியத்துவம் உணர்ந்து நாம் நமது இந்திரியங்கள் ஒவ்வொன்றையும் கவனமுடன் பாதுகாப்பதுதான் நமக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ள வாழ்க்கையாக அமையும் என்பதை புரிந்து செயல்புரிய வேண்டும்.

மனிதன் எந்த நிலையில் எப்படி இருந்தால் மனநிம்மதியுடன் வாழலாம் என்பதை வள்ளல்பெருமான் இவ்வாறு கூறுகிறார். ‘உலகில் உள்ள அனைத்து உயிரினங்களிடம் கருணை நிறைந்தவராய் இருங்கள். உங்கள் மனதில் உயிர் இரக்கம் ஊற்றுப்போல பொங்கி வழியட்டும். அடுத்தவர் துன்பங்களைப் போக்குவதற்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். வயிற்றுப் பசிக்காக மற்ற உயிர்களைக் கொன்று உண்பது கூடாது. உயிர்க்கொலை புரிவோர் எமக்கு எந்நாளும் உறவாக மாட்டார்கள். இறைவன் உங்கள் கண்ணுக்கு எட்டுவதில்லை. ஆனால், கருத்துக்கு எட்டுவான். அன்போடு அவனை பற்றிப் பிடியுங்கள். நம்மை விட்டு விலகவே மாட்டான்.

அன்பு எங்கிருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான். பலகாலம் இறைவனை வழிபாடு செய்வதால் உண்டாகும் நன்மைகளை எல்லாம் தர்மம் செய்து ஒரேநாளில் பெற முடியும். தர்மத்தின் பயனை உணர்ந்து கொண்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தர்மம் செய்வார்கள். மலை ஏறும்போது எத்தனை படிகள் என்று மலைத்து நிற்காதீர்கள். எல்லாப் படிகளையும் படிப்படியாக கடந்து விடலாம். உச்சிக் கமலத்தில் ஊற்றெடுக்கும் அமுதத்தைப் போல ஆண்டவன் இருக்கிறான். மனந்தளராமல் கடவுளைக் காணும் முயற்சியை மேற்கொள்ளுங்கள். புலால் உண்ணும் மனிதர்களைக் கண்டால் என் மனம் நடுங்குகிறது. அருட்பெருஞ்சோதியை உள்ளும் புறமும் காண்பவர்கள் மன்னுயிரைத் தன் உயிர்போல் மதித்து நடப்பார்கள் என்று நமக்கு வள்ளல்பெருமான் உபதேசம் மூலம் விளக்குகிறார்.

நாம் உடல் பயிற்சியே செய்யாமல் நமது உடல் எப்படி ஆரோக்கியமாக இருக்கும் என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டும். மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என அகஸ்தியர் வலியுறுத்திக் கூறுகிறார். இதிலிருந்து அவர் மந்திரமே ஜெபிக்க வேண்டாம் என்று மனிதர்களுக்குக் கூறவில்லை. மந்திரம் என்பது நமக்கு இறைவனை காண்பதற்கு அடைவதற்கு முதலில் நமக்கு மனபக்குவநிலையை அடைவதற்கு உதவி செய்கிறது என்ற அர்த்தத்தில்தான் நமக்கு கூறுகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். (அமைதி தொடரும்)

எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (20-Dec-21, 9:34 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 55

மேலே