அறிவமைந்து நின்றான் கதிநலங்கள் அடைந்து விதியை வென்றான் - சிறப்பு, தருமதீபிகை 937

நேரிசை வெண்பா

பொறிவெறியன் ஆனான் புலையாய் இழிந்து
நெறியழிவில் வீழ்ந்து நெளிந்தான் - அறிவமைந்து
நின்றான் கதிநலங்கள் நேரே அடைந்துமேல்
வென்றான் விதியை விரைந்து. 937

- சிறப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பொறி நுகர்வில் வெறிகொண்டவன் புலையாயிழிந்து நிலை குலைந்து வீழ்ந்தான்; அவ்வாறு வெறி கொள்ளாமல் அறிவமைந்து நெறியே ஒழுகினவன் விதியை வென்று கதிகலங்கள் கண்டான்; அந்தக் காட்சியை மாட்சியாய்க் காணுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உயிர் வாழ்வு ஐந்து வகையான சூழல்களில் சுழன்று வருகிறது. கண்ணால் காண்பது, மூக்கால் முகர்வது, வாயால் நுகர்வது, செவியால் கேட்பது, மெய்யால் பரிசிப்பது என்னும் இந்த ஐந்து வகை நெறிகளிலே தோய்ந்துதான் மனிதன் இனிது வாழ்ந்து வருகிறான்; வாழ்வின் வழி வழிமுறையே வந்துள்ளது.

வாழ்க்கைக்கு இயற்கையாய் அமைந்துள்ள இத் துறைகளில் நெறிமுறையே ஒழுகிவரின் அந்த மனிதன் நீதிமானாய் நிலவி வருகிறான்; நெறி கடந்து அவா மிகுந்து பொறி வெறிகளில் ஓடித் திரிந்தால் அவன் பழி பாவங்களை அடைய நேர்கின்றான். மையல் மயக்கங்கள் வெய்ய துயரங்களை விளைத்து விடுகின்றன.

இழி வழிகளில் சுவைகளை விழைந்து உழல்கின்றவன் உயர் நிலைகளை ஒருங்கே இழந்து போகிறான். இழிந்த இச்சைகள் ஒழிந்த பொழுதுதான் மனிதன் உச்ச நிலையில் உயர்ந்து ஒளிமிகுந்து வருகிறான். தெளிவான ஞான நிலைக்கு அடையாளம் இளிவான ஈன வழிகளை எவ்வகையும் அணுகாமையே யாகும்.

நடனம், நாடகம் முதலிய கூத்துகளை நாடிக் காண்பதும் இனிய இசைகளை நசையாய்க் கேட்பதும், இன்னாத படங்களைப் பார்ப்பதும் இன்பமான பொழுது போக்காக உலக மாக்கள் உவந்து களித்துவரினும் உயர்ந்த தலைமக்கள் அவற்றை இகழ்ந்து ஒதுங்கி எவ்வழியும் செவ்வியராய் இனிது வாழ்கின்றனர்.

மோகமான காட்சிகள் மாயவெறிகளை விளைத்துத் தீயவழிகளில் செலுத்தித் தீங்கே புரியுமாதலால் பொறிபுலன்களின் போகங்கள் பொல்லாத புலைகள் என நல்லோரால் எள்ளி இகழ நேர்ந்தன.

கண், காது முதலிய உறுப்புகளுக்குப் பொறி என்று பெயர் வாய்ந்திருப்பது ஆய்ந்து அறிந்து கொள்ள வந்தது. மாயப் பொறிகளில் வீழ்ந்து மாய்ந்து மடியும் விலங்கினங்கள் போல் காயப் பொறிகளில் ஆழ்ந்து மாந்தர் வீய்ந்து கழிகின்றனர். அழிவு நிலை தெரியாமல் அவமே ஒழிகின்றனர்.

பொறிகளை அடக்கி நெறியே வாழ்பவர் நிலையான பேரின்பங்களை அடைகின்றனர். புலையான இச்சைகள் ஒழிந்து போன அளவே மனிதன் புனிதனாய் மகிமை பெறுகிறான்.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்;
மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

பொறிப்பு லன்களைப் போக்கறுத் துள்ளத்தை
நெறிப்ப டுத்து நினைந்தவர் சிந்தையுள்
அறிப்பு றும்மமு தாயவ னேகம்பம்
குறிப்பி னாற்சென்று கூடித் தொழுதுமே. 4

- 048 திருவேகம்பம், ஐந்தாம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்

வாங்கி ஐம்பொறி நின்ற மனத்தினை
நீங்கி டாவகை நெஞ்சுள் இருத்தியே
தீங்கு யாவையும் சிந்தை செயாவணம்
பாங்கி யாதது வேபயில் வாயரோ. - பகவற்கீதை

நேரிசை வெண்பா

பூதஞ் சுழலும் பொறிபுலனந் தக்கரணம்
போதங் கழித்துநாள் போக்காதே - போதச்
சிறையாய் நிறைவகலச் சின்மயஞே யத்தே
நிறையாய் நிறைவாகி நில்.- சிவானந்த மாலை

வாங்கிப் பொறிஐந்துள் நின்ற மனம்தன்னை
நீங்கா(து) அகத்திருத்து உந்தீ பற
நினைவும் எழாமலென்று உந்தீ பற. – அவிரோத வுந்தியார்

பொறி புலன்களில் வெறி கொண்டு திரியாமல் மனத்தை அடக்கி நெறியே நிறுத்தினவன் நிறை பேரின்பங்களை அடைவான் என இவை உணர்த்தியுள்ளன. பொருள் நிலைகளைக் கூர்ந்து ஓர்ந்தால் ஆன்ம நிலையின் மேன்மையை அறியலாம்.

பொறி வழி வருவது சிற்றின்பம் எனச் சிறுமையுற்றது; அறிவின் வழி விளைவது பேரின்பம் எனப் பெருமை மிகப் பெற்றது. மெப்யுணர்வு தெய்வ ஒளியாய்த் திகழ்கின்றது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

வஞ்சமும் களவும் வெஃகி, வழிஅலா வழிமேல் ஓடி,
நஞ்சினும் கொடியர் ஆகி, நவைசெயற்(கு) உரிய நீரார்,
வெஞ்சின அரக்கர் ஐவர்; ஒருவனே வெல்லப் பட்டார்
அஞ்செனும் புலன்கள் ஒத்தார்; அவனும்,நல் அறிவை ஒத்தான். 64

- பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம், சுந்தர காண்டம், இராமாயணம்

பஞ்ச சேனாதிபதிகள் என்று பெயர் பெற்றிருந்த ஐந்து தளபதிகளை ஒருங்கே கொன்று அனுமான் வெற்றி பெற்றுள்ள நிலையை இது உணர்த்தியுள்ளது. ஐம்பொறிகள் போல் எவ்வழியும் வெறிகொண்டு யாரையும் அடக்கி வீறோடு திரிந்து வந்த வெய்ய ஐவரை இவ்வீரன் தனியே வென்றுள்ளதைக் கவி இங்ஙனம் வித்தக விநயமாய் விளக்கியருளினார். பொல்லாத புலன்களை அரக்கருக்கும், நல்ல அறிவை அனுமானுக்கும் ஒப்புரைத்தது நுட்ப நிலைகளை உய்த்துணர வந்தது.

பொறி வெறியனாய்ச் சிற்றின்பங்களை நுகர்பவன் அறிவு கேடனாய் அவல நிலையில் இழிந்து அவமே அழிந்து ஒழிகிறான்.

He that lives in the kingdom of sense, shall die in the kingdom of sorrow. [Baxter]

இந்திரிய சுகங்களில் அழுந்தி வாழ்பவர் துன்ப நிலைகளில் இழிந்து சாவார் என்னும் இது இங்கே நன்கு அறிய வுரியது.

The body of a sensualist is the coffin of a dead soul. [Boveel

சிற்றின்ப போகியின் உடம்பு செத்த உயிரின் சவப்பெட்டி என இது குறித்துள்ளது. விடய வாஞ்சை கொடிய விடமாய் நெடிய துயர்களை விளைத்து மாந்தரை நிலை குலைத்து வருகின்றது.

காம நுகர்வில் கழி பேரிழிவினன் சாகுமுன்னரே சவநிலையை அடைகிறான். புலன்களை அடக்கி வாழ்பவன் புனிதனாயுயர்ந்து புண்ணியங்கள் நிறைந்து நலன்கள் பல பெறுகிறான்.

உடல், உள்ளம், உணர்வு, உயிர் என்னும் இந்த நான்கு நிலைகளையும் பாங்கோடு கவனித்து மனிதன் பண்போடு வாழவேண்டும். மூலமுதலான ஆன்மா எவ்வழியும் விழுமிய நிலையில் விளங்கி வரக் கருவி கரணங்கள் ஒழுகிவரின் அந்த மனித வாழ்வு திவ்விய வாழ்வாம். ஞான செறி நலங்கள் பல தருகிறது.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்;
மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

ஊன நோக்கில் உழல்பவர் என்றுமே
ஈன நோக்கில் இழிந்து கழிகின்றார்;
ஞான நோக்கினர் நாளும் நலமுடன்
வானம் நோக்கி வளர்ந்து வருகின்றார்.

இழிந்த புலையை விலகி உயர்ந்த நிலையைக் கருதி ஒழுகுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Dec-21, 12:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

சிறந்த கட்டுரைகள்

மேலே