தனிமை
ஆமாம்.!
தனிமை அழகானதுதான்..!!
எதுவரையில்.??
வெறுமையின் சுவாரஸ்யம்
தீரும் வரையில்.!!
புதுமையான சூழலின்
ஆர்ப்பரிப்பு குறையும்வரையில்.!!
தனிமை அழகானதுதான்.!!
நடப்பவற்றையெல்லாம் அதன் போக்கில்
ஏற்றுக்கொள்ளும்வரையில்.!!
நிதர்சனத்திலிருந்து நம்மை
விலகிக்கொள்ளும்வரையில்.!!
தனிமை அழகானதுதான்.!!
பல சமயங்களில்
பயமென்ற உணர்வு
நம்மைவிட்டு நீங்கும்வரையில்.!!
நம்பிக்கை நம்மை வந்து
தீண்டும் வரையில்.!!
தனிமை அழகானதுதான்.!!
மௌனத்தின் சத்தம்
இசையாக கேட்டுக்கொண்டு
இருக்கும் வரையில்
தனிமை அழகானதுதான்.!!
பயன்படுத்தப்படாமலே விட்டுவிடும்
எந்தவொரு பொருளும்
பழுதாகிவிடும் -
உறவும் அப்படித்தான் என்று
உணரும்வரையில்
தனிமை அழகானதுதான்.!!
நினைவுகளால் இழுத்துவரப்படும்
இன்பமான அல்லது துன்பமான
ஞாபகங்கள் அனைத்தும்
ஆசுவாசம் கொள்ளும்வரையில்
தனிமை அழகானதுதான்.!!
எண்ணங்களின் போக்கு - நம்
கட்டுக்குள் இருக்கும்வரையில்
தனிமை அழகானதுதான்.!!
எதுவுமே அழகுதான்
அது அது இருக்கவேண்டிய
தொலைவிலும் அளவிலும்
இருக்கும்வரையில் மட்டுமே.!!