💐 என் தாத்தா💐

💐 *என் தாத்தா*💐

என் சொற்கோவையில்
முன் வந்த சொல் *அம்மா*
அடுத்து வந்து நான்
தொடுத்த சொல் *தாத்தா*

சொற்சுவைக்கு அம்மா எனில்
பல்சுவைக்குத் தாத்தா என்பேன்
நன்னெறி வாழ்க்கைக்கு என்றும்
நல்வழி காட்டி தாத்தா.

என் மரபியல் குறியீட்டின்
முதல் பிரதி *தாத்தா*
நான் கண்ட முதல் பரிதி
எந்நாளும் இளம் பரிதி

தளிர் நடை பருவத்தில்
தளர்வு அறியாது வளர்த்தாய்
வளர்த்த *தாய்* ஆதலின்
தாயும் ஆனவன் நீ!.

அன்பால் என்பால் கனிந்தாய்
உன்பால் என்னை ஈர்த்தாய்
நிலையான நித்திய அன்பே - உன்
விலையில்லா உயர் கலையானது !

தாத்தா தாத்தா என்ற என்
தத்தை சொல் கேட்டு
தரணியில் உள்ளது எல்லாம்
தந்திடத் தயையால் துடிப்பாய்

நாளைய மகிழ்வு நோக்கி
நடப்பைக் கொல்வோர் நடுவே -
பெற்றோர் மனம் வென்று
மகிழக் கற்றுக் கொடுத்தாய் !

என் குத்துக்களைத் தாங்க
உன்னால் முடியாமல் நடிப்பாய்
என்னுள் நம்பிக்கை வளர்ப்பாய்
என் நகைப்புக்கு ஆளாவாய்
தணல் நகைப்பைச் சுவைப்பாய்

உயிர் அறிவியல் சேர்த்து
உயர் வாழ்வியலும்
உன்னத நுட்பியலும்
உணர்வால் அறிய வைத்தாய்

சின்னசின்ன கேள்விக்கு நீ
சொல்லி வைத்த பதிலைச்
சிரிப்புடன் நான் ஒலிக்க
அறிவின் ஒளி என்பாய்

வீடு தொடும் யாரிடமும்
விட்டுக் கொடுக்காமல்
என் பெருமை பேசுவாய்
உன் மீசை முறுக்குவாய்!

என் அருமை தாத்தாவே
இன்று நானும் தாத்தா
உன் பெருமை அறிய
இறைவன் கொடுத்த வரம். 🙏🙏🤣🙏

எழுதியவர் : (9-Jan-22, 8:51 pm)
பார்வை : 572

மேலே