கற்றறிந்தார் கேண்மை நுனியின் கரும்பு தின்றற்றே – நாலடியார் 138
நேரிசை வெண்பா
கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை
நுனியின் கரும்புதின் றற்றே1 - நுனிநீக்கித்
தூரின்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா
ஈரமி லாளர் தொடர்பு. 138
– கல்வி, நாலடியார்
பொருளுரை:
ஒலிக்கும் கடலின் குளிர்ந்த துறையின் தலைவனே!
கற்று மெய்ப் பொருள் அறிந்து ஒழுகுபவர்களின் பண்புடைய நட்பு கரும்பை அதன் நுனியிலிருந்து தின்று சுவைப்பதைப் போன்றது.
நுனிக் கரும்பை வெட்டி எறிந்து விட்டு அடிப்பகுதியிலிருந்து அதனைத் தின்றாற் போன்ற தன்மையை உடையது அக் கல்விப் பண்பும் அன்பும் இல்லாதவரது நட்பு.
கருத்து:
கற்றோர் நட்பு வரவர வளர்ந்து இனிக்கும் தன்மை உடையது.

