கல்லாதான் கோட்டி கொளல் இன்னா - இன்னா நாற்பது 28

இன்னிசை வெண்பா

கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா
வல்லாதான் சொல்லு முரையின் பயனின்னா
இல்லார்வாய்ச் சொல்லி னயமின்னா வாங்கின்னா
கல்லாதான் கோட்டி கொளல். 28

- இன்னா நாற்பது

பொருளுரை:

நடத்த வேண்டிய முறையைக் கல்லாதவன் ஏறிச் செலுத்தும் மனஞ்செருக்கிய குதிரை அவனைச் சுமந்து செல்லுதல் துன்பமாகும்;

ஒன்றனைச் செய்ய இயலாதவன் சொல்கின்ற சொல்லின் பொருள் துன்பமாகும்;

செல்வ மில்லாதவருடைய வாயிலிருந்து வரும் சொல்லினது நயமானது துன்பமாகும்;

அவ்வாறே, கல்வியில்லாதவன் கற்றவர் அவையில் ஒன்றைக் கூறுதல் துன்பமாம்.

கலி - ஆரவாரமும் ஆம். வல்லாதான் ஒன்றனைச் செய்ய இயலாதவன் எனினும் அமையும்.

இல்லார் வாய்ச்சொல்லின் நயமின்னா என்பதனை,

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும். 1046 நல்குரவு

என்னுந் திருக்குறளால் அறியலாம். கோட்டிகொளல் - ஒருசொல்; அவையின்கண் பேசுதல் என்னும் பொருளது;

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல். 720 அவையறிதல்

தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jan-22, 11:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

சிறந்த கட்டுரைகள்

மேலே