தூய மனமே துணையாய் மருவி யுறையும் தனிமை இனிமை தவம் - தனிமை, தருமதீபிகை 971
நேரிசை வெண்பா
மாய வெறியில் மயங்கி யுழல்கின்ற
பேயர் தொடர்பு பிடியாமல் - தூய
மனமே துணையாய் மருவி யுறையும்
தனிமை இனிமை தவம். 971
- தனிமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
மாய மோகங்களில் வெறியராய் உழலுகின்ற பேயர்களோடு கூடாமல் தூய மனமே துணையாய் மருவி உறையும் புனிதமான தனிமை இனிமையான தவமாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர். அரிய இனிய தவ வாழ்வு அறிய வந்தது.
உலக வாழ்வு பலவகை நிலைகளில் பரவியுள்ளது. மனிதர் எவ்வளவு தொகையினரோ அவ்வளவு வகையினவாய் வாழ்க்கை வேறுபட்டிருக்கின்றது. வெளியே ஓரினமாய்க் கூடி இயங்கிவரினும் உள்ளே பெரிய மாறுபாடுகள் மீறி நிற்கின்றன.
எண்ணி வருகிற எண்ணங்கள், பழகி வருகிற பழக்கங்கள், முயன்று வருகிற முயற்சிகள், சேர்ந்து வருகிற சேர்க்கைகள் ஆகிய இவற்றின்படியே மாந்தருடைய வாழ்வும் சூழ்வும் மருவி வருகின்றன. புறத்தே பொங்கி நிற்கும் நிலைகளுக்கெல்லாம் மூலகாரணங்கள் அகத்தே நன்கு தங்கி நிற்கின்றன.
சிறுமையான நினைவுகளால் மனிதர் சிறியராய்ச் சீரழிந்து போகின்றார். புனிதமான பெரிய சிந்தனைகள் மனிதரை எவ்வழியும் இனியராய் உயர்த்தி இன்ப நலங்களை அருளி வருகின்றன.
இழிந்த வழிகளிலேயே மக்கள் பெரும்பாலும் பழகி வருதலால் தெளிந்த அறிவை இழந்து யாண்டும் தேசு அழிந்து மாசுகள் படிந்து மங்கியுழல்கின்றார், தூய நீர்மைகள் தோயாமல் தீய புலைகளிலேயே செருக்கித் திரிதலால் மனித உருவில் மருவியிருந்தும் மாயப் பேய்கள் என மானிடர் ஈனமடைய நேர்ந்தனர். ஊன ஈனங்களை உணராமல் உளம் களித்து உழலுகின்றனர்.
அருந்தல் பொருந்தல்களில் திருந்திய நியமமின்றி நெறிகேடராய் வெறிகொண்டு அலைதலால் அந்தப் பேதைப் பித்தர்களின் வாழ்வு மாயவெறி என வந்தது. மடமைக்களி மலிந்துளது.
வையக மாந்தர் இயல்பாகவே மையலான வாழ்வுகளையுடையவர். அவற்றுள் மேலும் வெய்ய வெறியராய் விரிந்து போபவர் இழிந்த விலங்குகளாய்க் கழிந்து தொலைகின்றனர்.
அறிவு நலம் கனிந்து நெறிமுறைகள் தழுவி வருபவர் விழுமிய மகான்களாய் விளங்கி வியன் ஒளியாய் மிளிர்கின்றனர்.
புனிதம் தோய மனிதன் தெய்வம் ஆகிறான்; புன்மை தோயப் புலையாயிழிகிறான். தீய புலைகள் ஒருவிய அளவே தூய நிலைகள் பெருகி வருகின்றன; அவ்வரவு ஆனந்தமாகிறது.
தீயவர்கள் கொடிய தொற்று நோயினும் கெட்டவர்களாதலால் நல்லவர்கள் அவரை யாதும் ஒட்டாமல் விலகி விடுகின்றனர். புனித நிலை புலைநிலைகளை அஞ்சி அகலுகிறது.
தீயாரைக் காண்பதுவும் தீதே என்று ஒளவையார் இவ்வாறு கூறியதனால் அந்தப் பார்வையிலேயே பழிதுயரங்கள் விளைந்துவிடும் என்பது தெரிய வந்தது. கெட்டவர் தொடர்பால் கேடுகள் தொடர்ந்து இழிபழிகள் அடர்ந்து வந்து விடும்.
When the wicked cometh, then cometh also contempt, and with ignominy reproach. [Bible]
கெட்டவன் வரின் இழிவும், பழியும், அவமானங்களும் ஒட்டியே வரும் என்னும் இது ஈண்டு ஊன்றி உணர வுரியது.
உள்ளம் தூயவர்கள் தீயவரோடு சேராமல் ஒதுங்கியே வாழ்கின்றனர். ஞான நலம் கனிந்த பொழுது அது தவவாழ்வாய்ச் சிறந்து திகழ்வதால் ஈனமான இழி வாழ்வினரை அறவே அவர் விலகி விடுகின்றனர். தூயநிலை துறவு ஆகிறது.
தனித்திரு; பசித்திரு விழித்திரு.
என்பன தவ வாழ்வின் புனித நிலைகளாய்ப் பொலிந்து வந்துள்ளன. தனியே இருப்பது மகான்களுடைய வாழ்வாய் மகிமை பெற்றுள்ளது. தனிமுதலை நினைபவர் தனியராகின்றார்.
பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இனியே(து) எமக்குன் அருள்வருமோ எனக்கருதி
ஏங்குதே நெஞ்சம் ஐயோ!
இன்றைக்(கு) இருந்தாரை நாளைக்(கு) இருப்பரென்(று)
எண்னவோ திடமில் லையே;
அணியாய மாயிந்த உடலைநான் என்றுவரும்
அந்த கற்(கு)ஆ ளாகவோ?
ஆடித் திரிந்துநான் கற்றதும் கேட்டதும்
அவலமாய்ப் போதல் நன்றோ?
கனியேனும் வறியசெங் காயேனும் உதிர்சருகு
கந்தமூ லங்க ளேனும்
கனல்வாதை வந்தெய்தின் அள்ளிப் புசித்துநான்
கண்மூடி மெளனி யாகித்
தனியே இருப்பதற்(கு) எண்ணினேன் எண்ணமிது
சாமி நீஅறி யாததோ?
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சி தானந்த சிவமே. - தாயுமானவர்
தனியே இருந்து தவம் புரியும் வாழ்வைத் தாயுமானவர் விரும்பியுள்ளதை இதனால் உணர்ந்து கொள்கிறோம். தவமும் ஞானமும் தனிமையில் இனிமையாய் இன்பம் சுரந்து வருகின்றன.
உலக மக்களிடம் கலகக் கசடுகள் நிறைந்துள்ளமையால் அவரோடு ஒட்டாமல் ஒதுங்கி உறைவது உயர் தவமாய் நிறைகிறது. உள்ளம் தூய்மை ஆக உலகம் தூரமாகிறது.
மடமை, கொடுமை, பகைமை, பொறாமை, வஞ்சம் முதலிய நஞ்சுகள் தோய்ந்து இழிந்து உழலுகின்ற மாந்தரோடு சாந்த சீலர்கள் சாரலாகாது. புனித வாழ்வு தனியே நிலவுகிறது.
மனிதர் பொறி புலன்களில் புலையுறுகின்றனர்.
புனிதர் நெறி நியமங்களில் நிலைபெறுகின்றனர்.
தூயமனம் உடையவர் தூய இனத்தையே நாடுகின்றனர்; அந்தயினம் அமையவில்லையானால் தம் மனமே துணையாக மருவி மகிழ்கின்றனர். தனியான புனித வாழ்வில் பேரின்பம் இனிது கனிகிறது. இனிமையும் தவமும் தனிமையில் விளைகின்றன; அதனை நயமாய் இனிது பழகி வியனாய் அதிசய ஆனந்தம் பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

