செய்ய தவமாகும் தெய்வீக இன்பமெலாம் உய்ய உதவும் ஒருங்கு - தவம், தருமதீபிகை 961

நேரிசை வெண்பா

மாய உலக மருள்நீங்கி எவ்வழியும்
தூய அருள்நிலையைத் தோய்ந்துவரின் - ஆயதுவே
செய்ய தவமாகும் தெய்வீக இன்பமெலாம்
உய்ய உதவும் ஒருங்கு. 961

- தவம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உலக மயக்கங்களின் மருள்களை நீங்கி எவ்வழியும் தூய அருள் நிலையைத் தோய்ந்து வருக; அவ்வாறு வரின் அதுவே செவ்விய தவமாம்; தெய்வீகமான பேரின்ப நலன்களை எல்லாம் ஒருங்கே நல்கி அது உயர்கதி யருளும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பொய்யான நிலைகள் மெய்யாகத் தோன்றி மயக்கத்தை விளைத்து வருவது மாயம் என வந்தது. வையக வாழ்வு யாவும் வெய்ய மாயக் கூத்துகளாய் விரிந்து யாண்டும் நீண்டு நிகழ்ந்து நிலவுகின்றன. மருண்ட மயக்கங்கள் தெளிந்து உண்மை நிலைகளை உணர்ந்து உயிர்க்கு உறுதி காண்பவர் மிகவும் அரியர். அரிய அந்த நிலையிலிருந்து அருமையாய் வெளியேறி ஒளி மிகுந்து வரும் பெரியரே துறவி, தவசி எனத் தோன்றுகின்றனர்.

பொறிவெறிகள் ஒருவிப் புலன்களை அடக்கி நெறி நியமங்கள் அமைந்து விரதங்கள் பூண்டு விழுமிய நிலையில் தழுவி வருவதே தவம் என வந்தது. தன்னைச் சார்ந்தவரைத் தனிமுதல் தலைமையில் சாரச் செய்வது என்னும் காரணக்குறி இப்பேரில் பூரணமாய்ப் பொருந்தித் தவத்தின் சீர்மை நீர்மைகளை விளக்கியுளது.

சீவனைச் சிவமாய்ச் செய்வது தவம்என நேர்ந்தது.
சிவத்தைப் பேணின் தவத்திற்கு அழகு.

தவத்திற்கும் சிவத்திற்கும் உள்ள உறவுரிமைகளை ஒளவையார் இவ்வாறு விளக்கியிருக்கிறார், ’தவம் பெருகச் சிவம்பெருகும்’ என்பது முதுமொழி. சகநோக்கம் ஒழிந்து அகநோக்கமாய்க் கருதி வருவது தவமாதலால் அந்த வரவில் அதிசய வரவுகள் பெருகி அரிய ஆனந்த நிலைகள் மருவி வருகின்றன.

ஒருவன் தவம் புரிய நேர்ந்த போதே அவங்கள் ஒழிகின்றன; அறங்கள் விளைகின்றன. பசி முதலிய துயர்களைப் பொறுத்து உயரருளோடு ஒழுகி வருதலால் பரனருள் இவனிடம் இயல்பாய் நிறைகிறது. மனம் தவம் மருவ மகிமை மருவுகிறது.

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்(கு) உரு. 261 தவம்

தவத்தின் வடிவத்தை வள்ளுவர் இவ்வாறு வடித்துக் காட்டியிருக்கிறார். பொறுமையும் கருணையும் தவ உருவங்களாய் மருவியுள்ளன. தவம் செய்பவர் எவ்வாறு இருப்பர் என்பதைக் குறிப்பாயிங்கே ஓர்ந்து குணம் தெரிந்து கொள்கிறோம்.

நேரிசை வெண்பா

உயிர்நோய்செய் யாமை யுறுநோய் மறத்தல்
செயிர்நோய் பிறர்கட்செய் யாமை - செயிர்நோய்
விழைவு வெகுளி யினைவிடுவான் ஆயின்
இழிவன் றினிது தவம். 31

- சிறுபஞ்ச மூலம்

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

தவத்தின் மேலுறை தவத்திறை தனக்கல தரிதே
மயக்கு நீங்குதல் மனமொழி யொடுமெயில் செறிதல்
உவத்தல் காய்தலொ(டு) இலாதுபல் வகையுயிர்க்(கு) அருளை
நயத்து நீங்குதல் பொருடனை யனையது மறிநீ. 25

- வளையாபதி

நீஇர் ஆடல் நிலக்கிடை கோடல்
தோஒல் உடுத்தல் தொல்எரி ஓம்பல்
ஊரடை யாமை உறுசடை புனைதல் .
காட்டில் உணவு கடவுட் பூசை
ஏற்ற தவத்தின் இயல்பென மொழிப. - தாபதம்

தவத்தின் இயல்புகளைக் குறித்து வந்துள்ள இவை இங்கே சிந்திக்கத் தக்கன. தவம் புரிவது எவ்வளவு அரியசெயல் எத்துணை நெறி நியமங்கள்! என்பன இவற்றால் அறியலாகும்.

உண்ணும் உணவும் பருகும் நீரும் துறந்து கண்ணனையே கருதித் துருவன் அரிய தவம் செய்தான். அவன் ஆற்றிய நிலையை நோக்கி அமரரும் போற்றினர். அகிலமும் அவனை வியந்து புகழ்ந்தது. அயலே வருவன ஈண்டு எண்ண உரியன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

விண்ணுலாம் பரிதி ஈன்ற
..விரிதிரை நதிநீர் ஆடி
மண்எலாம் அளந்த பொற்றா
..மரைமலர் அன்ன பொற்றாட்
கண்ணனைக் கண்ணுள் வைத்துக்
..களியளி சிலம்ப விள்ளும்
தண்ணனை கமழ்பூங் காவில்
..தவம்செயத் தொடங்கி னானால். 1

ஒருமதி இரண்டு வைகல்
..ஒழிந்துதீங் கனிநு கர்ந்தான்;
ஒருமதி ஆறு வைகல்
..ஒழிந்துவீழ் சருகு தின்றான்;
ஒருமதி வைகல் ஒன்பான்
..ஒழிந்துதண் துறைநீர் உண்டான்;
ஒருமதி வைகல் ஈரா(று)
..ஒழிந்துகால் பருகி னானால். 2

திங்கள்நான்(கு) இவ்வா(று)
..ஏகத் திங்களில் திகழா நின்ற
அங்கலுழ் முகத்தான் ஒன்றும்
..அருந்தலன்; ஐந்தாம் திங்கள்
பொங்குமூச்(சு) அடக்கி மென்பூப்
..பொருவுதாள் விரலொன்(று) ஊன்றிக்
கங்கைசூழ் கழற்பெம் மானைக்
..கருதினன் தவம்பு ரிந்தான். 3

ஊழிவெம் பரிதி யுட்க
..ஒளிசெய்செங் கதிரால் ஒற்றை
ஆழியந் தடக்கை அம்மான்
..அகமிசை அமர்ந்த வாற்றால்
தாழிருந் தடக்கை நம்பி
..தவக்கனல் தவாது பொங்கி
ஏழிரும் பரவை வேலி
..இருநிலம் கனன்ற தாமால். 4 - பாகவதம், துருவன் பதம்

திருமாலைக் கருதி நின்று துருவன் புரிந்துள்ள அரிய தவநிலைகளை இவை சுவையாக விளக்கியுள்ளன. இவ்வாறு இவன் அருந்தவம் புரிந்தமையால் இவ்வுலக வேந்தர்கள் எவரினும் சிறந்து தலைமையான புகழோடு நிலவியிருந்து இறுதியில் என்றும் அழியாத பெரும்பதவியை அடைந்தான். இன்றும் நின்று நிலவுகிறான்.

அரிய மகிமைகளை உரிமையாய் உதவிப் பெரிய பேரின்பங்களை அருள வல்லதாதலால் தவம் சீவர்களுக்குத் தேவ தருவினும் திவ்விய திருவாய் மருவி நின்று எவ்வழியும் அதிசய ஆனந்தங்களை அருளுகிறது. அதனை இனிது பேணி இன்பநலம் காணுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Feb-22, 7:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே