இன்னிசைக்குயில் லதா மங்கேஷ்கருக்கு மரணம் இல்லை கவிஞர் இரா இரவி

இன்னிசைக்குயில் லதா மங்கேஷ்கருக்கு மரணம் இல்லை !
கவிஞர் இரா .இரவி !

மத்திய பிரதேசம் இந்தூரில் பிறந்த லதா மங்கேஷ்கர்
மக்கள் மனங்களில் மரணமின்றி என்றும் வாழ்வார் !

குழந்தை நட்சத்திரமாக எட்டு படங்களில் நடித்தவர்
குழந்தைகள் பெரியவர்கள் விரும்பும் பாடகியானவர் !

இந்தி தமிழ் என முப்பத்தாறு மொழிகளில் பாடியவர்
இந்தியா மட்டுமல்ல உலகப் புகழ் பெற்று உயர்ந்தவர் !

நடிகர் திலகத்திற்கு ராக்கி கயிறு அனுப்பி மகிழ்ந்தவர்
நடிகர் திலகமும் அண்ணன் சீர் அனுப்பி மகிழ்ந்தவர் !

என் ஜீவன் பாடுது திரைப்படத்தில் லதா மங்கேஷ்கர்
இனிய 'எங்கிருந்தோ அலைக்கும்' பாடல் பாடியவர் !

பிரபு நடித்த ஆனந்த் திரைப்படத்தில் ரம்மியமான
'ஆராரோ ஆராரோ ' பாடல் பாடி தாலாட்டி மகிழ்ந்தவர் !
.
சத்யா திரைப்படத்தில் 'வலையோசை. பாடல் பாடி
சந்தோசப்படுத்தினார் காதலிக்கும் இளசுகளை !

நாற்பதாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதித்தவர்
நா அசைவால் நானிலத்தை இசையால் அசத்தியவர் !

இசைஞானி இளையராசா இசையில் பாடல்கள் இசைத்தவர்
இவருக்கு இணை உலகில் யாருமில்லை என பெயரெடுத்தவர் !

ஆஸ்கர் ரகுமான் இசையில் வந்தேமாத்திரம் பாடல் பாடியவர்
அற்புதமான குரலால் அனைவரையும் கட்டிப் போட்டவர் !

ஈடு இணையற்ற இன்னிசைக் குயிலாக வலம் வந்தவர்
இனிய குரலால் மெல்லிசைக்கு மேன்மைகள் சேர்த்தவர் !

நூறு இசைக் கலைஞர்கள் இசைத்தாலும் அவற்றை மிஞ்சி
நல் குரலால் உரக்க ஓங்கி ஒலித்துஇனிமை சேர்த்தவர் !

தமிழ் மொழி தாயமொழி இல்லை என்றபோதும்
தமிழர்களை விஞ்சிடும் வண்ணம் பாடல் பாடியவர் !

பத்ம பூசன் பத்ம விபூசன் பாரத ரத்தினா பட்டங்கள்
பல பெற்று விருதுகளுக்குப் பெருமை சேர்த்தவர் !

இசை ரசனை இல்லாத முட்டாள் கொடிய கொரோனா
இசைக்குயிலின் உயிரையும் விட்டு வைக்கவில்லை !

காற்றில் இவர் பாடல்கள் ஓயாமல் என்றும் ஒலிக்கும்
கானம் இசைத்த லதா மங்கேஷ்கருக்கு மரணம் இல்லை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (6-Feb-22, 3:35 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 34

மேலே