அண்ணல் இராமதாஸ் அப்பாய் நினைவேந்தல்
*அண்ணல் இராமதாஸ் அப்பாய். நினைவேந்தல்.*
அடக்கத்தின் நல்லுருவம்
அமைதி நெஞ்சம்,
அறவாழி! அறிவாளி!
அண்ணல் மரு.இராமதாஸ் அப்பாய். !
பெற்றோர் தாயார் அப்பாய்
பேர் விளங்க வாழ்ந்த தனையன்!
வடக்கிருக்கும் இமயமென
உயர்ந்த உள்ளம்
வற்றாத கங்கையென
அன்பின் வெள்ளம்!
இன்புற நட்புறவு பாராட்டும்
அன்பர்
நாளும் விரும்பியே
அணிந்த ஆடை
அகத்தின்
அழகாய் தூய வெள்ளை!
மலர்ந்தும் மலராத
பாதி மலர் போலும்
மாமனிதர் புன்னகை
அழகு முல்லை
ஏர் பிடித்து வாழ்வோர்க்கே
தேர்ந்து கனிந்த மலைவாழைத்
தார் போலும் கல்வி - தரும்
பார் போற்றும் வாழ்க்கை
தூர் எடுத்த ஆழ்கிணறு
நீர் ஊற்று மிகுதல்போலே
கற்றனைத் தூறும் அறிவு பெருகும்
ஆர்வம் மிகக் கொண்டார்
எல்லாம்
தேர்ந்த கல்வி ஞானம் கனி
சார் பருக பழுமரம் தேடினார்
நேர் கொண்ட சிந்தையால்
தேர்போல பவனி வந்த
கார்மேகம் நிகர் வள்ளலே!
நீவிர்
தீர்வெனவே வந்தார் அவர்
நினைத்தற்கு அரிய அருள்
நிமலனை உம்மிடம் கண்டு மகிழ்ந்தார்!
தொடங்கி வைத்த கல்விப்
பணியெல்லாம்
துலங்க வைத்த தூமணியே!
திறள்முத்தே!
தளர்ந்தவர் எல்லாம் உம்மால்
வளர்ந்தவர் ஆயினர்
ஆதலின்
தளராது அவர் நெஞ்சங்களில்
தாளாளர் என வாழ்வீர்!
வாழ்த்தி வாழ்த்திப் போற்றுதுமே!
பல்லோர் ஏற்ற பாரினில்
நல்லோர் இதயத்தில் என்றென்றும்
நீவிர் நிலைத்த புகழுடன்
வாழ்வீர் பன்னெடுங்காலம்!
போற்றுதும் போற்றுதும் போற்றுதுமே!!!