அனுமன் என் பார்வையில்
அனுமன்
ஓர் வானரம்...
ஓர் வாயுபுத்திரன்...
ஓர் ராமபக்தன்....
ஓர் தூதன்...
எல்லாம் சரி.
ஒரு குரங்கு
வேகமாய் சஞ்சாரிக்க முடிந்தது...
கடலைத் தாண்ட முடிந்தது...
சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு
பறக்க முடிந்தது...
இலங்காபுரியை எரிக்க முடிந்தது...
படிக்கும்போது நம் ஆச்சரியம்
வானளவு விரியக் காண்போம்.
இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
நம் மனதை ஒப்பிட்டு
உருவாக்கிய ஓர்
உருவகப் பாத்திரமாய்தான்
நான் பார்க்கிறேன் - அனுமனை.
வால்மீகியும்...கம்பனும்..
உருவாக்கிய...
எடுத்தாண்ட
ஓர் அற்புத கதாபாத்திரம்தான்
அனுமன்.
கீதையின் தத்துவங்களை
வாழ்க்கையின் சாரத்தை
பிறப்பின் ரகசியத்தை
அதன் பலன்களை
மறைத்து நமக்காய்
புனையப்பட்ட
ஓர் அட்சய கதாபாத்திரம்தான்
அனுமன்.
நம் மனம் ஒரு குரங்கு.
அதன் வேகம் கணக்கிடமுடியுமா?
வாயு வேகம்... மனோ வேகம்.
அதன் பலம் அளவிடமுடியுமா?
அசுர பலம்...மஹா பலம்.
எதையும் சாதிக்க முடியும்.
மலையைத் துக்கவேண்டுமா?
கடலைத் தாண்டவேண்டுமா?
நெஞ்சைக் கிழிக்கவேண்டுமா?
கட்டுக்கடங்காமல் எரிக்கவேண்டுமா?
எல்லாவற்றையும் சாதிக்க முடியும்.
குரங்காய்
அங்குமிங்கும் தாவித்திரியும்
மனதை அடக்கி...
ஒரு புள்ளியில் நிலைநிறுத்தி...
ஒருமுகப்படுத்தினால் - அந்த
யோகநிலையில் நம்மாலும்
எதையும்...ஏன்
எல்லாவற்றையும் சாதிக்கமுடியும்
என்பதனை
ஒரு குரங்கின் பாத்திரத்தில்
எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
கர்மயோகம்...
தியானயோகம்...
ராஜயோகம்..
அத்தனை யோகமும்
நாம் பின்பற்ற
படிக்காதவரும் புரிந்துகொள்ளும்
விதமாய் அப்பாத்திரம்
எடுத்தாளப்பட்டுள்ளது.
குரங்கான நம் மனதை
அடக்கி...ஒரு நிலைப்படுத்தி
சரணாகதி அடைந்தால்
"தெய்வீகம்" ஏற்றுக்கொள்ளும்...
அங்கீகரிக்கும்.
நம் மனதின் ஒப்பீடுதான்
அனுமன்
என் பார்வையில்.

