இம்மூவர் வீணாவர் காணார் விறல் - தவம், தருமதீபிகை 967
நேரிசை வெண்பா
வீரம் கொடையில்லா வேந்தனும் மெய்யுணர்வின்
சாரம் உறாத தவசியும் - நேரொழுக்கம்
பூணாது நின்ற புலவனும் இம்மூவர்
வீணாவர் காணார் விறல். 967
- தவம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
வீரமும் கொடையும் மேவாத அரசனும், மெய்யறிவின் சாரமுறாத தவசியும், நேர்மையான நல்ல ஒழுக்கம் இல்லாத புலவனும் விழுமிய மகிமைகளைக் காணார்; வீணாய் விளிவர்; அவ்வாறு விளிந்து போகாமல் உயர்ந்த தலைமையை அடைந்து கொள்ளுக; அதுவே பிறந்த சிறந்த பயன் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
தவசியின் நிலைமை தலைமை நீர்மைகளைத் தெளிவாக விளக்குவதற்கு வேந்தனும் புலவனும் ஆர்ந்த துணைகளாய் நேர்ந்து வந்தனர். இணையான பிணைகளாய் இணைந்தவருடைய இயல்புகளை நினைந்து கொள்ளவே உயர்ந்த தகைமைகள் எளிதே உணர்ந்து கொள்ள வரும். குணங்கள் இனங்களை இனிது விளக்குகின்றன.
தனக்கு உரிய தன்மையைத் தழுவியுள்ள அளவே எந்தப் பொருளும் இனிய நன்மையாய் உயர்ந்து விளங்கும். தனது நீர்மையை இழந்த எதுவும் சீர்மை அழிந்து சிறுமையே யுறும்.
வீரமென்பது நேர்மையான தலைமையில் நிலைகுலையாத மன வுறுதி. ஆண்மை, ஊக்கம், திண்மை, தீரம், தைரியம் என வருவன வீரத்தின் கிளைகளே. அரசனுக்கு இது உயிராதாரமான உயர் குணம். சிறந்த தகுதியான இந்த வீரம் சரியாக அமையவில்லையானால் அவன் பரிதாபமாய் இழிந்து கழிவான்.
வீரமும் கொடையும் மேவியிருந்தால் அவன் மேலான மகிமைகளை எய்தி வியனாய் விளங்குகிறான். அவை இலையேல் பேடி, உலோபி எனப் பிழை படிந்து இழிவாய் ஒழிகிறான்.
புலவன் என்பவன் தலைமையான கலையறிவை யுடையவன். அந்த அறிவு சீலத்தோடு தோய்ந்துவரின் அவன் சாலச் சிறந்தவனாய் உயர்ந்து திகழ்வான்; ஞாலமும் அவனை உவந்து புகழ்ந்து வரும். ஒழுக்கம் இல்லையேல் இழுக்கமாயவனை எவரும் இகழ்ந்து விடுவர் விழுமிய சீலம் நழுவிய அளவு புலவன் புல்லன் ஆகிறான்.
புலமையாளன் ஒழுக்கத்தால் ஒளி பெறுகிறான்.
தலைமையான அரசன் வீரத்தால் விழுப்பம் உறுகிறான்.
தவசி மெய்யுணர்வினால் மேன்மை அடைகிறான்.
என்றும் நிலையாய் நிலவும் மெய்ப்பொருள் ஒன்று உள்ளது: எல்லாம் வல்ல அது அதிசய ஆனந்தமாய் யாண்டும் நிறைந்திருக்கிறது. அந்த உண்மைப் பொருளை உணர்ந்து தெளிவதே தத்துவ ஞானம் என விளங்கியுளது. மெய்யான இந்த ஞானம் தோய்ந்து வரும் வழியே தவம் வானம் தோய்ந்த ஒளியாய் வயங்கி மிளிர்கிறது. சிவம் மேவிய நவமே தவம் ஆகிறது.
தானம் தழுவிய தருமம்போல் ஞானம் மருவிய தவம் நயமாய் வியனுறுகிறது. அரிய தவசி பெரிய ஞானியாய்ப் பெருகி வருகிறான். தவம் திண்மையுடையதாயினும் உண்மையுணர்வோடு ஒன்றிய போதுதான் உறுதியாய் உயர்கிறது. ஞானம் தவத்தின் சீவநிலையமாய் அதற்கு இனிமை சுரந்து தனி மகிமையை அருளுகிறது. அது இல்லையேல் இது இளிவுறுகிறது.
நேரிசை வெண்பா
ஞானமில் லாதவை ராக்கியம் நன்றல்ல
கானவர்க்கும் நோயினர்க்கும் கள்ளர்க்கும் - ஆனதுவென்
எந்நிலைக்கே நின்றாலென் எவ்விடயத்(து) ஏய்ந்தாலென்
தன்னிழப்பே இன்பாம் தவம்.
- ஒழிவிலொடுக்கம்
கடுமையான விரதங்களைக் கைக்கொண்டு கானகத்தில் இருந்தாலும் ஞானம் இல்லாதவன் நல்ல தவம் உடையவன் ஆகான் என்பதை உதாரணங்களோடு இது விளக்கியுள்ளது. காட்டில் வாழுகின்ற வேடன் கனி காய் கிழங்குகளைத் தின்னுகின்றான்; பனி வெயில் மழை முதலியவற்றைச் சகித்துக் கொள்ளுகிறான்; நாட்டு மக்களோடு கூடாமல் தனியே ஒதுங்கி வாழுகின்றான்; ஆயினும் அவன் தவசி ஆகான்.
ஞானம் தழுவிய அளவுதான் விரத ஒழுக்கங்களும் வைராக்கிங்களும் மேலான தவங்களாய் மேவி வியன் பயன் தருகின்றன.
மருளான ஆசைகளை ஒழித்து அருள்நிலையில் அமர்ந்து ஆன்ம சிந்தனை செய்து வரும் பான்மை மேன்மையான தவம் ஆகிறது. தனது சுய நிலையில் தோய நேர்ந்தபோது அயலான மாய மயல்கள் அறவே ஒழிந்து போகின்றன.
பொறி வெறிகள் நீங்கி நெறி நியமங்கள் ஓங்கிவரும் அளவு மனிதன் மகானாயுயர்ந்து திகழ்கிறான். அந்தப் புனித நிலையால் அரிய பல மகிமைகள் பெருகி ஆனந்தம் மருவி வருகின்றது.
கலிநிலைத்துறை
ஒன்றாய வூக்கவேர் பூட்டி யாக்கைச் செறுவுழுது
நன்றாய நல்விரதச் செந்நெல் வித்தி யொழுக்கநீர்
குன்றாமற் றாங்கொடுத்தைம் பொறியின் வேலி காத்தோம்பின்
வென்றார்தம் வீட்டின்பம் விளைக்கும் விண்ணோர் உலகீன்றே. 112
- குணமாலையார் இலம்பகம், சீவகசிந்தாமணி
சுவர்க்க போகத்தையும், பேரின்ப வீட்டையும் அடையத் தக்க வழியை இது விழி தெரிய விளக்கியுள்ளது. உருவக உரைகள் கருதியுணர வுரியன. தவநிலை இங்கே நன்கு தெரிய நின்றது.
ஊக்கம், விரதம், ஒழுக்கம், புலனடக்கம் ஆகிய இவை தவத்தின் நீர்மைகள். இத்தகைய தன்மைகள் எவ்வழியும் செவ்வையாய்த் தோய்ந்துவரின் அது திவ்விய தவமாய்ச் சிறந்து வரும். அதனால் முதலில் விண்ணுலக வாழ்வும், பின்பு மோட்சமும் கிடைக்கும் எனச் சீவக மன்னன் இவ்வாறு உணர்த்தியிருக்கிறான். உணர்வு நலம் ஓர்ந்து சிந்திக்கத் தக்கது.
சிறந்த அறிவுடைய பிறப்பில் மனிதன் தோன்றியிருக்கிறான்; மேலான இந்த நிலையில் வந்தவன் கீழான புலைகளைத் தெளிந்து விலகி என்றும் நிலையான இன்ப வாழ்வை அடைந்து கொள்ள வேண்டும். அந்த அடைவே வந்த பிறவியின் பயனாகும்
அவநிலைகளை விலகித் தவநிலைகளைத் தழுவி ஒழுகுக; அதனால் விழுமிய மகிமைகளும் மெய்யான இன்பங்களும் விரைந்து விளைந்து வரும். வந்த பிறவியே அந்தமாய் அந்தமிலின்பம்.அடைக என்கிறார் கவிராஜ பண்டிதர்.