ஒளிபாய் கண்ணே சீர்த்து உற்றுகப்பாய்ப் பெற்ற மகவு – இன்னிலை 27
பஃறொடை வெண்பா
காமம்வீழ் இன்பம் கடலாமே; காதலரின்
ஏம இருக்கையே தூந்திரையாம்; – ஏமத்தீண்(டு)
ஆம்பரலே தோன்றும் அளியூட லாம்பரலிற்
தெற்றித் தெறிப்பாம் ஒளியொளிபாய் கண்ணேசீர்த்(து)
உற்றுகப்பாய்ப் பெற்ற மகவு 27 – இன்னிலை
பொருளுரை:
காமமானது யாவரும் விரும்புகின்ற இன்பக் கடலாகும்,
காதலன் காதலி இருவரும் கூடிய இன்பத்தின் இருக்கையே வீசும் அலையாகும்,
அவ்வின்பத்தினின்று இங்கு உண்டாகும் அன்பே முத்தாகும்,
அம்முத்தினின்று தெளிந்து எழுகின்ற ஒளியே ஊடலாம்,
அவ்வொளி பாய்கின்ற இடமே சிறந்து மகிழ்வுடன் பெற்ற குழவிகளாம்.
கருத்து:
காமம் கடலாகும்; புணர்ச்சியே அக்கடலிற் தோன்றும் அலையாம்; அன்பு அலையில் வந்த முத்து ஆம்; ஊடல் அம்முத்தின் ஒளியாகும்; மக்கள் அவ்வொளி கூடும் இடமாகும்.
விளக்கம்:
காதலர் இருவர்க்கும் காமத்தின் அளவு குறைவு நிறைவின்றி என்றும் பெருகியிருப்பதாற் காமத்தைக் கடலென்றார்; அலைவருவது போலப் புணர்ச்சி மேன்மேலும் நிகழ்வதால் அதனை அலையென்றார்;
காதலன் காதலியாகிய இருவரிடத்தும் புணர்ச்சி நிகழினும் ஒத்த அன்பு தோன்றுவது அருமையாதலால் அதனை முத்து என்றார். அன்புடையாரிடத்து மேலும் மேலும் ஊடல் நிகழ்வது அன்புப் பெருக்கத்திற்குக் காரணமாதலால் அவ்வூடலை முத்தின் ஒளி யென்றார்.
புணர்ச்சியால் மக்கட் பேறுண்டாதலால் அவ்வொளி பாயும் இடமே மக்கள் என்றார். எனவே காமம் தோன்றிக் காதலன் காதலியாய்ப் புணர்ந்து அன்பு அரும்பிப் பின்னர் ஊடலும் கூடலுமாய் வாழ்ந்து மக்கட்பேறு பெறும் இன்ப வாழ்வு இல்லறம் என விளக்கினர்.
அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்,
தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு" 75 என்பதும்,
புலத்தலிற் புத்தேணா டுண்டோ" 1323 என்பதும்,
‘ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பங்
கூடி முயங்கப் பெறின்’ 1330 என்பதும்
‘மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்,
நன்கலம் நன்மக்கட் பேறு’ 60 என்பதும்
அன்பு, ஊடல், கூடல், மக்கட்பேறு இவற்றின் சிறப்பை எடுத்து உரைப்பனவாம்.
குறிப்பு: தூவும் திரை என்பது உயிர் மெய் கெட்டுத் தூந்திரை என நின்றது
"செய்யுமெனெச்ச வீற்றுயிர் மெய் சேறலும்" என்பது விதி. ஆம்பரல் என்பதும் அது; சீர்த்து+உற்று+உகப்பு+ஆய் என்பவை குற்றுகரங் கெட்டு நின்றன