ஊடி யுணர்வாரே தாமிசைவார் பல்காலம் ஈடிலதோர் இன்ப விருந்து – இன்னிலை 28

நேரிசை வெண்பா

கறங்குபறை காணா வுறுவூனைக் காதற்
பிறங்கறை நாவாரு மஃதே - திறமிரங்கி
ஊடி யுணர்வாரே தாமிசைவார் பல்காலம்
ஈடிலதோர் இன்ப விருந்து 28

– இன்னிலை

பொருளுரை:

பலியிடும்போது தன் பாலுற்ற ஊனினது சுவையை ஒலிக்கின்ற பறைகள் அறியா, காதலை விளங்கச் சொல்லுகின்ற நாவினையுடையவரும் அப்பறைகள் போலக் காதற் சுவையை யறியார்;

(காதலிருவரும்) தன்மையறிந்து மனமிரங்கிப் புலந்து பின் அப்புலவி நீங்கிக் கூடியவரே ஒப்பற்றதாகிய ஓர் இன்ப விருந்தினைப் பலகாலமும் தாம் நுகர்ந்து சுவையறிபவராவர்.

கருத்து:

காதற் சுவையைப் பலர்க்கும் விரித்துப் பேசுவார் எல்லாரும் காமச்சுவையை யறியார். காதலர் இருவரும் இயல்பறிந்து பிரிவுக்கிரங்கிப் பின் ஊடியும் கூடியும் போகம் நுகர்ந்தவரே சுவையறிந்தவராவர்.

விளக்கம்:

ஊன் என்பது இங்குப் பலியிடுங் குருதியையுணர்த்திச் சுவையைக் குறிப்பாகக் காட்டியது.
ஊன் - தசை.

வெற்றிகண்ட மன்னர்கள் தம் போர்ப்பறைகளை நீராட்டிக் குருதிப் பலியூட்டி அரசுகட்டிலேற்றி விழாக் கொண்டாடுவது மரபு. ஒலிக்கின்ற பறைக்கு அதன்மேல் பலியூட்டும்போது வழிந்த குருதியின் சுவை தெரியாது என்பார், "கறங்குபறை காணாவுறுவூனை" என்றார்.

குருதி தன் மேல் வழிந்தும் அதன் சுவையையறியாத பறையைப் போலச் சிலர் மங்கையரோடு கலந்திருந்தும் இன்பச் சுவையையறியார் என்ற கருத்தினால் "அஃதே" என்றார்.

காதலரிருவரும் கருத்தொருமித்து ஒருவரியல்பை மற்றொருவரறிந்து பிரிவுக்கிரங்கி இடனறிந்து ஊடி இனிதின் உணர்ந்து பின் கூடிக் காதற் சுவையறிந்தவர்க்கே அதன் சிறப்புத்தோன்றும் என்று கூறுவார் ’உணர்வாரே....தாமிசைவார்’ என்றார். இதனால் இன்பச் சிறப்புக் கூறப்பட்டது.

குறிப்பு: இன்பவிருந்து: இருபெயரொட்டு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Mar-22, 9:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

மேலே