தனியே இருந்து பழகி இனியபே ரின்பம் அருந்தி மகிழ்க அமர்ந்து - தனிமை, தருமதீபிகை 980
நேரிசை வெண்பா
இனிதான ஏகாந்தம் ஈசனருள் இன்பம்
துனியான சூழல் துயரே - தனியே
இருந்து பழகி இனியபே ரின்பம்
அருந்தி மகிழ்க அமர்ந்து. 980
- தனிமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
மடமையான சூழல் கொடிய துயரமே தரும்; ஏகமாயொதுங்கி யிருக்கும் தனிமை ஈசன் அருளுகிற இனிய இன்ப நிலையமாம். அவ்வாறு இருந்து பழகிப் பேரானந்தங்களை அருந்தி மகிழ்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.
புனிதமான இனிய சுகம் தனிமையில் விளைகிறது. கடவுள் தனிமுதல் தலைவன்; ஏக பராபரனான அந்த ஆதி பகவனை அடைய நேர்ந்தவன் எல்லாவற்றையும் துறந்து ஏகமாய் ஒதுங்கி ஏகாந்தமாய் இருப்பதே ஆன்ம விவேகமாயமைந்து நின்றது. தூய நிலை தோயத் தீய புலை தொலைகிறது.
தனியே இனிது அமர நேர்ந்த போது மனிதன் புனிதன் ஆகிறான். தனிநிலை தன்னை அறிய நேர்கிறது. எள்ளலான இழி தொடர்புகள் நீங்கவே உள்ளம் குவிந்து உயிரை நோக்குகிறது; அந்த நோக்கம் பேரின்பத்தை ஆக்கி அருளுகிறது.
மக்கள் கூட்டம் பெரும்பாலும் மாக்கள் நீட்டமாயிருத்தலால் அந்தத் தொடர்பு அவகேடுகளையே விளைத்து அல்லல்களில் ஆழ்த்தி விடும்; பொல்லாத இனத்தோடு பழகிவரின் மனம் புலையான வழிகளில் அலைய நேர்ந்து, ஆன்ம நிலையில் மேன்மையான காட்சியைக் காணமுடியாது; ஆகவே உலகப் போக்கில் ஓடி அவலப் புலைகளையே நாடி உழன்று நைந்து தொலைய வருமாதலால் மேலே உயர்ந்து போக நேர்ந்தவர் எந்த வகையிலும் எவரோடும் சேராமல் புனிதமாய்த் தனியே இருப்பதே நல்லது. உரிய தனிமையில் அரிய இனிமைகள் வருகின்றன.
சிறந்த மனிதன் என வந்தும் பிறந்த பயனை உணர்ந்து பேரின்ப நிலையை அடைய முயலாமல் கடையராயிழிந்து மடையராயழிந்து போவதே மக்களின் நிலையாய் மருவி வருகிறது.
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
குழவியாய்ப் பாலனாய்க் குமரன் ஆகியே
கிழவனாய் விழுகிறான் கிழமை ஒர்கிலான்
பழகிய பழியிலே படிந்து பாழனாய்
இழவையே புரிகிறான் இறந்து போகிறான்.
– கவிராஜ பண்டிதர்
மனித வாழ்வின் நிலைகளையும் புலைகளையும் மாய மருள்களையும், தீய போக்குகளையும் நோக்குகளையும் இது விளக்கியுளது.
தனது உயிரையும் உயிர்க்குயிரான ஈசனையும் எண்ணி இன்ப நிலைகளை எய்தாமல் நீச வழிகளிலேயே இழிந்து நாசமாய்ப் போவது பழகி வந்த வாசனைகளின் பலன்களையே விளக்கி நிற்கின்றது. மையல் மருள்கள் வெய்ய இருள்களாயின.
பாலர் காலத்தை விளையாட்டில் கழிக்கின்றார், வாலிபர் மங்கையர் மையலில் கழிக்கின்றார்; கிழவர் கவலைகளில் உழலுகின்றார், ஒருவனாவது மேலான பரமனைக் கருதுவதே இல்லையென மனித மரபின் இழிநிலையை நினைந்து சங்கராச்சாரியார் பரிதாபமாய் இரங்கிப் பரிந்து வருந்தியிருக்கிறார்.
உயிர்க்கு உரிய உறுதி நலங்களை மறந்து துயர்க்கே வழி கோலி. எவ்வழியும் மையலாய் உழலுகிற உலகரை ஒட்டாமல் விலகித் தனியே ஒதுங்கிப் புனித நிலையில் பொருந்தி இனிய ஆன்ம சிந்தனை செய்து வருபவரே மேன்மையான துறவிகள், மேலான ஞானிகள், மெய்யான தவசிகள் என ஒளி பெற்றனர்.
தவயோகிகள் அகமுகமாய் ஆனந்த நிலையை நாடி இருத்தலால் சகமுகமான அவல நிலைகள் யாவும் நீங்கி அமைதியாய் அடங்கியுள்ளனர். மன அமைதி மாதவம் ஆகிறது.
ஏகநாயகனைக் காட்டிப் பேரின்பத்தை ஊட்டி வருதலால் ஏகாந்தம் யோகாந்தமாய் நேர்ந்தது. புனிதமான முனிவர்கள் இனிது இருக்குமிடமாதலால் தனிமை தெய்வீக நிலையமாய்த் தேசு வீசி ஈசனருளை எவ்வழியும் எய்தியுள்ளது.
The nurse of full-grown souls is solitude. (J. R. Lowell)
ஆன்ம ஞானம் நிறைந்த மகான்களுக்கு ஏகாந்தம் இனிய செவிலித் தாயாயுள்ளது என்னும் இது இங்கு அறிய வுரியது.
புனித நிலையில் புகநீ விரும்பின்
தனிமை அரிய தவமாய் - இனிமை
பலவும் அருளும் பரமன் ஒளியாய்
நிலவும் இதனை நினை.
என்கிறார் கவிராஜ பண்டிதர்.