மெய்யான பேரின்பம் எய்திப் பெருவாழ்வு உறுகின்றார் - தவம், தருமதீபிகை 970
நேரிசை வெண்பா
செய்ய தவமுடையார் தெய்வமென நின்றிந்த
வையமெலாம் வாழ்த்த வயங்கியே - மெய்யான
பேரின்பம் எய்திப் பெருவாழ்(வு) உறுகின்றார்
யாரெதிர் நேர்வர் அவர்க்கு. 970
- தவம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
செய்ய தவத்தைச் செய்பவர் தெய்வமாய்ச் சிறந்து திகழ்கின்றார்; உலகமெல்லாம் அவரை உவந்து தொழுது வணங்கி வாழ்த்துகின்றன; மெய்யான பேரின்ப வுலகை அடைந்து மேலான நிலையில் உயர்ந்து அவர் விளங்குகின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
உயிரும் பரமும் வேறு வேறு நிலையில் பிரிவு கொண்டிருப்பினும் இயல்பான உறவுரிமைகள் என்றும் தொடர்பாய்த் தோய்ந்து நிற்கின்றன. நீச ஆசைகள் நீங்கி மாசு கழியுந்தோறும் இது ஈசனாய் எழில் மிகுந்து ஒளி நிறைந்து வருகிறது. தவம் தழுவிவரச் சீவன் சிவமாய்க் கெழுமி எழுகிறது. பரனுக்கும் சீலனுக்கும் உரிய விழுமிய கிழமைகள் பரம தத்துவங்களாய் மருவி எவ்வழியும் இணைபிரியாது இணங்கியுள்ளன.
மாய மையல்கள் மாய்ந்து உள்ளம் தூய்மை தோயின் உயிர் பரமாய் உயர்கிறது. அத்தகைய சித்த சுத்தியில் நித்திய சுத்தனான நித்தன் பேரின்பமாய் நிலவி நிற்கிறான்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)
அத்துவித அநுபவத்தை அனந்தமறை இன்னமின்னம்
..அறியேம் என்னும்
நித்தியத்தை நிராமயத்தை நிர்க்குணத்தைத் தன்னருளால்
..நினைவுக் குள்ளே
வைத்துவைத்துப் பார்ப்பவரைத் தானாக எந்நாளும்
..வளர்த்துக் காக்குஞ்
சித்தினைமாத் தூவெளியைத் தன்மயமாம் ஆனந்தத்
..தெய்வந் தன்னை. 7
தன்னிலே தானாக நினைந்துகனிந்(து) அவிழ்ந்துசுக
..சமாதி யாகப்
பொன்னிலே பணிபோலும் மாயைதரு மனமேஉன்
..புரைகள் தீர்ந்தாய்
என்னினோ யான்பிழைப்பேன் எனக்கினியார் உன்போல்வார்
..இல்லை இல்லை
உன்னிலோ திருவருளுக்(கு) ஒப்பாவாய் என்னுயிர்க்கோர்
..உறவு மாவாய். 8
- 26. மண்டலத்தின், தாயுமானவர்
தன் மனத்தை நோக்கித் தாயுமானவர் இவ்வாறு கூறியிருக்கிறார். பாச பந்தங்கள் படியாமல் அது பரிசுத்தமானால் ஈசனுடைய சம்பந்தம் தனக்கு எளிதே எய்திவிடும் என அவர் உருகி உரையாடியுள்ள நிலை நுணுகி உணரவுரியது, ’தன்னை நினைவுக்குள் வைப்பவரைத் தானாக வளர்த்துக் காக்கும் சித்து’ என ஈசனைத் துதித்திருப்பது சீவ தத்துவத்தைத் தெளிவாய் வெளிப்படுத்தியுளது. இருள் ஒழிந்த பொழுது ஒளி பரந்து வருகிறது; மருள் மடிந்தவுடன் உயிர் பரமாய் ஒளிவீசி மிளிர்கிறது.
நேரிசை வெண்பா
மாய இருளும் மருளும் மடிந்தொழியின்
தூய பரஞ்சோதி தோன்றுமே - ஆய்வுயர்
இன்ப நிலையினை எய்தாதான் எய்துமே
துன்பப் புலைகள் தொடர்ந்து.
மனிதன் இன்ப சோதியாய் உயர்வதையும், துன்ப இருளாய் இழிவதையும் இது விழி தெரியத் தெளிவாய் விளக்கியுள்ளது.
தனது சுயமான ஆன்ம நிலையைக் கருதி வருவது தவமாய் வருகிறது; ஆன்மா ஒளியும் இன்பமும் உடையது; பரமான்மாவின் இனமான இதனை அணுகி நிற்பவன் உயர்வான தவசியாகி அதிசய நிலைகளை அடைந்து உலகம் அவனைத் தொழுது வழிமுறையே வாழ்த்தி வருகிறது.
தவநிலையில் எவன் புக நேர்ந்தானோ அப்பொழுதே அவனை விட்டு அவநிலைகள் யாவும் அடியோடு விலகி விடுகின்றன; உயர் நிலைகள் எல்லாம் அவனிடம் உரிமையாய் ஒளிசெய்து மிளிர்கின்றன. அவனுடைய கருத்தும் காட்சியும் பரத்தை நோக்கியே விருத்தியடைந்து நிற்றலால் பரமானந்தத்தை எளிதே அடைந்து மகிழ்கிறான். தவம் கூடத் தனிமுதல் கூடுகிறது.
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
கூடித் தவம்செய்து கண்டேன் குரைகழல்
தேடித் தவம்செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவம்செய்வ தேதம் இவைகளைந்(து)
ஊடிற் பலஉல கோர்எத் தவரே. 5
மனத்திடை நின்ற மதிவாள் உருவி
இனத்திடை நீக்கி இரண்டற வீர்ந்து
புனத்திடை அஞ்சும்போ காமல் மறித்தால்
தவத்திடை ஆறொளி தன்ணொளி யாமே. 7
- ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம், பத்தாம் திருமுறை, திருமூலர் திருமந்திரம்
தவத்தின் நிலையையும் அதனாலடையும் பலன்களையும் இவை தெளிவாய் விளக்கியுள்ளன. இதயம் குவியத் தவம் உதயமாகிறது.
மனமும் மதியும் புனிதமாய்த் தெளிந்துவரின் அவர் முனிவர் ஆகி உலகப் புலைகளை நீங்கி உயர்நிலையில் ஓங்கி எழுகின்றார். சீரிய தவம் திவ்விய நெறியே மேவுகிறது.
சீரை தைஇய உடுக்கையர்; சீரொடு
வலம்புரி புரையும் வானரை முடியினர்;
மாசற இமைக்கும் உருவினர்; மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்பெழுந்(து) இயங்கும் யாக்கையர், நன்பகல்
பலவுடன் கழிந்த உண்டியர்; இகலொடு
செற்றம் நீங்கிய மனத்தினர்; யாவதும்
கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத்
தாம்வரம்(பு) ஆகிய தலைமையர்; காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர், இடும்பை
யாவதும் அறியா இயல்பினர்; மேவரத்
துனியில் காட்சி முனிவர். - திருமுருகு
தவம் புரிந்து வாழுகின்ற முனிவர் நிலைகளை நக்கீரர் இவ்வாறு. செவ்வையாய் வரைந்து காட்டியுள்ளார். அரிய தவசியர் காட்சிகளால் பெரிய மாட்சிகள் தெரிய வருகின்றன.
தவத்தைத் தழுவுகின்றவர் சிவத்தைத் தழுவுவதால் விழுமிய மகிமைகள் விளைகின்றன; அதிசய ஆற்றல்கள் அவரிடம் உளவாகி உலகம் வியந்து காணும் வியப்புகளை விளைத்தருளி வித்தக சோதிகளாய் விளங்குகின்றனர்.
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். 264 தவம்
தவத்தால் வரும் அதிசய விளைவுகளை வள்ளுவர் இவ்வாறு குறித்திருக்கிறார். தாம் கருதியபடி எல்லாம் தவசிகள் செய்ய வல்லவர் என்பது இதனால் தெளிவாய்த் தெரிய வந்தது.
தவத்தால் ஆகாய கங்கையை இங்கே பகீரதன் கொண்டு வந்தது; தவத்தால் திரிசங்கு மன்னனுக்கு விசுவாமித்திரர் சுவர்க்கம் தந்தது, படைத்தல், காத்தல், அழித்தல்களைச் செய்வேன் என்று அவர் துணிந்து கூறினார். அவருடைய தவ மகிமையை வியந்து இந்திரன் முதலிய யாவரும் நேரே வந்து அவரைப் பணிந்து நின்றனர். அவர் ஆற்றிய அற்புதங்கள்.அளவிடலரியன.
தன்னையுடையவனைத் தவம் உன்னத நிலையில் உயர்த்தியருளும் என்பதை இவருடைய சரிதம் உணர்த்தி வருகிறது. அரிய மகிமைகள் யாவும் தவமுடையார்க்கு உரிமையாய் அமைகின்றன. அவரது தலைமை அதிசய நிலைமையாய் நிலவுகிறது.
அல்லல்களை நீக்கி நல்ல கதிகளை நல்குதலால் தவம் சீவர்களுக்குத் தேவ அமுதமாய் மேவியுளது. ஆனவரையும் அதனைச் செய்து மனிதர் மேலான நிலைகளை அடைய வேண்டும் என நூல்கள் உரைத்து வருகின்றன.
கலி நிலைத்துறை
அசும்பு பாய்வரை அருந்தவம் முடித்தவர், துணைக்கண்
தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர் தமக்குவிண் தருவான்,
விசும்பு தூர்ப்பன ஆமென, வெயிலுக விளங்கும்
பசும்பொன் மானங்கள், போவன வருவன பாராய்! 36
- சித்திரகூடப் படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்
சித்திரகூட மலையிலிருந்து அரிய தவங்களைச் செய்து முடித்தவரைப் பெரிய பொன்விமானங்கள் வந்து ஏந்திக் கொண்டு பரகதிக்குக் கொண்டு போகிற காட்சிகளை இது காட்டியுள்ளது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
மைஅறு விசும்பில், மண்ணில், மற்றுமோர் உலகில், முற்றும்
மெய்வினை தவமே அன்றி மே(று) உளதோ? கீழோர்
செய்வினை நாவாய் ஏறித் தீண்டலர்; மனத்தின் செல்லும்
மொய்விசும்(பு) ஓடம் ஆக, தேவரின் முனிவர் போனார். 61
- கங்கை காண் படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்
பரதனோடு கூடி வந்த தவசிகள் ஓடத்தில் ஏறாமல் ஆகாய மார்க்கமாய்க் கங்கா நதியைக் கடந்து வந்துள்ளனர். அது தவத்தின் மகிமையால் அமைந்தது; ஆகவே மண், விண் முதலிய எவ்வுலகிலும் தவமே செய்ய வுரியது; அதனைச் செய்தவரே திவ்விய கதிகளை எய்திச் சிறந்து திகழ்கின்றனர் எனக் கவி நாயகன் இங்கே உணர்த்தியிருப்பது ஓர்ந்து சிந்திக்க வுரியது.
சந்தக் கலி விருத்தம்
நஞ்சுகுடித் தாலுநவை யின்றுதவ நின்றா
லஞ்சியொளித் தாலுமா ணில்லைதவ முலந்தாற்
குஞ்சரத்தின் கோட்டிடையு முய்வர்தவ மிக்கா
ரஞ்சலில ரென்றுமற னேகளைக ணென்பார். 180
- முத்தி இலம்பகம், சீவகசிந்தாமணி
தவத்தின் மகிமையை இது வியனாய் விளக்கியுளது. நஞ்சைக் குடித்தாலும், அஞ்சத்தக்க கொடிய அபாயங்கள் நேர்ந்தாலும் தவம் காத்தருளும்; அதனையுடையவர் எவ்வழியும் சுகமாய் உய்தி பெறுவர் எனச் செய் தவவலிமையை இது உணர்த்தியுளது.
இத்தகைய தவத்தை மாந்தர் ஆந்துணையும் செய்து அதிசய நிலைகளை அடைந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கொள்ளாதிருந்தால் பிறவிப் பயனை இழந்த பேதைகளாய் இழிந்து மேதைகளால் எள்ளப்படுவர். தவத்தால் பவத்துயர் நீங்குகிறது.
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
தவத்திடை நின்றவர் தாமுன்னும் கன்மம்
சிவத்திடை நின்றது தேவர் அறியார்
தவத்திடை நின்றறி யாதவர்க் கெல்லாம்
பவத்திடை நின்றதோர் பாடது வாமே. 6
- ஆறாம் தந்திரம் - 13. அபக்குவன், பத்தாம் திருமுறை, திருமூலர் திருமந்திரம்
நேரிசை வெண்பா
அழப்போகான், அஞ்சான், அலறினால் கேளான்,
எழப்போகான், ஈடற்றார் என்றும் - தொழப்போகான்,
என்னே,இக் காலன்!நீ(டு) ஓரான், தவம்முயலான்,
கொன்னே இருத்தல் குறை. 37 ஏலாதி
தவத்தை மறந்து நின்றவருடைய பரிதாப நிலையை இவை பரிவோடு காட்டியுள்ளன. உரிய தவம் செய்து பெரிய பயன் பெறுக எனத் திருமூலர், கணிமேதையார் முதலிய மேதைகள் இவ்வாறு மேலான உறுதி நலங்களைப் போதித்துள்ளனர்.
இனைத்தோர் இளமையொ(டு) எனைப்பல கேள்வியும்
தவத்தது பெருமையின் தங்கின இவற்கு. - பெருங்கதை 1
உதயணனை அவந்தி மன்னன் இவ்வாறு வியந்திருக்கிறான். இளமையிலேயே அரிய பல கலைகளை அறிந்திருந்தமையால் அது தவத்தது பெருமை என்ற வியப்பு மீக் கூர்ந்தான்.
புரிமலர்த் துழாஅய் மேவன் மார்பினோய்
அன்னையென நினைஇ நின்னடி தொழுதனெம்
பன்மா ணடுக்க விறைஞ்சினேம் வாழ்த்தினேம்
முன்னு முன்னும்யாஞ் செய்தவப் பயத்தால்
இன்னு மின்னுமெங் காம மிதுவே. 13 பரிபாடல்
பலகாலமும் யாம்செய்த தவப்பயத்தால் உன்னைத் தொழுது வாழ்த்தும் பேறு பெற்றேன் எனத் திருமாலை நோக்கி நல்லெழுதியார் என்னும் சங்கப் புலவர் இங்ஙனம் பாடியிருக்கிறார்.