தொழீஇ யடவுண்ணார் தோழரிற் றுஞ்சார் - சிறுபஞ்ச மூலம் 37

நேரிசை வெண்பா

தொழீஇ யடவுண்ணார் தோழரிற் றுஞ்சார்
வழீஇய பிறர்பொருளை வௌவார் - கெழீஇக்
கலந்தபிற் கீழ்காணார் காணாய் மடவாய்
புலந்தபிற போற்றார் புலை! 37

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

இழிவான வேலைக்காரிகள் சமைத்துவைக்க அதனை அறிவுடையார் உண்ணமாட்டார், நண்பரது வீட்டில் தனியே புகுந்து உறங்கமாட்டார், மறந்த பிறரது பொருள்களை கவர்ந்து கொள்ள மாட்டார், தழுவி சிலரை நட்டபின்னர் அவரது கீழ்மையாகிய குணத்தை ஆராய்ந்து பார்க்கமாட்டார், சிலருடன் பகைத்த பின்பு அவரது கீழ்மைக் குணத்தை போற்றாது அவரை எதிர்த்துக் கெடுப்பார் பெண்ணே! இவற்றை ஆராய்ந்து பாராய்;

கருத்துரை:

இழிவான வேலைக்காரிகள் சமைத்த உணவை யுண்ணல் முதலியவற்றை அறிஞர்கள் செய்யார்.

தொழுத்தை – அடிமைப்பெண்; ஆண்பால் – தொழும்பன்; புலத்தல் பகைத்தல், கீழ், புலை –பண்பாகுபெயர்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Sep-25, 3:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 4

சிறந்த கட்டுரைகள்

மேலே