நலம்விற் றுணவுகொளும் பொற்றொடி நல்லார் நனிநல்லர் - நீதிநெறி விளக்கம் 83
இன்னிசை வெண்பா
கற்பில் மகளின் நலம்விற் றுணவுகொளும்
பொற்றொடி நல்லார் நனிநல்லர் - மற்றுத்தம்
கேள்வர்க்கும் ஏதிலர்க்கும் தங்கட்கும் தங்கிளைஞர்
யாவர்க்கும் கேடுசூ ழார் 83
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
தமது இன்பத்தைப் பிறர்க்கு விற்று உண்டு பிழைக்கும் பொன்வளை யணிந்த பொதுமகளிர் கற்பிலாத பெண்களினும் மிகவும் சிறந்தவர்களாவர். ஏனெனில், தம்மேல் அன்புடைய கணவர்க்கும், பிறர்க்கும், தங்கட்கும், தம் சுற்றத்தார் அனைவருக்கும் அவ் விலைமகளிர் கேடு செய்ய நினையார்.
விளக்கம்:
பொதுமகளிர் கேடு சூழார் என்றமையின், கற்பிலாக் குலமகளிரால் இத்தனை கேடுகளும் வரும் என்பது சொல்லாமலே விளங்கும்.
கருத்து:
கற்பிலாப் பெண்களினும் பொது மகளிர் நல்லவர்.