ஏந்தெழில் மிக்கான் கேளெனினும் மாதர்க்கு அயலார்மேல் ஆகும் மனம் - நீதிநெறி விளக்கம் 82
நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு)
ஏந்தெழில் மிக்கான் இளையான் இசைவல்லான்
காந்தையர் கண்கவர் நோக்கத்தான் – வா’ய்’ந்த
நயனுடை இன்சொல்லான் கேளெனினும் மாதர்க்
கயலார்மேல் ஆகும் மனம் 82
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
தன் கணவன் சிறந்த அழகுமிகுந்தவனும், இளமைப் பருவமுடையவனும், இசைபாடுதலில் வல்லமையுடையவனும், பெண்களின் கண்களைக் கவரும் பார்வையுடையவனும், பொருத்தமான மேன்மையான இனிய சொற்களையுடையவனும் ஆயினும் (கற்பிலாத) மாதருக்கு வேற்று மனிதர் மேல் மனஞ் செல்லும்.
விளக்கம்:
எண்பதாவது செய்யுளில் ஆசிரியர் காமங் கதுவப்பட்டார் தம் மனைவியர் எவ்வளவு அழகுடையவராய் இருப்பினும் பிறர் மனைவியர் மேல் ஆவல் கொண்டலைவர் என்பதற்கிணங்க, இச்செய்யுளில் கற்பிலா மங்கையர் தங் கணவர் எவ்வளவு நலங்கள் பொருந்தியவராயிருப்பினும் வேற்று மனிதர் மேல் விருப்பம் கொள்வர் என்றார். இவ்விரண்டானும் ஆசிரியர் கற்பிலா ஆணையும் பெண்ணையும் எடுத்துக் கூறினாரென்க!.
இச்செய்யுளுடன் பின்வரும் இரண்டு செய்யுளையுஞ் சேர்த்து மூன்று செய்யுளில் ஆசிரியர் கற்பிலா மகளிர் தன்மை கூறுகின்றார்!
கருத்து:
கற்பிலா மனைவியர் தங்கணவர் எவ்வளவு நலங்கள் பொருந்தியவராயிருப்பினும், வேற்று மனிதர் மேல் விருப்பங் கொள்வர்.