மாயப் பிணிப்பால் மயங்கி இழிந்துள்ளாய் துாயனாய்த் தோய்க தொடர்ந்து - வீடு, தருமதீபிகை 996

நேரிசை வெண்பா

ஆதியும் அந்தமும் இல்லாத அப்பரத்தின்
சோதிச் சுடராய்த் தொடர்ந்திருந்தாய் - மோதியெழு
மாயப் பிணிப்பால் மயங்கி இழிந்துள்ளாய்
துாயனாய்த் தோய்க தொடர்ந்து. 996

- வீடு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மூலமும் நடுவும் முடிவும் இல்லாத முழுமுதல் சோதியின் விழுமிய துளியாய் நீ ஒளி மிகுந்திருந்தாய்; அதிலிருந்து எப்படியோ நழுவி மாயப் பிறவிகளில் விழுந்து இழிந்து உழல்கின்றாய்; இந்தத் தீய தொடர்பிலிருந்து விரைந்து விலகித் தூயனாய் உயர்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பரமனுடைய நிலை எவராலும் அறிய அரியது; ஆயினும் எவர் எவ்வாறு வரைந்து கூறினும் அவ்வாறெல்லாம் அவன் அமைந்து நிற்கிறான்; என்றும் நிலையான நித்தியப் பொருளாதலால் காலமும் கணக்கும் நீத்த காரணன் என வேதங்கள் வியந்து புகழ்ந்து வருகின்றன. முடிவு காண முடியாதவனைத் தாம் கண்ட முடிவின்படி வடிவும் வண்ணமும் புனைந்து பேரும் சீரும் கூறிச் சமயவாதிகள் யாண்டும் வாதாடி வருகின்றனர்.

அதிசய நிலையில் துதிகொண்டு விளங்குகின்ற அந்தப் பரஞ்சோதியிடமிருந்தே சீவசோதிகள் பிரிந்து வந்துள்ளன. இந்தப் பிரிவு நிலையைத் தெரியாமையால் உயிரினங்கள் துயரினங்களாய் மறுகி யுழலுகின்றன. தெரிந்த பொழுது அந்த ஞானிகள் பரமனை நினைந்து உறவுரிமைகள் புரிந்து பரிந்து உருகுகின்றனர்.

கட்டளைக் கலித்துறை

பெருநீ ரறச்சிறு மீன்துவண் டாங்கு நினைப்பிரிந்து
வெருநீர்மை யேனை விடுதிகண் டாய்வியன் கங்கைபொங்கி
வருநீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவி(ன்)வெள்ளைக்
குருநீர் மதிபொதி யுஞ்சடை வானக் கொழுமணியே. 26

- 06 நீத்தல் விண்ணப்பம், எட்டாம் திருமுறை, திருவாசகம்

நீரைப் பிரிந்து நிலத்தில் விழுந்து துடிக்கும் மீனைப் போல் ஈசனைப் பிரிந்து பரிந்து பதைக்கும் பரிதாப நிலையை மாணிக்கவாசகர் இதில் குறித்திருக்கிறார். நினைப்பிரிந்த வெகுநீர்மையேன் என்று உள்ளமுருகி மறுகியிருப்பது ஓர்ந்து சிந்திக்கவுரியது

பெற்ற தாயைப் பிரிந்து போன சேய் பின்பு அதனைக் காண நேர்ந்தபோது அன்பால் உருகி அழுவது போல் பரமான்மாவின் உரிமையை உணர்ந்தபொழுது சீவான்மா கரைந்து கதறுகின்றது. தாய்மையும் சேய்மையும் வாய்மையாயுள்ளன.

உள்ளம் தெளிந்த ஞானிகள் உயிர்க்குயிரான பரமனுடைய உறவை உணர்ந்து எள்ளலான உலக பாசங்களை எல்லாம் ஒருங்கே உதறித் தள்ளி ஈசனையே எண்ணி இன்புறுகின்றனர். அவரது அன்புநிலை அவனைத் துதிசெய்யும் மொழிகளில் நன்கு ஒளிவீசி வருகின்றது.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

என்னுடை உயிரே என்னுளத் தறிவே
..என்னுடை அன்பெனும் நெறியாம்
கன்னல்முக் கனிதேன் கண்டமிர் தென்னக்
..கலந்தெனை மேவிடக் கருணை
மன்னிய உறவே உன்னைநான் பிரியா
..வண்ணமென் மனமெனுங் கருவி
தன்னது வழியற் றென்னுழைக் கிடப்பத்
..தண்ணருள் வரமது வேண்டும்.

- தாயுமானவர்.

இறைவனை நோக்கித் தாயுமானவர் இவ்வாறு முறையிட்டிருக்கிறார். உள்ளப் பரிவு உரைகளில் தெரிகிறது.

’உன்னை நான் பிரியாவண்ணம் வரம் அருளவேண்டும்’ என்று வேண்டியிருத்தலால் ஆண்டவனிடம் இவர் பூண்டுள்ள அன்புரிமையை ஈண்டு நாம் உணர்ந்து கொள்ளுகிறோம். சிந்தையடங்கித் தத்துவ சீலராய்ச் சித்த சாந்தியை அடைந்திருக்கின்றார்.

தத்துவ நிலையில் இம்மெய்த்தவர் உள்ளம் உயர்ந்துள்ள நிலையை உரைகள் தெளிவாயுணர்த்தி நிற்கின்றன. புனிதமான தவயோகியாதலால் சிவானந்த போகத்தை அனுபவித்துள்ளார். அவ்வுண்மை மொழிகள்தோறும் வெளியாய் வருகின்றது.

அத்தன், நித்தன், சுத்தன், முத்தன் என ஈசனுக்குப் பெயர்கள் அமைந்திருக்கின்றன. சகல சீவகோடிகளுக்கும் தந்தையாயுள்ளவன், என்றும் நிலையாயிருப்பவன், இயல்பாகவே தூய்மையுடையவன், பற்றுக்கள் யாதுமில்லாதவன் என்னும் நீர்மைகளை இப்பேர்கள் சீர்மையாய் விளக்கியுள்ளன. தலைமை நிலைமை தகைமை தன்மைகள் நேரே தெரிய வந்தன.

இத்தகைய முழுமுதல் பரமனை உழுவலன்போடு கிழமையாய்க் கருதி வருபவர் அவனது பழமையான பான்மையை வளமையாய் மருவி அதிசய மகிமைகள் பெருகி உயர்கின்றனர்.

நித்தியப் பொருளை நினைந்து வருகிற தத்துவ ஞானிகள் நித்திய முத்தராய் நிலவி நிற்கின்றனர். பாச பந்தகங்கள் ஒழிந்தவுடனே மனிதன் மகானாய் மகிமை தோய்ந்து எவ்வழியும் தெய்வீகம் வாய்ந்து ஈசனோடு தேசு மிகுந்து திகழ்கின்றான்.

Man and his greatness survive, lost in the greatness of God. [Watson]

மகத்துவம் உடைய மனிதன் கடவுளுடைய மகிமையில் கலந்து என்றும் சிரஞ்சீவியாய் வாழுகிறான் என வில்லியம் வாட்ஸன் என்பவர் இவ்வாறு திவ்விய நிலையைக் கூறியிருக்கிறார்.

மாசு இல்லாத மணிபோல் பாசம் இல்லாத சீவன் ஈசன் ஆகின்றது. பந்தமற்றபோது அந்தமில்லாத ஆனந்த வீட்டை என்றும் சொந்தமாய் அது அடைந்து மகிழ்கிறது.

மாய மருள் தூய மதி ஒளியால் ஒழிந்து உயர் கதி வெளியாகிறது. தேகத்துள் இருக்கிற சீவன் ஈசன் உறவு என்று ஒருவன் உணர நேரின் உலக பாசம் அவனை விட்டு ஒழிந்து போகிறது. உயர்ந்த தேசு அவனிடம் ஒளிவீசி வருகிறது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
(காய் வருமிடத்தில் விளச்சீர் வரலாம்)

பாசம் இன்றி உள்உணர்வைப் பதினைங் கடிகை பூசிக்கில்
ராச சூய இலக்க(ம்)நிகர்; இவ்வா(று) ஒருநாள் அருச்சிக்கில்
ஆசி லாத பரஒளியில் அமர லாகும்; இதுதானே
ஏசில் பரம யோகமிது தானே பரம கிரியையுமே.

- வாசிட்டம்

தனது ஆன்மாவை அகமுகமாய் நோக்கிச் சிறிது போது கருதி யுருகினால் பலகோடி வேள்விகள் செய்த பெரிய புண்ணியம் அவனை மருவுகிறது என மாதவர்கள் உறுதி செய்துள்ளனர். உயிர் நிலையை உண்மையாய் உணர்; உயர் நிலை எண்மையாய் வரும். ஆன்ம அறிவு பரமான்வை நேரே அருளுகிறது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Apr-22, 10:53 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே