பிறந்த நாள் இன்று பிறந்த நாள்

பிறந்த நாள் இன்று பிறந்த நாள்…!

இன்னும் இரண்டு நாளில் எங்கள் வீட்டில் மிகப்பெரிய “விழா” ஒன்று நடத்தலாம் என்றிருக்கிறோம், மெல்லியதாய் பூசியிருந்த சிவப்பு நிற லிப்ஸ்டிக்
உதட்டில் ஒட்டாதவாறு சொன்னாள் காமாட்சி.
அப்படியா மேடம்..! வாழ்த்துக்கள் எங்களுக்கெல்லாம் அழைப்பு உண்டா? காமாட்சிக்கு எதிர்புறமாய் உட்காந்திருந்த அந்த அபார்ட்மெண்ட் குடியிருப்பு வாசிகளின் குடும்ப தலைவிகளின் கேள்வி.
நீங்க இல்லாத பங்சனா? நீங்க எல்லாரும்தான் முக்கியமான கெஸ்ட்.
அதானே பார்த்தேன், நம்ம ‘அபார்ட்மெண்ட் லேடீஸ் அசோசியேசன்’ தலைவி மேடம் வீட்டுல ஒரு ‘பங்சன்’ அப்படீன்னா, எங்களுக்கு அழைப்பு இல்லாமயா? ஒரு பெண் கொஞ்சம் கூடுதலாகவே இந்த அபர்ட்மெண்ட்வாசிகளின் லேடீஸ் கிளப் தலைவரான ‘காமாட்சியை’ குளிர் படுத்தினாள்.
“க்கும்” எதிர்பார்த்தது போலவே ஒரு கணைப்பு குரல், எதிரில் உட்கார்ந்திருந்த அபார்ட்மெண்ட் பெண்களின் கூட்டத்தில் இருந்து ஒலித்தது.
அது யாராய் இருக்கும்? என்பதும் காமாட்சிக்கு தெரியும் போலிருக்கிறது, ஆனால் அதை கண்டு கொளாமல் தன காதோரமாய் இருக்கும் ஒரு சில மயிர்களை ஒதுக்கி வைப்பது போல கவனத்தை திருப்பி கொண்டாள்.
‘க்கும்’ கணைத்தவள், அருகில் உட்கார்ந்திருந்த இரண்டு மூன்று பெண்கள் அவளுடன் சேர்ந்து இதே ‘சத்தத்தை’ மீண்டும் ஒலி பரப்பினார்கள். இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்வது அவர்கள் அனைவரும் காமாட்சியின் எதிர்கட்சி அல்லது கருத்து உடையவர்கள்.அதற்கு தலைவியாய் இருந்தவள் தான் “க்கும்” என்று முதலில் கணைத்தது.
சும்மா விழா வைக்கிறோமுன்னு சொன்ன உடனே எல்லாரும் பறக்கறீங்க? முதல்ல அப்படி என்ன விழாவாம்? அதை கேளுங்க? கணைத்த பெண் தன் கருத்தை சத்தமாக வைத்தாள்.
ஆமா மேடம் பாக்கியலட்சுமி மேடம் கேக்கறது சரிதானே, என்ன விழாவுன்னு சொல்லாம எப்படி? அதுவும் பாக்கியலட்சுமி அவங்க உங்க மருமக, அவங்களுக்கே தெரியாம ஒரு ‘விழாவுன்னு’ சொல்றீங்க.
காமாட்சி இந்த இடத்தில் தன் எதிர்ப்பை பதிவு செய்ததில் வியப்பில்லை. இங்க நாம எல்லோரும் ஒண்ணுதான், “லேடீஸ் கிளப் மெம்பர்ஸ்” அவ்வளவுதான். இதுல மருமக அவ இவ அதெல்லாம் பார்க்கறதில்லை.
நீங்க ஒண்ணும் பார்க்கவேண்டி நான் இந்த கேள்விய கேட்கலை, ஒரு தலைவியாய் இருக்கறவங்க வீட்டுல ஒரு ‘விழா’ வச்சிருக்கேன் அப்படீன்னு பொத்தாம் பொதுவா சொன்னா யாரு போவா? என்ன விழா எதுக்கு விழா அது உங்க குடும்ப விழாவா, இல்லை நம்ம லேடீஸ் கிளப் விழாவா? அப்படீன்னு விளக்கமா சொல்லணும்னுதான் கேட்கறோம்.
அதுவும் சரிதானே..என்பது போல காமாட்சிக்கு ஆதரவான பெண்களிடமிருந்து ஒரு பார்வை காமாட்சியின் மீது விழுந்தது.
அதுவும் சரிதான், ஆனா இப்ப ‘ஜஸ்ட்’ பத்து நிமிசத்துக்கு முன்னாடிதான் முடிவு பண்ணேன், அதை எங்க வீட்டுல பேசி எல்லாம் சரியான பின்னாடிதான தெரிவிக்க முடியும். அதே நேரத்துல இந்த ‘விழா’ கண்டிப்பா நடக்கும், ஆனா அதை நாளைக்கு சாயங்காலம் ஒவ்வொரு வீடா வந்து அறிவிச்சு அழைப்பேன். இன்னொண்ணு சொல்லிக்கறேன், பத்திரிக்கைக்காரங்களை அழைக்க போறேன். அதனால நீங்க எல்லோரும் கண்டிப்பா வந்துடணும். ஏனா பத்திரிக்கைகாரங்க உங்க கூட பேசுவாங்க.
அவ்வளவுதான் பத்திரிக்கைகாரர்களும் வருவார்கள் என்று சொன்னதும் காமாட்சியின் ஆதரவான கூட்டம் “ஹோவென” கைதட்டி ஆர்ப்பரித்தது.
பாக்கியலட்சுமிக்கு உடம்பு முழுக்க எரிந்தது போலிருந்தது. சதிகாரி, இப்ப என்ன விழாவுன்னு சொல்லிட்டா நான் என் புருசங்கிட்ட போய் சொல்லி நிறுத்திடு வேன்னு நினைக்கிறா? வரட்டும் என் புருசன் இவ பையன், இப்படி எண்ணியவள் தன் முகத்தை மட்டும் சிரித்தவள் போல் வைக்க படாதபாடுபட்டாள்.
இன்னும் சில பெண்கள் அதே அபார்ட்மெண்டில் வசிப்பவர்கள்தான் இவர்களின் இரு குழுக்களையும் வேடிக்கை பார்ப்பது போல் பார்த்தார்கள். அவர்களுக்கு நீண்ட காலமாய் ஒரு சந்தேகம் உண்டு. இந்த ‘மாமியார் மருமகள்’ பேசி வைத்து கொண்டு நாடகமாடுகிறார்களோ? என்று. காரணம் நீண்ட காலமாக காமாட்சியே இந்த குழுவுக்கு தலைவியாக இருந்து கொண்டிருப்பதும், மருமகள் எதிர்த்து போட்ட்டியிட்டு எதிர்கட்சியாய் இருப்பதும் குடும்பமே செய்து கொண்ட திட்டமாக இருக்கலாம் என்பது அவர்களின் சந்தேகம். அது மட்டுமல்ல மாமியாரை அருகில் வைத்து கொள்ள விரும்பாத காமாட்சி இதே அபார்ட்மெண்டில் மகனையும் மருமகளையும் இரண்டு மூன்று வீடு தள்ளி இதே அபார்ட்மெண்டில் வாங்கி கொடுத்து இருக்கிறாள். அதனால் ஆளும், எதிர்கட்சியாக இவர்களே இருந்து கொண்டிருக்கிறார்கள்.
அன்று இரவு தன் கணவனிடம் காமாட்சி சொன்னாள் “ஏங்க நாளைக்கு சாயங்காலம் போய் உங்கம்மாவை” கூட்டிகிட்டு வந்திடணும்.
அதிர்ச்சியாய் பார்த்தார் காமாட்சியின் கணவர் பரசுராமன், என்ன காமாட்சி மனசு மாறிட்டியா? பார்த்தியா உனக்கும் அறுபது தொட்ட உடனே எங்கம்மாவை கூட வச்சுக்கணும்னு ஆசை வந்திடுச்சுல்ல.
சே…சும்மாயிருங்க, உங்களுக்கு..முறைத்தவள், நாளை மறு நாள் என்ன நாள்?
நாளை மறு நாள்…இன்னைக்கு வெள்ளிக்கிழமை, நாளை சனி, ம்..ஞாயிறு
முறைத்தவள் உங்களுக்கு கொஞ்சமேனும்…, இழுத்தவள் நாளை மறு நாள் உங்கம்மாவுக்கு ‘பிறந்த நாள்’ வருது. அதுனால நாளைக்கு சாயங்காலம் போய் உங்கம்மாவை கூட்டிட்டு வந்து நம்ம வீட்டுல வச்சுக்குவோம்.
இத்தனை வருசம் எங்கம்மா பிறந்த நாள் பார்த்துட்டுதான இருந்திருப்பாங்க, இந்த வருசம் மட்டும் என்ன?
அப்படி கேளுங்க..! காமாட்சியின் முகத்தில் புன்னகை, உங்கம்மாவுக்கு தொன்னூத்து ஒன்பது முடிஞ்சு நூறாவது வயசு ஆரம்பிக்குது. அவங்களை நாம கூட்டிட்டு வந்து வச்சுட்டு மறு நாள் “கிரேண்டா பிறந்த நாள்” பார்ட்டி ஒண்ணு வைக்கப்போறேன். நம்ம அபார்ட்மெண்ட்ல இருக்கற எல்லாரையும் வரவழைச்சு, பத்திரிக்கைகாரங்களையும் கூப்பிட்டு நடத்த போறேன்.
பரசுராமனுக்கு தன்னுடைய அம்மாவை வைத்து, காமாட்சி இப்படி ஒரு திட்டத்தை வைத்திருப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. பிரமையுடன் நின்று கொண்டிருந்தவர் நம்ம பையன் நாராயணங்கிட்ட பேசிட்டியா?
உங்களுக்கு கொஞ்சமாவது…? மீண்டும் முறைத்தவள் அவன் பொண்டாட்டி அதுதான் பாகியலட்சுமி ரெடியா இருக்கா? என் திட்டத்தை எப்படியாவது உடைக்கணும்னே, அதனால நாளைக்கு சாயங்காலமா உங்கம்மாவை வீட்டுல கொண்டு வந்து வச்சுட்ட பின்னால, எல்லாரையும் போய் கூப்பிடற மாதிரி உங்க பையனையும் மருமகளையும், அழைச்சா போதும்.
பரசுராமனுக்கு இந்த அரசியல் புரியவில்லை, என்றாலும் தன் மகனிடம் அதுவும் காமாட்சி மகனிடமே மறைப்பது சரியில்லையோ, என்று நினைத்தாலும் ஒன்றும் பேசவில்லை.
இவர்களின் உரையாடல் இப்படி இருக்க, அபார்ட்மெண்டில் இரண்டு வீடு தள்ளி காமாட்சியின் மகன் நாராயணனிடம் பொரிந்து கொண்டிருந்தாள் பாக்கியலட்சுமி. உங்கம்மா என்னமோ பிளான் வச்சிருக்குது, ஆனா சொல்லமாட்டேங்குது. நீங்க போய் உங்கம்மா கிட்ட பேச்சு கொடுத்து பாருங்க, பாத்துடலாம், குடும்பத்துல நடத்துற பங்சன்” உங்களுக்கே தெரியலையின்னா?
நாராயணனுக்கு நன்கு புரிந்தது தன் மனைவி அம்மா வீட்டில் நடக்கும் விழாவுக்காக கவலைபடவில்லை. அதன் மூலம் ‘மாமியார்’ இன்னும் பிரபலமாகி விடக்கூடாது என்றுதான் கவலைப்படுகிறாள் என்று.
எங்கம்மா உங்க ‘லேடீஸ் கிளப்’ முன்னாடியே சொல்லாம இருக்கும்போது நான் போய் கேட்டா சொல்லிடுமா? அப்பாவியாய் கேட்டான்.
அதுதான் உங்க சாமார்த்தியம், அது கூட முடியலையின்னா உங்க கூட பதினைஞ்சு வருசமா குடும்பம் நடத்தி….?
நாராயணனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, சரி அம்மாகிட்ட முயற்சி பண்ணி பார்க்கறேன், வெளியே வந்தான்.
“இங்க பாருங்க” உங்க பையன் இப்ப வந்தாலும் வருவான், அவன் பொண்டாட்டி விசயத்தை கறக்கறதுக்கு இங்க அனுப்பி வைப்பா, உஷாரா இருங்க, நானும் சொல்ல மாட்டேன், நீங்களும் மூச்சு விடக்கூடாது.
அவர் தலையாட்டிய நிமிடம் கதவு தட்டப்பட்டது.
தோல்வியுடன் திரும்பிய நாராயணனை பார்த்து பாக்கியலட்சுமிக்கு இன்னும் கோபம்தான் அதிகரித்தது. உங்க அம்மாகிட்ட இருந்து ஒரு செய்தியை வாங்க துப்பில்லை…பொருமிக்கொண்டே இருந்தாள்.
என்ன மேடம் திடீருன்னு அம்மாவை கூட்டிட்டு போறேன்னு சொல்றீங்க? நாங்க அவங்க பிறந்த நாளை எங்க “இல்லம்” சார்ப்பா ‘கிரேண்டா” கொண்டாடலா முன்னு இருந்தோம். ‘இல்லத்து நிர்வாகி’ காமாட்சியிடம் சொல்லி கொண்டிருக்க, ஒரு நாள் மட்டும்தாங்க, மறு நாளே கொண்டு வந்து விட்டுடுவோம், கவலைப்படா தீங்க, ஆறுதலாய் சொல்லி விட்டு ‘சட்டு புட்டென’ வயதாகி தளர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்தபடி இருந்த அந்த ‘அம்மையாரை’ மெல்ல ஒரு நகரும் நாற்காலியில் உட்கார வைத்து காருக்குள் கூட்டி வந்தாள். அவளது கவலை எல்லாம் தங்கள் அபர்ட்மெண்டில் இருக்கும் பிளாட் வீடுகளில் ஒருவரும் பார்க்கும் முன் மாமியாரை வீட்டுக்குள் கொண்டு போய் விட வேண்டும். இது மட்டுமே மனதுக்குள் இருந்தது.
அன்று இரவு அபார்ட்மெண்ட் முழுக்க ஒரு வீடு விடாமல் இருந்த நூற்றைம்பது வீடுகளுக்கும் சென்று எங்கள் மாமியாரின் நூறாவது பிறந்த நாளை கொண்டாட தீர்மானித்திருப்பதாகவும், எல்லாரும் வந்து அவரிடம் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு சொன்னாள் காமாட்சி, கூடவே பரந்தாமனும்.
அன்று இரவு நாராயணனுக்கு பாக்கியலட்சுமியிடம் இருந்து “மண்டகப்படி” நடந்தது உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை.
மறு நாள் காமாட்சியின் வீட்டில் சரியான கூட்டம், கிட்டத்தட்ட நூறு பேருக்கு மேல் வரிசையாக நின்று ‘சக்கர நாற்காலியில்’ உட்கார்ந்திருந்த அந்த அம்மையா ரிடம் ஆசிர்வாதம் பெற்று சென்று கொண்டிருந்தனர். அதுவும் எதிரில் பத்திரிக்கை யாளர்களின் “போட்டோஜெனிக்குகள்” மின்னியபடி இருக்க, இவர்கள் தங்களை நன்றாக ‘போட்டோ பிடிக்க’ அட்ஜெஸ்ட் செய்தபடியே ஆசிர்வாதம் வாங்குவது போல வந்து சென்றார்கள்.
நல்ல ‘டிபனுக்கும்’ ஏற்பாடு செய்திருந்ததால், வந்தவர்கள், திவ்யமாய் சாப்பிட்டு விட்டு காமாட்சியையும், பரசுராமரையும் புகழ்ந்து தள்ளியபடி சென்று கொண்டிருந் தார்கள். “இருந்தா இப்படி இருக்கணும்” தன்னோட அம்மாவை நூறு வயசு வரைக்கும் பத்திரமா வச்சு காப்பத்தறதும், அதுக்காக விழா எடுக்கறது..அடேயப்பா….!
மறு நாள் இவர்களின் “பிளாட்டில்” நடந்து முடிந்த இந்த கோலாகலம், மறு நாள் பத்திரிக்கைகளில் வந்து இவர்களை அந்த அபார்ட்மெண்ட் முழுக்க புகழுரை மேல் நோக்கி பறக்க செய்திருந்தது. ஆனால்..!
அதற்கு அடுத்த மறு நாள் அதே ‘நூறாவது வயதை’ எட்டி பிடித்த காமாட்சியின் மாமியாருக்கு “இல்லத்தில்” பெரு விழாவாக எடுக்கப்பட்டு, ஆங்கில பத்திரிக்கைகள் முதற்கொண்டு வரவழைக்கப்பட்டு ‘செலவுகள்’ எல்லாவற்றையும் தானே பொறுப்பேற்று நடத்தி, இத்தனை வருடங்களாக “எங்களுக்கு சொந்தமான பாட்டியை” ‘இல்லத்தில்’ வைத்துதான், என் மாமியார் பராமரிக்கிறார்கள்” என்று பத்திரிக்கைக்கும் பேட்டி கொடுத்து தன் மாமியாரான “லேடீஸ் கிளப்” தலைவியை பழி வாங்கிய சந்தோசத்தில் இருந்தாள் பாக்கியலட்சுமி.
இல்லத்து நிர்வாகி போனில் பவ்யமாய் சொல்லி கொண்டிருந்தார் காமாட்சியிடம் “மேடம்” நாங்க என்ன் பண்ணறது? இங்க வச்சு ‘சிம்பிளா’ நாங்களே கொண்டாடியிருப்போம். ஆனா அவங்கதான் நல்லா ‘கிரேண்டா’ செஞ்சு உங்க இல்லத்துக்கு விள்மபரமும் ஏற்பாடு செய்யற மாதிரி செஞ்சு தர்றேன்னு பொறுப்பெடுத்து செஞ்சுட்டாங்க. எங்களால ஒண்ணுமே சொல்ல முடியலை, செய்ய முடியலை, எங்களை மன்னிச்சிருங்க.
அடுத்த வருடத்தில் “நூற்றி ஒன்றாவது” வயதை எட்டி இருந்த அந்த அம்மையாருக்கு அன்று மிகவும் சிம்பிளாக “இல்லத்தில்” வைத்துதான் பிறந்த நாள் விழா நடந்தது. அதில் முக்கியமாக கலந்து கொண்டவர்கள் இருவர் பரந்தாமன், மற்றும் அவரது மகன் நாராயணன். நாராயணனின் குழந்தைகளை கூட பாக்கியலட்சுமி கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (20-Feb-25, 3:33 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 24

மேலே