காற்றில் கரைந்த கனவு

கவிதாவின் நீண்ட நாள் கனவு, ஆசை இப்போது நிறைவேறும் நிலைக்கு வந்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.
ஆமாம் ! திருமணம் ஆன்வுடன் தனக்கென ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு ,தனது கணவன் குழந்தைகளோடு பிக்கல் பிடுங்கல் இன்று மகிழ்வோடு வாழ வேண்டும் என்பதே அந்தக் கனவு. தன்னுடைய தோழிகள் பலபேர் கூட்டுக் குடும்பத்தில் மாட்டிக்கொண்டு வேதனைப் படுவதைப் பார்த்தபோது இப்படி ஒரு ஆசை அவள் உள்ளத்தில் எழுந்தது என்றால் அது நியாயம் தானே ?
அந்தக் கனவு திருமணம் முடிந்து ,இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்னால் நிறைவேறும் என்பதை அவள் எதிர்பார்க்கவில்லை தான். அதுமட்டுமல்ல தனது கணவர் அவரது பெற்றோருக்கு ஒரே மகன்தான் என்பதும், மாமனாரும் கல்யாணத்திற்கே முன்பே இறந்துவிட்டதாலும், வேறு உறவுகள் ஏதுமின்றி நிம்மதியாகத் தான் வாழ்ந்து கொண்டு இருந்தாள் கவிதா. எனவே தனது கனவுகளை மறந்துதான் இருந்தாள் என்பதும் உண்மைதான். ஆனால் இப்பொழுது அதற்கான நேரமும். பொருளாதாரமும் கைகூடி வந்து தனது பழைய கனவை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் வந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெற முடியும் போலும். அப்படித்தான் இப்போது ஆகிவிட்டது.நன்றாக இருந்த மாமியார் திடீரென மாரடைப்பால் இறந்து போனது நெஞ்சத்தில் பாரத்தை ஏற்றி வைத்தாலும், தனது மகன் தனக்குப் பின்னால் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காகச் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணம் ,இப்போது அவளது கனவினை நிறைவேற்றிக் கொள்ளும் நிலைக்கு அவளைக் கொண்டு வந்திருக்கிறது. ஆமாம் ! சிறுகச் சிறுகச் சேர்த்த மாமியார், தான் இறந்த பொழுது ஒரு ஐந்து இலட்சத்தைச் சேர்த்து வைத்துவிட்டுதான் மறைந்திருக்கிறார்..
‘ஏங்க… அத்தை சேர்த்து வைத்திருக்கும் பணத்தை என்ன செய்யலாமுன்னு நினைக்கிறீங்க..?’
‘எனக்குன்னு எந்த ஆசையும் இதுவரை இருந்த்தில்லை. அதுவுமில்லாமல் அம்மா இவ்வளவு பணம் சேர்த்து வைத்திருப்பாங்கன்னு நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை . அதனாலே நீயே சொல்லு… உனக்குன்னு கனவு ஏதாவது இருக்குதா ?’
‘நமக்கு இரண்டும் ஆண் குழந்தைகளாகப் போயிடுது… அதுகளைப் படிக்க வைக்கணும்…..ஆனா நமக்குன்னு சொந்த வீடுன்னு எதுவும் இல்லை. அதனால இந்த பணத்தை வைத்து நமக்குன்னு ஒரு சொந்த வீட்டைக் கட்டிக்கலாமே !’
‘நல்ல யோசனைதான். ஆனா இப்போது வீட்டுமனை விற்கிற விலையிலே இந்தப் பணத்தை வைத்து ஒரு சென்ட் நிலங்கூட வாங்க முடியாதே ?’
‘அதுக்கு நான் ஒரு திட்டம் வைத்திருக்கேன் ‘
‘என்ன அது ?’
‘அதாவது அப்பாவுக்கு பூர்வீக சொத்துன்னு ஒரு ஆறு செண்ட் நிலம் இருக்கு. அதை இரண்டா பிரிச்சா நமக்கு மூணு சென்ட் நிலம் கிடைக்கும். அதிலே தாராளமா வீடு கட்டிக்கிடலாமே?
‘நல்ல யோசனைதான் .அதுக்கு உன் அம்மா, அப்பா ஒத்துக்கணும், உங்க அக்கா ஒத்துக்கணுமே ‘
‘அதை நான் பார்த்துக் கொள்ளுறேன். நீங்க சரின்னு மட்டும் சொல்லுங்க ‘
‘எனக்கு இதுல மறுப்புன்னு சொல்ல என்ன இருக்கு.. நீ ஆசைப் படுற ..முயற்சி செய்து பாரு ‘

மறுநாளே தன்னுடைய அம்மா அப்பாவை பார்க்கக் கிளம்பிவிட்டாள். அவளுடைய நல்ல நேரம்,எப்போதுமே ஊர் சுற்றப் போயிருக்கும் அப்பா ,வீட்டிலே இருந்தார்.அம்மாவும் பீடி இலை கொடுக்காத காரணத்தால், வழக்கமா பக்கத்து வீட்டுக்குப் பீடி உருட்டச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தாள்.
‘என்னடி கவிதா திடுதிப்பென்று வந்து நிற்கிறே ?’
‘வரணுமுன்னு தோணிச்சு வந்துட்டேன். ஏன் வரக்கூடாதா?’
‘இல்ல .. காரணம் இல்லாம வரமாட்டியே? அதான் ‘ என்றார் அப்பா.
‘ஆமாப்பா…. அது என்னவோ உண்மைதான்.ஒரு காரணத்தோடுதான்
வந்துள்ளேன். ஆமா ! அக்காவை எங்கே காணோம் ?’
‘அவளா ? அவா பொண்ணுக்கு ஏதோ வாங்கணுமுன்னு.. வீட்டுக்காரரைக் கூட்டிக் கொண்டு கடைக்குச் சென்றிருக்கிறாள். அது கிடக்கட்டும். நீ வந்த வேலையை முதலில் சொல்லு ?’ என்றாள் அம்மா.

கவிதா தனது மாமியார் இறக்கும் போது விட்டுச் சென்ற பணத்தைப் பற்றியும், அதனைக் கொண்டு வீடு கட்டிக் கொள்ள ஆசைப்படுவதாகவும், அதற்காக அப்பா பெயரில் உள்ள நிலத்தைப் பிரித்து எழுதிக் கொடுக்கும் படியும், அப்படிக் கொடுத்தால் அதில் ஒரு வீடு கட்டிக் கொள்ள விருப்பதாகவும் கூறினாள்.
‘ரொம்ப மகிழ்ச்சி. வீடு கட்டிக்கணுமின்னு நீ வைத்திருந்த ஆசையை நினைத்தா பெருமையா இருக்கு .என்னங்க நீங்க என்ன சொல்றீங்க ‘ என்று தனது கணவரிடம் கேட்டாள்.
‘இதுல சொல்ல என்ன இருக்கு? நல்ல செய்தி தானே ?’ என்றவர்,
‘நீங்க பேசிட்டு இருங்க..எனக்கு கொஞ்சம் அவசரமா வேலை இருக்கு, போயிட்டு வந்துடுறேன்’ என்றவர், பதிலை எதிரபார்க்காமல், கிளம்பிச் சென்றுவிட்டார்.
‘என்னம்மா இது? எதுவும் சொல்லாமல் அப்பா பொசுக்குனு கிளம்பிப் போயிட்டார்.’ என்றாள் கவிதா.
‘அவர் குணமே இதுதானே ? குடும்ப விசயத்திலே எப்போ அவர் முழு மனசோட கலந்து இருக்கிறார். பட்டும் படாமலும் இருப்பதுதானே அவர் வழக்கம் ‘ என்றாள் அம்மா.
அவரும் போயிட்டு வரட்டும். உன் அக்கா சித்ராவும் வரட்டும். எல்லோரும் கலந்து பேசி ஒரு முடிவு எடுக்கலாம் . வா ! பசியோடு இருப்பே , ஒரு வாய் சாப்பிடு ‘ என்றவள் எழுந்து சமையல் அறைக்குள் சென்றாள்.
சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போதே, சித்ராவும் வந்து விட்டாள்.
‘ஏய் கவிதா ! எப்படி இருக்கே?’ எப்போடி வந்தே ?’ என்றவளிடம் ஒரு உற்சாகம் இருக்கத்தான் செய்தது. பின்னே இருக்காதா உடன் பிறந்த தங்கை அல்லவா ?
‘ நீங்க கடைக்குக் கிளம்பிப் போன கொஞ்ச நேரத்திலேயே நான் வந்துட்டேன் ‘
‘அலைஞ்சுட்டு வந்ததுலே ரொம்ப பசி. சாப்பிட்டு விட்டு உட்கார்ந்து பேசலாம் ‘ என்றவள் உள்ளே சென்று விட்டாள்.

கவிதா தன்னுடைய ஆசைகளைக் கூறியதைக் கேட்ட சித்ரா மலைத்துவிட்டாள் என்றுதான் சொல்லவேண்டும். என்ன சொல்வது என்று தெரியாமல் சற்று திகைத்துப் போனாள்.
‘என்னடி இது? திடுதிப்பென்று வந்து இப்படி சொல்றே ?’
‘எப்போ இருந்தாலும் நாம இரண்டு பேருந்தானே , பிரித்துக் கொள்ளப் போகிறோம். அதை இன்றைக்கே பிரிந்தால் என்ன? என்றாள் கவிதா.
‘அதுக்கில்லைடி … உன்னுடைய கல்யாண செலவுக்கு கொடுத்த பணமே இன்னும் திரும்பி வரலை ! அப்பாவும் அம்மாவும் அதைப் பற்றியே பேச மாட்டேங்கிறாங்க. அப்படி இருக்கிறப்போ அந்த ஆறு சென்ட் நிலத்திலே பாதியைக் கேட்டா எப்படி நியாயமாகும் ?’ என்றவள் குரலில் பொங்கி நின்ற கோபத்தை உணர்ந்தாலும், அதை எதையும் கண்டு கொள்ளாத கவிதா,
‘அது உனக்கும் அப்பாவுக்கும் உள்ள கொடுக்கல் வாங்கல், அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. எனக்கு இப்போ பாதி பங்கு வேணும் .’ என்று சட்டென்று தனது முடிவைச் சொன்னாள் கவிதா.
‘சரி !சரி ! உங்களுக்குள் பிரச்சனை வேண்டாம். அப்பா வரட்டும் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் ‘ என்று ஒரு முற்றுப் புள்ளி வைத்தாள் அம்மா !

அவசர வேலை என்று கூறிவிட்டு வெளியே சென்றவர், மாலையில் தான் வீடு திரும்பினார்.
‘ஏங்க இதோ வர்றேன்று போனவங்க இவ்வளவு லேட்டாகவா திரும்பி வருவது ?’ என்றாள் கவிதாவின் அம்மா.
‘போன இடத்திலே நேரமாகி விட்டது. என்ன பண்ணுறது ?’
‘நல்ல நேரமாச்சு… இங்கே கவிதாவுக்கும், சித்ராவுக்கும் பெரிய பிரச்சனையே நடந்திட்டு இருக்கு தெரியுமா? ‘ என்றாள்
என்னவென்பது போல் இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்தார்.
‘அப்பா ! நானே சொல்றேன்’ என்றாள் கவிதா.
‘இல்லை இல்லை ! நான் தான் சொல்வேன்’ என்று அடம்பிடித்த சித்ரா , எல்லாவற்றையும் ஒன்று விடாமல் எடுத்துக் கூறி , தனதுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் கூறினாள்.
‘சரி. இப்போ எதுக்கு தகராறு .அந்த ஆறு சென்ட் நிலத்துக்காகத் தானே?’
‘ இது வெறும் பிரச்சனை இல்லை ! உரிமை’ என்றாள் கவிதா.
‘கொஞ்சம் பேச்சை நிறுத்துறீங்களா ‘ என்று சற்று அதட்டலாகவே கூறினார் அப்பா.
‘இரண்டு பெண் பிள்ளைகளையும் எத்தனையோ சிரமங்களுக்கு இடையில் படிக்க வைச்சோம். ஆனா இரண்டு பேரும் பொறுப்பாக படித்து, ஒரு வேலைக்குப் போய் நாலு காசு சம்பாத்தியம் பண்ணி அம்மா, அப்பா வுக்குக் கொடுக்கத் துப்பில்லை. சித்ரா படிப்பை பாதியிலே விட்டுட்டா ? கேட்டா படிப்பு வரலைன்னு சொல்லிட்டா ! உடனே ஒரு வேலைபார்க்கிற மாப்பிள்ளையாப் பார்த்து, கடன கிடனை வாங்கிக் கல்யாணத்தைப் பண்ணி வைத்தோம். இரண்டு குழந்தை ஆயிடுது , இன்னும் குடும்பத்தோடு இங்கேயே இருந்து வாழ்க்கையை ஒட்டிக்கிட்டு இருக்கா….. கவிதா படிச்சிட்டு இருக்கும் போதே , காதல் பண்ணிட்டு வந்து, கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்ல, அதனையும் பண்ணி வைச்சோம். வருமானம் பெரிசா இல்லாவிட்டாலும், நீங்க இரண்டு பேரும் நல்லா வாழணுங்கிறதுக்காக எத்தனை பாடு பட்டிருப்போம் என்பதை கொஞ்சமாவது யோசனைச் செய்து பார்த்தீர்களா ? பணத்துக்காக எத்தனை பேரிடம் கையேந்தி நிற்றிருப்போம் என்பதைப் பற்றி சிறிதாவது நினைத்துப்பார்த்தீர்களா ? ‘
சித்ராவும், கவிதாவும் எதுவும் பேசாமல் , தலையைக் குனிந்து கொண்டே இருந்தார்கள்.
‘ படிக்க வைக்க, கல்யாணம் பண்ணி வைக்க, பேருகாலச் செலவு என்று ஏகப்பட்ட செலவு. அதற்காக வாங்கிய கடன் என்று எல்லாம் தலைக்கு மேலே போயிடுது. கடன் காரன் தொல்லை தாங்க முடியாமல் நாங்கள் தவித்துக் கொண்டிருந்த போதும், அதனைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படாமல், உங்கள் சுயநலங்களைப் பற்றி மட்டுமே கவலைப் படுகிறீர்களே ?
வயதான காலத்தில் நாங்கள் எப்படி வாழ்வோம் என்பதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படமால் பேசுவதை நினைக்கின்ற உங்களை நினைத்தா எத்தனை வேதனையாக இருக்கிறது தெரியுமா? என்று சற்று நிறுத்தினார்.
பெண்கள் இருவரும் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தனர்.
‘ இந்தக் கடனை எல்லாம் அடைப்பதற்காக, அந்த ஆறு சென்ட் நிலத்தையும் வித்திட்டேன் கடனையும் ஓரளவு அடைச்சுட்டேன். இல்லாத நிலத்துக்காக போடுகின்ற சண்டையை விட்டுவிட்டு, அவரவர் சம்பாத்தியத்தில், எப்படி வாழுறதுன்னு கத்துக்கோங்க…… இனிமேலும் எங்களைத் தொந்தரவு செய்யாமல் அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்திடப் பழுகுங்கள் ‘ என்று கூறு முடித்து விட்டு, துணைடை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு வெளியில் சென்று விட்டார்.
தாங்கள் செய்த தவறுகள் எதுவென்று இருவருக்கும் புரிந்தது. கவிதாவின் வீடு கட்டும் கனவும், காற்றில் கரைந்த மேகமென கலைந்து ,சிதைந்து போனது.

************ஜனவரி 2024 *********

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (23-Feb-25, 8:36 pm)
பார்வை : 3

மேலே