பகைவனுக்கு அருள்வாய்

போர்! போர்! என்று வெறி பிடித்து அலைந்த சோழன் முடித்தலைக் கோப்பெருஞ் நற்கிகள்ளி ,தனது பெரும் படையுடன் சென்று , சேர நாட்டின் ,தலைநகர் கரூரை முற்றுகை இட்டிருந்தான். தனது படைவீரர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த பாசறைக்கு நடுவில் இருந்த பாசறையில் தங்கி இருந்தான். முற்றுகை இட்டு பல நாட்கள் ஆனபின்னும், எந்த ஒரு அசைவும் சேரனிடம் இருப்பதாகத் தெரியவில்லை. சேர மன்னன் போருக்கு அஞ்சும் கோழையும் அல்லன். அவனும் ஒரு போராளிதான். போர்களம் என்றாலை பாய்ந்து சென்று தாக்கும் வேங்கைதான். அந்த வேங்கையோடு மோதிப் பார்க்கவேண்டும் என்னும் எண்ணத்தோடு படைஎடுத்து வந்தவனுக்கு ஏமாற்றம் தான் என்றால் அது எத்தனை வேதனையா இருக்கும்.

ஒன்று தனது படைகளோடு முன்னேறி வந்து தாக்கி இருக்க வேண்டும் இல்லை சமாதனம் பேசத் தூதுவர்களையாவது அனுப்பி இருக்கவேண்டும் . இந்த இரண்டில் ஒன்றுமே நடவாமல் இருப்பதுதான் சோழனின் மனதைக் குழப்பிக் கொண்டு இருந்தது. இவன் என்ன திட்டத்தோடு கோட்டைக்குள் பதுங்கிக் கொண்டு இருக்கிறான் என்பதுதான் புரியவில்லை.
தனது படைத்தலைவர்களை எல்லாம் தனது பாசறைக்கு அழைத்திருந்தான்.அனைவரும் அமைதியாக மன்னன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.மன்னனும் ஒவ்வொருவர் முகத்தையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,
‘என்ன படைத்தலைவர்களே ! ஏதாவது புதிய செய்திகள் உண்டா ?’ என்றான் மன்னன்.
‘செய்திகள் எதுவம் சொல்லும் படியாக இல்லை மன்னவா ? ஆனால் ஒரே ஒரு செய்தியை மட்டும் தங்கள் காதுகளில் போட்டு வைக்கலாம் என்று எண்ணுகிறோம் ‘
‘அப்படியா ? அது என்ன செய்தி ? சேர மன்னன் போரிடாமல் சமாதானம் பேச வரப்போகிறானா ? இல்லை சரணாகதி அடையப் போகிறானா ? ஆனால் இந்த இரண்டிலும் எனக்குத் துளியும் விருப்பம் கிடையாது. போரிட்டு வெல்ல வேண்டும் இல்லை மடிய வேண்டும். அதுதான் வீரனுக்கு அழகு. ஆனால் இந்த சேரன் என்ன எண்ணத்தோடு இருக்கிறான் என்பது தெரியாத காரணத்தால் நான் மிகவும் குழப்பாக இருக்கிறேன். ‘
‘பிரச்சனை அது மட்டுமல்ல மன்னவா? நமது படைவீரர்கள் மிகவமு சோர்வடைந்து விட்டார்கள்.மூன்று வேளையும் உண்டும் உறங்கியும் இருப்பதால் மனதளவில் அவர்களை சோர்வடைந்து இருக்கிறார்கள். அவர்களை இனி போருக்குத் தயார் படுத்த வேண்டுமென்றால் , அவர்களுக்கு இனி புதிதாக பயிற்சிகள் கொடுக்கப்படவேண்டும். அவர்களின் போர் ஆற்றலை ஊக்குவிக்க வேண்டும் . இல்லை என்றால் போரிடுவதற்கு தகுதி இல்லாதவர்களாக ஆகிவிடுவார்கள் மன்னவா ? ‘ என்றார் அவர்களில் மூத்த படைத்தலைவர்.
‘அப்படியா ? உடனே படை வீரர்களுக்கு தகுந்த பயிற்சிகள் கொடுக்க ஏற்பாடுகள் செய்யுங்கள், எப்பொழுது போர் தொடங்கினாலும் நமது வீரர்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் ‘
‘ஆனால் வீரர்களிடம் இன்னொரு செய்தி பரவி இருக்கிறது மன்னவா!’
‘என்ன செய்தி ?’
‘சேர மன்னன் ! பல மாதங்களுக்குத் தேவையான உணவு பொருட்களைக் கோட்டைக்குள் சேமித்து வைத்திருப்பதாகவும், போரில் ஈடுபட்டு விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க விரும்பவில்லை என்றும் செய்திகள் நமது வீரர்களிடம் பரவி இருக்கிறது. அதனால் நமது வீரர்கள் இந்தப் போர் நடக்காது என்றும் நம்பிக்கொண்டு இருக்கின்றார்கள் மன்னவா !’

‘அதற்காக அவன் ஒரு கோழையைப் போன்றா கோட்டையுள் பதுங்கிக் கிடப்பான்?’
.
‘நம்மிடம் இருக்கும் உணவுப் பொருட்கள் இன்னும் சில நாட்களே வரும் என்பதையும் அவன் அறிந்து வைத்திருப்பதாகவும் நமது ஒற்றர்கள் செய்தி அனுப்பி இருக்கிறார்கள் மன்னவா!’
‘ அது உண்மை என்றால் மேலும் உணவுப் பொருட்களை நாம் நமது நாட்டில் இருந்து வரவழைத்துக் கொள்வோம் ‘
‘அது இனிமேல் நடப்பதில் சிக்கல்கள் உள்ளன. ஏனென்றால் நாம் உணவு பொருட்களைக் கொண்டு வந்தாலும் , நாம் கொண்டு வரும் வழிகளை எல்லாம் நிர்முலமாக்கத் தகுந்த ஏற்பாடுகளை எல்லாம் செய்து வைத்துள்ளார்களாம் ‘
‘ பார்க்கலாம். நமது ஒற்றர்களை அனுப்பி கோட்டை நிலவரங்களைக் கண்காணிக்கச் சொல்லுங்கள். எந்தெந்த இடங்களில் கோட்டை பலமற்று இருக்கிறது என்பதையும் கண்டுபிடித்து தகவல் அனுப்பச் சொல்லுங்கள் ‘
‘சரி மன்னவா .’ என்று விடை பெற்றுச் சென்றார்கள்.
சோழ மன்னன் நலங்கிள்ளி பலவாறு சிந்தனை செய்து கொண்டே பாசறைக்குள நடக்கத் தொடங்கினான்.

சிறிது நேரம் சென்றிருக்கும் வாயில் காப்போன் வந்து
‘மன்னா ‘ என்று அழைத்துப் பணிந்து நின்றான்.
என்ன என்பதுபோல், அவனை நிமிர்ந்து பார்த்தான்.
‘மன்னா ஒற்றன் ஒருவன் தங்களைக் காண வந்துள்ளான். ஏதோ அவசரச் செய்தியாம். தங்களிடம் தான் சொல்ல வேண்டும் என்கிறான் ‘
‘சரி ! உள்ளே வரச்சொல்லு ‘

பாதுகாவலர் வெளியே சென்றவுடன், ஒற்றவன் என்று அழைக்கப்படவன் உள்ளே வந்து பணிந்து நிற்க,
‘ ஒற்றனே நீ அறந்து வந்த செய்தியைக் கூறு ?’ என்றான் சோழன்.

‘மன்னா ! சேரநாட்டு அரசரோடு அவரது நண்பரும்,புலவருமான ,நமது உறையூரைச் சேர்ந்த உறையூர் ஏணிச்சாமி முடமோசியார் தங்கி இருப்பதாக தெரிகிறது.’
‘எதற்காக இந்த நேரத்திலே இங்கு வந்து தங்கி இருக்கிறார் ,என்னும் விவரம் ஏதாவது தெரிந்ததா? ‘
‘ஆம் மன்னவா ? இந்தப் போர் அவசியமில்லாத போர் என்று சேர அரசனைப் போரில் ஈடுபடாமல் தடுத்து வருவதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள் ‘
‘ அப்படி என்றால் புலவர் உடன் இருக்கும் வரை சேர மன்னன் நம்மோடு போர் தொடுக்க மாட்டானா? ‘
‘அப்படித்தான் தகவல்கள் கிடைத்துள்ளன மன்னவா ‘

‘சரி ! நீ செல்லலாம் . வேறு ஏதாவது செய்திகள் இருந்தால் விரைவாக வந்து தகவல் கொடு ‘ என்றான் சோழன்.
ஒற்றன் சென்ற உடன், நலங்கிள்ளியின் மனதில் பலவிதமான சிந்தனைகள் எழுந்தன. நாமே வலிந்து சென்று கோட்டையைத் தாக்கலாம் புலவர் வேறு சேரனோடு தங்கி இருக்கிறாரே என்னும் எண்ணம் அவனது போர் தொடங்கும் எண்ணத்துக்கு தடைக்கல்லாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
புலவர் உண்மையிலே என்ன நோக்கத்தோடு தங்கி இருக்கிறார் என்பதும், புலவராக வந்து போரைத் தடுக்கின்றாரா ? இல்லை சேர மன்னன் அந்துவனே போரைத் தடுப்பதற்காக புலவரை அழைத்துத் தன்னோடு தங்க வைத்திருக்கிறானா என்பது தெரியாமல் குழம்பிக்கொண்டு இருந்தான்,

தனது வீரத்தை வெளிப்படுத்த, போர்க்களங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் தன்னை ஒரு சோம்பேறியாக இருக்க வைத்துவிட்ட, அந்துவன் மேல் அவனது கோபம் அதிகமாயிற்று. பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டான்.

மாலை நேரம் ! பகலவன் தனது கடமைகளை முடித்துவிட்டு ஓய்வுக்காகத் தனது பாசறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். மேற்கு திசை வானம் செந்நிறமாக காட்சி தந்து கொண்டிருந்தது. இதமாக காற்றும வீசிக் கொண்டு இருந்தது.

பெருத்த யானை ஒன்று மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. யானைப் பாகனும் அதனை விரட்டாமல், அதன் போக்கிலேயே நடக்க விட்டிருந்தான். பாகனுக்குப் பின்னால் கம்பீரமாக ஒருவன் அமர்ந்திருந்தான். இடையில் நீண்ட வாள் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்தபோது தான் அவன் சோழன் நலங்கிள்ளி என்பது தெரிந்தது. இந்த நேரத்தில் இவன் தனியாக எங்கே சென்று கொண்டிருக்கிறான்.

பாகனுக்கு யானையை எந்த திசையில் செலுத்த வேண்டும் என்பதை மன்னன் இதுவரைக் கூறாமையால் , பாகனும் ஒரு குழப்பத்தோடுதான் யானையை செலுத்துக் கொண்டு இருந்தான். இருந்தாலும் கேட்டு விட வேண்டும் என்று அவனை அவனது உள்ளம் தூண்டிக் கொண்டே இருக்க,
‘மன்னா ? யானையை எந்த திசையில் செலுத்த வேண்டும் ? ‘ என்று கேட்டே விட்டான்.

‘கோட்டையின் காவலைக் கண்காணிக்கும் தூரத்தில் மெதுவாக செலுத்து ‘என்றான் சோழன்.

சோழன் கோட்டை மதிலை உற்றுப் பார்த்துக் கொண்டே வந்தான். அவன் நினைத்த மாதிரி மதில் மேல் பெரிய ஆர்ப்பாட்டமோ ? இல்லை வீரர்கள் நடமாட்டமோ இருப்பதாகத் தெரியவில்லை.எப்போதும் போல் அமைதியாகத் தென்பட்டது. இருள் சூழத் தொடங்கி விட்டதால் கோட்டைச் சுவர் மேல் விளக்குகள் ஏற்றுவதற்காக ஒரு சில வீரர்கள் அங்கும் இங்கும் சென்றுகொண்டிருப்பது நிழல் போல் தெரிந்தது.

மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த யானையிடம் திடீரென ஒரு மாற்றம் தென்பட்டது. துதிக்கையினை மேலே தூக்கிப் பிளிரியது.நடை சற்று வேகமானது. யானைப் பாகனின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத்தொடங்கியது. பாகனும் மன்னனும் சுதாரித்து செயல் படும் முன் யானை பிளிறிக் கொண்டு ஓடி, கோட்டையின் கதவுக்கு முன்பு சென்று விட்டது.
கோட்டையின் உள்ளிருந்து கதவின் ஒட்டை வழியாக இதனைக் கவனித்துக் கொண்டிருந்த வீரர்களுக்குத் தெரிந்து விட்டது. யானைக்கு மதம் பிடித்து விட்டது என்று.

அண்மனையின் மேல் மாடத்தில் புலவர் முடமோசியாருடன் பேசிக் கொண்டிருந்த சேர மன்னன் அந்துவுன் சேரல் யானையின் பிளிறல் சத்தம் கேட்கவே, மன்னனும், புலவரும் அங்கிருந்து எட்டப் பார்த்தனர்
‘வீரர் கோட்டை வாயிலில் என்ன சத்தம் ? என்று மன்னன் கேட்க
‘ மன்னா ..யானை ஒன்று மதம் பிடித்து ஓடி வந்துள்ளது. அதன் மேல் இரண்டு பேர் உள்ளார்கள். ஒருவனைப் பார்த்தால் வீரன் போல் தெரிகிறான் ‘ என்னான் வாயில் காப்போன்.
‘சரி ! சரி ! மதம் பிடித்த யானையிடம் இருந்து அவர்களை விடுவித்து, அவர்கள் யாராக இருந்தாலும் கைது பண்ணி இங்கே அழைத்து வாருங்கள் ‘ யானையின் மதத்தை அடக்கவும் தகுந்த மருந்தைக் கொடுங்கள் ‘ என்று ஆணையிட்டாடன்.
உடனே செயல்பட்ட கோட்டைவீரர்கள் யானையை அடக்கி, இருவரையும் யானையிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார்கள்.

மேல் மாடியில் இருந்து இவற்றை அரை குறை வெளிச்சத்தில் உற்று நோக்கிய புலவருக்கு, அது சோழன் நலங்கிள்ளி போல் தோன்றவே
‘மன்னா அவர்களைக் காப்பாற்றி அவர்களை புறப்பட்ட இடத்துக்கே அனுப்பி விடுங்கள் ‘ என்றார்
‘ஏன் ? புலவரே அப்படி கூறுகிறிர்கள். அத்துமீறி நுழைபவர்கள், அதுவும் போர் மேகம் சூழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் அவர்களை கைது செய்யாமல் விடுவது ஆபத்தாக அல்லவா முடியும் ?’
‘யானைமேல் அமர்ந்திருந்த வீரன் யாரென்று உனக்குத் தெரிகிறதா?’
‘இல்லையே புலவரே’

‘அவன் தான் சோழன் நலங்கிள்ளி. முற்றுகை இட்டிருக்கும் மன்னன்’ அவன் மதம் கொண்ட யானையால் தடம் மாறி கோட்டையின் அருகில் வந்திருக்க வேண்டும். ‘

‘எதிரியை பிடித்துச் சிறையில் போடுவது தானே சிறப்பு ‘

‘தெரியாமல் நுழைந்துவிட்டவன் எதிரியே ஆயினும் அவனை கைதியாக்குவது நியாயமாகாது. எப்படி சோழன் உன்னை போரியே வெல்ல வேண்டும் என்று துடிக்கிறானோ, அதுபோல நீயும் அவனை போரிலே வென்று தான் அவனைச் சிறை பிடிக்க வேண்டுமே தவிற, தவறி வந்தவனை வளைத்துப் பிடித்து சிறையிடுவது சரியான ஒன்றல்ல… உனது வீரர்களை அவனைக் காப்பாற்றி பத்திரமாக திருப்பி அனுப்பச் சொல் ‘ என்றார் புலவர்.

புலவரின் சொல்லைக் கேட்ட சேர மன்னன் அவர்களை பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்கும் படி ஆணையிட ,வீரர்களும் அவ்வாறே செயல்பட்டனர்.
‘போர் வெறி பிடித்த சோழனுக்கு இது படிப்பினையாக இருக்கும். அவனும் போர் செய்வதைப் பற்றி மறு சிந்தனை செய்வான்.
அதுமட்டுமல்ல பகைவனுக்கும் அருள வேண்டும் என்னும் நன்னெஞ்சைக் கொண்டிருக்கும் சேரன் அந்துவன் என்று உன்னையும் இந்த சரித்திரம் புகழும்.’ என்ற புலவரை கட்டி அணைத்துக் கொண்டான் சேர மன்னன்
*******************8

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (23-Feb-25, 8:39 pm)
பார்வை : 2

மேலே