சினிமா பார்த்தவர் மனதில் ஒரு சினிமா

சினிமா பார்த்தவர் மனதில் ஒரு சினிமா

என் பெயர் சந்திரன் நான் சென்னையில் பிறந்து வளர்ந்து கல்லூரியில் சேர்ந்து படித்துக்
கொண்டிருந்த நேரம் அது.நான் படித்த கல்லூரி சென்னையில் பெயர் பெற்ற ஒரு கிறித்துவ கல்லூரி.
அங்கு படிப்பிலும் விளையாட்டிலும் நான் பெயர் பெற்றவன். கல்லூரியில் நடந்த விளையாட்டு
போட்டிகளில் வெற்றி பெற்று கல்லூரியின் பெயரை புகழடைய செய்ததால் படிக்கும்
மாணவர்களிடமும் மற்றும் படிப்பை சொல்லித்தரும் ஆசிரியர்களிடம் நல்ல பெயரை எடுத்தவன்.
நான் அங்கு படித்தது தாவர இயல்.
நானும் என் நண்பர்களும் அன்று வகுப்பு சிறிது புரிந்துகொள்ள கடினமாக இருந்ததால் மதியம்
சினிமா செல்லலாம் என முடிவெடுத்து பக்கத்தில் இருந்த ஒரு திரை அரங்கில் படம் பார்க்க
சென்றோம். நண்பர்கள் யாரிடமும் பணம் இல்லாததால் எல்லோருக்கும் டிக்கெட் வாங்க என்னிடம்
பணம் வாங்கி எனது நண்பன் முரளி கவுண்டருக்கு சென்றான். பின் எல்லோரும் பால்கனி சீட்டில்
அமர்ந்து படம் பார்க்க வெள்ளித் திரையில் முதலில் பல விளம்பர படங்கள் ஓடின பின் ஒரு முப்பது
நிமிடங்கள் நியூஸ் சென்றது அதை அடுத்து படம் ஆரம்பித்தது. படத்தில் சிரிப்பு காட்சிகள் வர
எங்களால் அதை ரசிக்க முடியவில்லை காரணம் எல்லோருக்கும் வயிற்றில் பசி மிக இருந்தது . நான்
எல்லோரையும் பார்த்து சிறுதீனி என்ன வேண்டுமோ அதை முரளியை வாங்க சொல்லி எல்லோரும்
எடுத்து கொள்ளலாம் என கூற , சந்துரு இந்த அரங்கத்தில் எல்லாமே விலை அதிகம் அதனாலே
படம் பார்த்துட்டு வெளியே போய் சாப்பிடுவோம் என்று முரளி சொல்ல பசி காதை அடைத்தாலும்
இருந்த பணத்தில் திரைப்படத்திற்கே முக்கால் அளவு செலவு செய்து விட்டதாலும் வேறு வழியின்றி
எல்லோரும் அதை ஒப்புக்கொண்டனர். சீனு நாம பேசாம நம்ம வீட்டில் இருந்து வந்த டிபனை
எடுத்துக்கொண்டு வந்திருக்கலாம், பெரிசா எல்லாத்தையும் எடுத்து தானம் பண்ணிட்டோம் என்று
பசி வேகத்தினால் சொன்னான். நான் உடனே அவனிடம் நீதானேடா சொன்னே
திரைஅரங்கத்திலே டிபன் எடுத்துக் கொண்டு போனா நாகரிகமா இருக்காது எல்லோரும் ஒரு மாதிரி
நம்மளை பார்த்து சிரிப்பார்கள் என்று எனச் சிறிது கோபமாக கூற , உடனே முரளி நடுவில் புகுந்து
சரி சரி இப்ப சண்டை போடாதீங்கடா எனக்கூறி, பசி தான் டா உங்க கோபத்தை அதிகமாக்கி
இருக்கு எனச் சொல்லி எங்களை சமாதானப்படுத்தினான்.
வெள்ளி திரையில் கதாநாயகன், கதாநாயகி ஆடல் பாடல்களில் கொஞ்சம் எங்கள் மனதை ஓட
விட்டதால் பசி சிறிது நேரம் குறைந்ததுபோல தோன்றியது. படத்தின் இடைவேளை வந்ததும் பசி
மீண்டும் அதிகமாகத் தெரிய ஆரம்பித்தது. ஒரு பெரிய பாப்கார்ன் பாக்கெட் ஒரு கூல்ட்ரிங்க்
வாங்கலாமென்றால் பின்வெளியே சென்று சாப்பிடுவதற்கு பணம் போதாமல் போகுமோ என்ற பயம்
மனதில் வந்தது . இந்த சங்கடத்துக்கு பதில் கிளாசில் புரியாவிட்டாலும் உட்கார்ந்து இருந்து டிபினும்
சாப்பிட்டிருக்கலாம் என்ற எண்ணம் மனதில் எனக்கு வந்தது . திரைப்படம் பார்க்கப் போகலாம் என்று
சொன்னவுடன்
இலவசமாய் படம் பார்க்கலாமே என்று தலையை ஆட்டிய இவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள்
சாப்பிடுவதற்காவது சிறிது பணம் கையில் வைத்திருக்க வேண்டாமா? அதைக்கூட நான் தான் செலவு
செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.. முதலில் கதாநாயகனும், கதாநாயகியும் மகிழ்ச்சியாய்
ஆடிக்கொண்டிருந்ததை ரசித்தவர்கள் இப்பொழுது பசியால் அங்கும் இங்கும் உடம்பையே
ஆட்டிக்கொண்டிருந்தனர்.படம் எப்பொழுது முடியும் என்று எல்லோரும் நினைக்க ஆரம்பிக்க ஒரு
வழியாக படத்தில் கதாநாயகன் மற்றும் அனைவரும் சேர்ந்து கதையைச் சுபமாக்கினர்கள் .
எல்லோரும் அப்பாடா என வெளியே வந்தனர், அப்பொழுது மாலை நான்கு முப்பது ஆகியிருந்தது.

ஏதாவது ஒரு ஓட்டலில் சாப்பிடலாம் என்று தேடித் தேடி நண்பர்கள் ஒரு சிறிய ஓட்டலைக் கண்டு
பிடித்தனர். முதலில் நான் விலைப்பட்டியலை கவனமாக பார்த்தேன் . இந்த நண்பர்கள் யாரும் தங்கள்
ஒரு பைசாவைக்கூட செலவு செய்ய மாட்டார்கள் என்ற எண்ணம் மனதில் வர, நம் கையில் உள்ள
அளவே நம்மால் செலவு செய்ய முடியும் என முடிவெடுத்து , சினிமாவிற்கு கூப்பிட்ட பாவத்திற்காக
இவர்களுக்கு பணம் அழுது தொலைக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு இருந்த யானைப்பசிக்கு
நான் வைத்திருந்த பணத்தில் ஒரு சோளப்பொரிதான் சாப்பிட முடிந்தது என்ற கதையாக எதோ
சிறிதளவு சாப்பிட்டு விட்டு புத்தகங்களை எடுக்க கல்லூரிக்குள் நுழைந்து காவலர் வகுப்புக்களை
பூட்டுமுன் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தவர்கள் மெல்ல நடை பாதையில் நடக்க
ஆரம்பித்தனர். எல்லோருக்கும் மனதில் வெவ்வேறு சிந்தனைகள் ஓடின, எனக்கு இன்று பெரிய தண்ட
செலவு என்றும், கார்த்திக்கு பசியால் துன்பப்பட்டாலும் இலவசமாய் ஒரு சினிமா கொஞ்சம்
ஹோட்டல் டிபன் என்றும், சீனுவிற்கு படமும் ரசிக்கவில்லை வயிறும் நிறையவில்லை இப்படி ஏன்
செய்தோம் ஒழுங்கா கல்லூரியிலேயே இருந்து சாப்பிட்டிருக்கலாமே என்ற எண்ணமும் முரளிக்கு
நாமும் கொஞ்சம் கைப் பையில் வைத்திருந்த பணத்தை எடுத்திருந்தால் மூவரும் கொஞ்சம் நிம்மதியாய்
சாப்பிட்டு இருக்கலாமே என்ற எண்ணம்.ஓடியது. எல்லோரும் இப்படி வக்கிரமாய் கல்லூரிக்கு
மதியம் மட்டம் போட்டுவிட்டு சினிமா பார்த்துவிட்டு வந்ததை கொண்டாட முடியாமல்மனதில் வந்த
எண்ணங்கள் ஓட, அவர்களைக் கூனிக் குறுக வைத்தது வழியில் அவர்கள் கண்ட காட்சிகள்
காலையில் இருந்து கை வண்டி இழுப்போரும், அந்த மாலைநேர வெய்யிலை பொருட்படுத்தாமல் ,
பூக்கட்டி விற்க உட்கார்ந்திருக்கும் பெண்களும் காலையில் வரும் வேளையில் பார்த்த இடத்திலேயே
அமர்ந்து இருக்கும் அந்த பிச்சைக்காரன் வெய்யிலை பொருட்படுத்தாமல் சிமெண்டையும் கல்லையும்
எடுத்து சுமக்கும் கூலியாட்கள் தார் கொதிக்கும் இடத்தில் நின்று சிறு கருங்கல் ஜல்லிகளை எடுத்து
கொண்டு ரோடு போடும் வேலையாட்கள் என பார்த்த எல்லோரும் அவரவர்கள் ஏதோவொரு
வேலையைச் செய்து கொண்டிருக்க நானும் என் நண்பர்களும் இன்றைய நாளை வீணாக்கி
விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியுடன் மதிய வகுப்பை மட்டம் அடித்து படம் பார்க்க சென்று
கையில் இருந்த பணத்தையும் செலவு செய்து துளியும் மகிழ்ச்சி இல்லாமல் ஏன் இதைச் செய்தோம்
என்ற எண்ணம் மனதில் ஒரு படமாகி துன்பத்தை கொடுத்து ஓடிக்கொண்டிருந்தது.

எழுதியவர் : கே என் ராம் (24-Feb-25, 9:37 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 1

மேலே