முதன் முதலான அழுகை

முதன் முதலான அழுகை
கதை கரு என்னுடையது அல்ல..!
அலுத்து களைத்து வீட்டுக்குள் நுழைந்தாள் மாலதி. கூடவே மகன் திலீபனையும் கையில் பிடித்து வைத்து கொண்டு, அவனின் பிடிவாதத்தையும் மீறி கடைவீதி வழியாக இழுத்து கொண்டு வருவது பெரிய தொல்லையாக இருந்தது. ‘அதை வாங்கித்தா’ ‘இதை வாங்கித்தா’ என்றவனின் நச்சரிப்பை சமாளித்து அவனை வீட்டுக்கு கூட்டிவருவது உண்மையிலேயே அவளுக்கு களைப்பாக இருந்தது. இந்த வேலையை மோகன் தான் பார்த்து கொண்டிருந்தான். இவளுக்கு இந்த சிக்கல் வந்ததே இல்லை. மோகன் இருந்தவரை, மகன் திலீபன் விட்டு எங்கும் நகரமாட்டான்.
மாலை ஐந்து மணிக்கு அவன் திலீபனுடன் வந்து விடுவான். இவள் அலுவலகம் முடித்து வீட்டுக்கு வரும்போது மணி ‘ஆறாகியிருக்கும்’. மோகன் சில நேரங்களில் இவளுக்கு சூடான காப்பியுடன் சாப்பிடவும் ஏதாவது செய்து வைத்திடுவான். இடையில் ‘திலீபனையும்’ சரிகட்டி அவனுடன் விளையாண்டு கொண்டே எல்லா வேலைகளையும் செய்து விடுவான்.
நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது அவர்கள் வாழ்க்கை. ‘திலீபன்’ பிறந்து இதோ கான்வெண்டில் ஐந்தாவது படித்து கொண்டிருக்கும் வரை, அவர்கள் ஒருவருக்கொருவர் அந்நியோன்யமாய் தான் இருந்தனர். இருவருமே நல்ல வேலையில் இருந்ததால் திலீபன் பிறந்த பின்பு இவள் இரண்டு வருடம் வீட்டில் ஓய்வுடன் இருந்தாள்.
மோகனின் ‘ஒற்றை சம்பளம்’ சற்று தடுமாற்றங்களுடன் அவர்களது குடும்ப பொருளாதாரத்தை கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்பொழுதெல்லாம் மோகன் இவளின் மேலும், குழந்தையின் மீதும் உயிராகத்தான் இருந்தான். மோகன் இப்படி செய்வான் என்று நினைத்து பார்த்திருப்பாளா?
அவனுடைய உலகம் என்பது ‘மாலதியும் தீலீபனும்’ தான் என்னும் வகையில் இருந்தது அவனது உலகம். வீட்டிற்கு வந்தால் இருவரையும் அழைத்து கொண்டு வெளியே கிளம்பி விடுவான். அது எந்த நேரமென்றாலும் சரி. சாப்பிட்டு முடித்து எட்டு மணிக்கு மேலாகியிருந்தாலும் “வா சும்மா அப்படியே வாக்கிங்” போயிட்டு வரலாம், கூட்டிக்கொண்டு அவர்கள் இருந்த தெருவையே நாலைந்து சுற்று சுற்றி வருவான்.
திலீபன் தூக்கத்துக்கு சென்றிருந்தான், அவனை தூக்கியபடி கொண்டு வந்து கட்டிலில் படுக்கவைத்தவள் கட்டிலின் கம்பியின் சுற்றி வைத்திருந்த கொசு வலையை இறக்கி விட்டு சுற்றி வர படுக்கையோடு சொருகி வைத்தாள். மோகன் இருந்தவரை அவனது கட்டிலில்தான் திலீபன் தூங்குவான். அவனது தூக்கத்துக்காக மோகனும் ஐந்து பத்து நிமிடங்கள் திலீபனுடன் படுத்து கொண்டிருப்பான்.
முன்னறைக்கு வந்தவள் “செல்போனை” எடுத்து மணி பார்த்தாள். ஒன்பதுக்கு இன்னும் அரை மணி நேரம் இருந்தது. சரி புத்தகம் ஏதாவது எடுத்து படிக்கலாம். அவளது ‘கலெக்சனாக’ புத்தக அலமாரியே வைத்திருந்தாள். மோகன் அவளை இதற்காக கேலி கூட செய்வதுண்டு, இப்படி படித்து படித்து என்னதான் ஆகப்போகிறாய்?
வாசிப்பு மட்டும்தான் நம்மை சமநிலைக்கு கொண்டு செல்லும், உதாரணங்களை சொல்லி காட்டுவாள். ஆனால் அதற்கும் இடைஞ்சல் மாரியம்மாவின் மூலம் வந்து விடும்.
மாரியம்மாள் பக்கத்தில் இருக்கும் சிறு வீட்டில் குடியிருப்பவள். காலையில் இருந்து மாலை வரை கணவனும் மனைவியுமாக துணிகளை “தேய்த்து” பிரித்து அந்தந்த ஏரியாக்களுக்கு கொண்டு போய் கொடுப்பாள். பெரும்பாலும் மாரியம்மாளின் கணவன் பழனிதான் அந்த ஏரியாவில் இருந்து வரும் துணிகளை அயர்ன் செய்து கொண்டே இருப்பான்.
அப்படி வேலை செய்து கொண்டிருந்தாலும் பகல் முழுக்க கணவனும் மனைவியுமாக சாதாரணமாக பேசி சிரித்து கொண்டுதான் இருப்பார்கள். இரவு ஆரம்பிக்கும் போதுதான் அவர்களின் தகரறு ஆரம்பித்து விடும். நிச்சயம் மாரியம்மாளுக்கு அடி உதை உண்டு, அதே நேரத்தில் பழனிக்கும் அவளிடமிருந்து எதிர் தாக்குதல்களும் நடப்பதுண்டு. இருவரும் சரிசமமாய் சண்டையிடுவார்கள். பிறகு எல்லாம் அடங்கி ஒன்பது மணிக்கு மேல் அவன் மட்டையாகி விடுவான். பாவம் அவன் என்ன செய்ய முடியும்? காலையில் இருந்து அந்த கரிப்பெட்டியை தூக்கி தூக்கி தூணிகளை ‘தேய்த்து’ வைத்து கொண்டே இருப்பவன். அந்த களைப்பு மாலையில் வேறு விதத்தில் மாரியம்மாளுடன் சண்டையிடுவதன் மூலமாக வெளிப்படுகிறது.
அவன் தூங்கிய பின், மாரியம்மாள் இவர்கள் வீட்டு துணியை திலீபனுடையதும், மோகனுடைதுமாக தனித்தனியாக பிரித்து எடுத்து கொண்டு, மாலதியின் வீட்டுக்கு வருவாள்.
கொண்டு வந்த துணிமணிகளை மாலதியின் கையில் கொடுத்து விட்டு அவன் அடித்து உதைப்பது, இவர்களின் குடும்ப சண்டைகள், சொத்து தகராறு இப்படி தன்னுடைய வருத்தங்களை எல்லாம் கொட்டி தீர்த்து ஓய்வாள்.
அது என்னவோ “மாலதியிடம்” எல்லாம் கொட்டி தீர்த்ததும் மாரியம்மாள் தெளிவாகி விடுவாள். திரும்பி போகும்போது அவளின் நடையே அவளது உள்ளத்து மகிழ்ச்சியை காட்டும்.
மாலதியின் மனதுக்குள் மெல்ல ஒரு கர்வம் தலை தூக்கும். அதிகம் படிப்பறிவில்லாத, மிக மிக சாதாரணமான பெண்ணுக்கு தன்னால் உணர்ச்சி துன்பங்களை குறைக்க முடிகிறதே.
மாலதியின் கணவன் மோகன், மாரியம்மாளின் தலை இவர்கள் வீட்டை நோக்கி வருவதை கண்டதும் சட்டென உள்ளே சென்று விடுவான்.அம்மா மன நல மருத்துவரே அந்த பொண்ணு வருது, நான் போறேன் படுக்க, போய் உள்ளறையின் கதவை சாத்தி விடுவான்.
மாரியம்மாள் போன பின் படுக்கைக்கு வருவாள் மாலதி. அதற்குள் மோகன் பாதி தூக்கத்துக்குள் சென்றிருப்பான்.
மாரியம்மாளும் மாலதியிடம் கொட்டி தீர்த்த அழுகையுடன் கூடிய ஆதங்கத்தால் தெளிவாக அவளது வீட்டுக்கு செல்வாள். இது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி. மாலதி இன்னும் சற்று நேரம் புத்தகம் படித்தபடி அவளது வரவுக்காக காத்திருந்தாள். நெடுநேரம் வராததால் சரி என்று கதவுகள் அடைத்திருக்கிறதா? சோதித்து விட்டு படுக்கைக்கு சென்றாள்.
படுக்கையில் படுத்தவளுக்கு உடனே தூக்கம் வரவில்லை. ‘சொப்னாவை’ நினைத்து பார்த்தாள். இவள்தானே மோகனுக்கு அறிமுகப்படுத்த வீட்டுக்கு கூட்டி வந்தது. அதன் பின் அவளது தொடர் வருகையை இவள் வரவேற்றது, எல்லாமே இவளாக செய்து கொண்ட செயல்பாடுகள் தானே. ஒரு வேளை மோகனின் மீது கொண்டிருந்த நம்பிக்கையோ?
தான் எப்பொழுதும் திறந்த மனதுடன் இருப்பதால் எல்லோரையும் நம்பி விடுகிறோமோ? இந்த எண்ணம் ‘மோகன் சொப்னாவுடன் பழக்கம்” என்று அறிந்த போது, அவளது சுய மரியாதைதான் சட்டென முன் எழுந்தது. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக மோகனுடன் கணவன் மனைவி இணைப்பை தவிர்த்தாள். அது வெல்லாம் மோகன், சொப்னாவுடன் தனி வாழ்க்கைக்கு செல்ல உதவியாகி விட்டது.
அலுவலகத்தில் இந்த விசயம் ஏற்கனவே பரவி விட்டதை புரிந்து கொள்ள முடிந்தது. அவளை பார்க்கும் பார்வைகளில் தென்படும் “பரிதாபத்தை’ வெறுத்தாள். அதை அலட்சியம் செய்வது போல எதிரில் இருப்பவர்களிடம் காட்டியும் அவர்கள் ஏதோ இவளின் ‘துயரத்தை துடைப்பவர்கள்’ போல அதிகப்படுத்தி விட்டே சென்றார்கள். ‘சொப்னா’ இப்படி செய்வான்னு நினைக்கவே இல்லை, ஆரம்பிப்பார்கள். இவள் வலுகட்டாயமாக இந்த பேச்சை தவிர்க்க நினைத்தாலும்..
மாலையில் திலீபனோடு வீட்டுக்கு வந்தபோது மோகனின் அப்பா நின்றிருந்தார். வாங்க மாமா, அழைத்தபடியே பூட்டை திறந்தாள். உள்ளே வந்தவர், திலீபனை வலுக்கட்டாயமாக தன்னுடன் அணைத்துக்கொண்டு, கையில் கொண்டு வந்திருந்த திண்பண்டங்களை அவன் கையில் கொடுத்து விட்டு அங்கிருந்த “சோபாவில்” அமர்ந்து கொண்டார். அவருக்கு மோகனின் சிறு வயது ஞாபகம் வந்ததோ என்னவோ, தலையை கவிழ்த்து கொண்டார்.
மாமா காப்பி போடறேன், அவள் சமையலறைக்குள் நுழைந்தாள். அதெல்லாம் வேண்டாம்மா, உன்னைய பார்க்கணும்னு தோணுச்சு, நாலு ஸ்டாப்பிங்” தானம்மா, நீ பேசாம எங்களோட வந்திடேம்மா.
தன் மாமனாரை உற்று பார்த்தவள் வேணாம் மாமா” இன்னும் பார்கவி இருக்கா, அவளுக்கு ஒரு மாப்பிள்ளை அமையட்டும், அதுக்கு பின்னாடி நான் அங்க வர்றதை பத்தி யோசிக்கலாம்.
மாமனார் கூடுமானவரை தன் மகனை பற்றிய பேச்சுக்கள் வராவண்ணம் பேசிவிட்டு “சரிம்மா எதுன்னாலும் ஒரு வார்த்தை கூப்பிடும்மா” குரலில் வருத்தம் தோய சென்றார்.
அவர் சென்ற பின்பே அவளால் சமையலறைக்குள் செல்ல முடிந்தது.
நேற்றைய இரவு போலவே இன்றும் கழிந்தாலும் கூடுதலாக அலுவலகத்தில் தன்னை ‘சொப்னாவுடன்’ இணைத்து பேசியது, யாரோ இவளே ‘வச்சுகிட்ட சூனியம்’ இவள் காதுபடி பேசி கொண்டது, எல்லாம் ஞாபகம் வந்தது. மாமனார் வந்து மோகனை ஞாபகப்படுத்தாமல் சென்றாலும் அவர்களின் அப்பாவாக மோகனை ஞாபகப்படுத்தியது எல்லாமே அவள் மனதை அலைக்கழித்தது.
இரவு முன்னறைக்கு வந்து உட்கார்ந்த போது அடுத்த வீட்டு பக்கம் மாரியம்மாள் கணவனுடன் உரத்த சண்டையிடுவது, அவன் அவள் மீது பலத்தை பிரயோகிப்பதும், அவள் அவனை எதிர்த்து ஏதோ கையில் வைத்து கொண்டு அடித்தபடி பேசுவதும் கேட்டபடியே இருந்தது. எல்லாம் சற்று நேரம்தான். பிறகு எல்லாம் அடங்கியது.
திலீபன் தூக்கத்துக்கு போயிருந்தான். கதவு சத்தம் கேட்டது, இவள் யாரு? கேட்டவுடன் “நான்தான்” மாரியம்மாளின் குரல்”. கதவை திறந்தவுடன் உள்ளே வந்த மாரியம்மாள் ஆச்சர்யத்துடன் பார்த்தாள். இதுவரை இப்படி அவள் கேட்டதே இல்லை, கதவு தட்டியவுடன், இவளுக்காக, காத்திருப்பது போல கதவை திறந்து பார்ப்பவள் மாலதி
அவளின் ஆச்சர்யப்பார்வையை பார்த்த மாலதிக்கு என்னென்னவோ தோன்றியது, இரண்டு மூன்று நாட்களாக மாரியம்மாளை பார்க்காதது, அவளின் பழைய கதையையும், புது கதையையும், கணவனுடன் சண்டையிட்டு அடி வாங்கியது, அவனுக்கும் வழங்கியது எதை பற்றியும் கேட்காமல் இருந்தது, எல்லாம் மனதுக்குள் ஓட மாரியம்மாளை உற்று பார்த்தாள் எந்த அழகும் அவளிடம் இருப்பதாக தெரியவில்லை, வற்றிய முகம், உடைந்து போக கூடிய உடல், ஆனாலும் இத்தனை வருடங்களாக புருசனுடன் மல்லு கட்டுவதும், சரி சமமாய் வேலை செய்து கொண்டிருப்பதும். அதை விட இவளிடம் பதிலுக்கு பதில் அடி உதை பெற்ற இவள் கணவன் இன்னும் இவளையே சுற்றி வருவது…
இதுவரை அவள் மனதில் இருந்த “தான் படித்தவள்” அழகானவள், தைரியமானவள், என்று இதே மோகனால், சொப்னாவால் பாரட்டபெற்றவள், இப்படி மாரியம்மாளை விட எல்லாம் இருந்தும், மாரியம்மாளை போல “உனக்கு நான் சமம்” என்னும் கொள்கையை விடாமலும், அவனையும் இறுக்கி பிடித்தபடி குடும்பத்தை நடத்துவதையும் பார்த்து கொண்டிருந்தவள்.
இதோ இப்பொழுது தான் மட்டும் ஏன் இப்படி தோற்று போய் விட்டோம் ? தன்னை அறியாமல், மாரியம்மாளின் முன்னால் முதன் முதலாக மாலதி அழுதாள்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (25-Feb-25, 1:20 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 4

மேலே