தெள்ளமுதம் உண்டோன் புளிங்காடி உண்ண உறுவானோ - இனிமை, தருமதீபிகை 986
நேரிசை வெண்பா
உள்ளம் பரத்தோ(டு) உறவுகொளின் பின்புலகின்
எள்ளலுறும் வாழ்வேதும் எண்ணானே - தெள்ளமுதம்
உண்டோன் புளிங்காடி உண்ண உறுவானோ
கண்டோனும் அத்தகையே காண். 986
- இனிமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
தனது உள்ளம் உயர்ந்த பரத்தோடு தோய்ந்தவன் பின்பு எள்ளலான இழிந்த வாழ்வை எண்ணான்; தெளிந்த அமுதத்தை உண்டவன் கழிந்த புளிங்காடியை உண்ண நேரான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
இதயம், மனம், உள்ளம் என்பன அறிவு, மதி, உணர்வுகளுக்கு முறையே கரணங்களாயுள்ளன. இவை இனிமையாய் அமையின் அந்த மனித வாழ்வு புனித நிலையில் பொலிந்து விளங்கும். புறத்தே தெரிகின்ற உயர்வு தாழ்வுகளுக்கு எல்லாம் உரிமையான மூலகாரணங்கள் அகத்தே மருவியுள்ளன. வித்தும், வேரும், மரமும் போல் மனமும் நினைவும் மனித நிலையும் இனமாய் இசைந்திருக்கின்றன. உள்ளமே மனித உலகமாயுள்ளது.
நல்ல தெளிவான மனம் உடையவன் எல்லா நலங்களையும் எளிதே அடைந்து கொள்கிறான். உள்ளம் தெளிந்த பொழுது உண்மை நிலையை அது நன்கு உணர்ந்து கொள்கிறது. செல்வம் முதலிய வளங்கள் பலவும் நிறைந்த உலக வாழ்வு எவ்வளவு உயர்ந்ததாயிருந்தாலும் நிலை இல்லாதது; விரைந்து அழிந்து போவது என்.று தெளிந்து கொள்வதையே ஞானம் என்று நாம் வழங்கி வருகிறோம். மெய்யறிவு இல்வழி மையல் விரிகிறது.
அறியவுரியதை அறியாமல் அவமே மருண்டு மயங்கியிருப்பது அஞ்ஞானம் என வந்தது. மடமையான இந்த மருளே பிறவித் துயரங்களுக்கு ஏதுவாய் நின்றது. தேக போகங்கள் சோகமே தருவன என்று தெரிந்தும் அவற்றையே மீண்டும் மீண்டும் விழைந்து நுகர்ந்து மாண்டு மடிந்து ஓயாத துன்பங்களைத் தோய்ந்து சீவர்கள் துடித்து உழலுகின்றனர்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)
காய் வருமிடத்தில் விளம் வரலாம்)
கையினால் அறையுண்ணும் பந்து போலக்
காலனால் அறையுண்டு கணக்கி லாத
மெய்யிலே புகுந்தலுத்து விவேகம் பெற்றும்
விரகிலார் சிலர்பிறப்பில் மீண்டும் வீழ்ந்தார்;
மையினால் மூன்றுலகாம் பணதி செய்து
வருநிற்கும் போமாகி வளர்ந்து வாளாப்
பொய்யினால் மிகவிரியும் வேலை யூடே
பொருதிரைபோல் பரபதத்தே புரிந்த மாயை. 1
பேதமுறு புந்தியே மாயை ஆகும்
பெரிதுவருந் தியுமிதனைப் போக்கல் வேண்டும்;
போதமுறு பேற்றினால் அன்றி மாயைப்
பொருநதியின் கரைதோன்றா, பொருந்தத் தோன்றில்
ஏதமறும் அப்பதமே இறவா வீடாம்;
இம்மாயை பிறப்பிடமே(து) என்ன வேண்டாம்
சேதமுறக் கொல்வழியே(து) என்று தேர்வாய்
சிதைவுற்றால் இதனியல்பு தெரியு மன்றே. 2
- ஞானவாசிட்டம்
கைகளினால் அடிபடும் பந்துபோல் காலனால் அடிபட்டுச் சீவ கோடிகள் தீராத துயரங்களில் உழந்து வருகின்றன; மெய்யுணர்வினால் மையல் தெளிந்தபோதுதான் வெய்ய துயரங்கள் ஒழியும் என இவை விளக்கியுள்ளன. ஞான யோகிகளுடைய அரிய இனிய அனுபவ மொழிகள் துணுகி உணர வுரியன.
பொய்யான உலகப் பொருள்களைப் பற்றி உழலும் ஆசை அற்ற போதுதான் மெய்யான பரம்பொருளை அந்த உள்ளம் நன்கு பற்ற நேர்கிறது. தன் உள்ளம் எதனோடு தோய்ந்து வருகிறதோ அதன்படியே மனிதன் வாய்ந்து வருகிறான். பொறி நசைகளில் விழுந்தால் வெறியனாயிழிந்து உழலுகின்றான். புலையான அந்த ஆசை தொலையின் நிலையான ஈசனைக் கருதி யுருகி நிறை பேரின்பம் பெறுகிறான். உலக ஆசைகள் ஒழிந்த பொழுது மனிதன் மகான் ஆகின்றான்; மகாதேவனோடு உறவாய் மகிமை உறுகின்றான். மையலான புலைகள் ஒருங்கே ஒழிய வேண்டுமானால் மெய்யான ஞானம் தலையெடுத்து மேலே வரவேண்டும்
நேரிசை ஆசிரியப்பா
ஐயுணர் வடக்கிய மெய்யுணர் வல்லதை
உவாக்கடல் சிறுக வுலகெலாம் விழுங்கும்
அவாக்கடல் கடத்தற் கரும்புணை யின்றே,
வலனுயர் சிறப்பிற் புலியூர்க் கிழவநின்
அருள்பெற் றுய்தற் குரிய னியானெனிற்
பல்லுயிர்த் தொகுதியும் பவக்கட லழுந்த
அல்லல் செய்யு மவாவென படுமவ்
வறுமையி னின்றும் வாங்கி
அறிவின் செல்வ மளித்தரு ளெனக்கே. 26
- சிதம்பர மும்மணிக் கோவை
ஆசை கொடிய துயரங்களை விளைக்கும்; அதனை அடியோடு நீக்கி என்னைக் காத்தருள் என்று ஈசனை நோக்கிக் குமரகுருபரர் இவ்வாறு வேண்டியிருக்கிறார்.
உடலோடு கூடி வாழ்வது எவ்வழியும் துன்பமே; அருந்தல், பொருந்தல்களில் சிறிது சுகம்போல் தோன்றினும் அது உண்மையான சுகமன்று; தீ பற்றி எரியும்போது கொஞ்சம் தண்ணீர் வார்ப்பது போல் பசித் தீ, காமத் தீக்களுக்குப் பொறி நுகர்வு சிறிது ஆறுதல் தருகிறது. துன்பம் கொஞ்சம் ஓய்ந்துள்ளதையே இன்பமென்று ஏமாந்து கருதுகின்றனர்.
Pleasure is nothing else but the intermission of pain. [Selden]
துன்பம் சிறிது இடையே ஓய்ந்திருப்பதைத் தவிர இன்பம் என வேறு யாதும் யாண்டும் இல்லை என்று இது குறித்துளது.
மனம் அடங்கி அகமுகமாய் ஆன்ம சிந்தனை செய்துவரின் மேன்மையான இன்பம் அங்கே மேவி வரும். பரமான்மா ஆனந்த மயமான பொருளாதலால் அதனைக் கருதி வருவதில் அரிய ஆனந்தம் பெருகி வருகிறது. சித்த சாந்தியே சிறந்த பேரின்பமாம். அகத்தில் அமைதி இல்லையேல் அல்லலேயாம்.
There is no joy but calm. (Tennyson)
மன அமைதியைத் தவிர மகிழ்ச்சி வேறு இல்லை என டென்னிசன் என்னும் ஆங்கிலக் கவிஞர் இங்ஙனம் கூறியிருக்கிறார். உன் உள்ளத்தைப் புனிதமாக்கிப் பரம புனிதனான இறைவனைக் கருதி வருக; அது பேரின்ப வெள்ளமாய்ப் பெருகி வரும்; அவ்வரவே பிறவியின் பயனாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.