பொருள்வயிற் பாங்கனார் சென்ற நெறி – நாலடியார் 400
நேரிசை வெண்பா
கண்மூன் றுடையானும் காக்கையும் பையரவும்
என்னீன்ற யாயும் பிழைத்ததென்? - பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய்! பொருள்வயிற்
பாங்கனார் சென்ற நெறி 400
- காமநுதலியல், நாலடியார்
பொருளுரை:
கண்கள் மூன்றுடைய சிவபிரானும் காக்கையும் படத்தையுடைய இராகுவென்னும் பாம்பும் என்னை ஈன்று வளர்த்த தாயும் என்மாட்டுப் பிழைசெய்தது யாதிருக்கின்றது? பொன் போலும் சுணங்கினை மேலெழச் செய்த கோங்கின் அரும்பு போன்ற கொங்கைகளையுடைய தோழீ! என் கவற்சிக்கு ஏது, பொருள் காரணமாக நந் தலைவர் பிரிந்து சென்ற கொடிய காட்டு நெறியினது கடுமையே யாகும்!
கருத்து:
ஆழ்ந்த காதலுணர்வு பிறர்நலம் உள்ளுதற் கிடஞ்செய்யும்.
விளக்கம்:
பிரிவாற்றாது தலைவி வருந்துவதறிந்து தோழி, தலைமகன் கூட்டம் விரும்பி வருந்துவதாக உட்கொண்டு வேறு கூற, தலைவி அதனை மறுத்துச் சுரத்தின்கண் அவன் எய்தும் இடர் நினைந்து வருந்துதல் தெரிந்தாள். தன்னலங் கருதாது தலைவன் நலங்கருதுதல் புலப்படுத்திற்று இச் செய்யுள்!
தோழி, காம வேட்கையை மிகுவிங்குங் காமனையும் குயிலையும் நிலவையும் பெண் பிறவியையும் வெறுத்துக் காமனை மீண்டும் உயிர்ப்பித்த சிவபிரானையும், குயில் முட்டையை அடைகாத்துக் குஞ்சு பொரித்து வளர்த்து விட்ட காக்கையையும், விழுங்கிய நிலவை மீண்டும் உமிழ்ந்த அரவையும், ஈன்று வளர்த்த தாயையும் பழித்துக் கூறினமையின் தலைவி, ‘பிழைத்ததென்?' என்றாள்.
‘என்' னென்றது ‘கற்றதனா லாய பயனென்கொல்' என்புழிப் போல யாதுமின்மை யுணர்த்திற்று; இது, தலைவன் சென்ற சுரத் தருமை நினைந்து தலைவி வருந்தியது; இவை ஒன்பது பாட்டானும், காமம் பிரிந்துள்ளும் முறைகளால் மாட்சிமைப்படும் இயல்பு விளங்கிற்று.