33ஆன்மீக வழியில் அமைதி
அத்தியாயம் – 33
ஆன்மீக வழியில் அமைதி...
எழுத்தாளர் :பூ.சுப்ரமணியன்
நாம் முதலில் ஆன்மீக குருவின் வேதாந்தம் தத்துவம் உபதேசங்களில் மற்றும் சாஸ்திரங்களின் மீது தளராத நம்பிக்கை வைத்துக்கொள்ள வேண்டும். நமது நம்பிக்கையினால் ஞானத்தினை அடையக்கூடிய மனநிலையை நாம் அடைகிறோம். சிரத்தையினால் அதாவது நமது நம்பிக்கையினால் ஞானத்தை அடைய முடியும். அதற்கு மனக்கட்டுப்பாடு மன ஒழுக்கம், இந்திரிய ஒழுக்கம், ஜீவகாருண்ய ஒழுக்கம், கடமையாற்றுதல் போன்றவை முக்கியமானதாகும். இவற்றைத் தவறாமல் கடைபிடிக்கும்போது நாம் விரும்பும் தேடும் மன அமைதி இயல்பாக நம்மிடம் வந்து சேரும்.
முதலில் நாம் தீமை தரக்கூடிய எண்ணங்கள் செயல்பாடுகள் போன்றவற்றில் இருந்து முற்றிலும் விலகியிருத்தல் வேண்டும். அனைவரிடம் அன்புடன் பழகுதல், சத்தியம், சமாதானம், இனிமை போன்றவைகள் நமது மனதில் எப்போதும் நிறைந்து இருக்க வேண்டும். மனம், வாக்கு, செயல் மூன்றிலும் நாம் உண்மையுடன் இருக்கும்போது செயல்படும்போது, நேரடியாகவே ஞானத்தை அடையலாம் என்று ஞானிகள் கூறுகின்றனர். அதனால் நமது வாழ்க்கையில் நாம் விரும்பும் தேடும் மன அமைதியையும் பெறலாம்.
ஆன்மீகத்தில் சிரத்தை, பக்தி மற்றும் விசுவாசம் என மூன்று நிலைகள் உள்ளன. சிரத்தை என்றால் எந்தச்செயல் செய்தாலும் அதில் பூரண கவனம், ஈடுபாட்டுடன் இருத்தல், நம்பிக்கை என்கிற பொருள் அடங்கும். ஆன்மீக வழியில் குறிப்பாக குரு வாக்கியத்தில் நம்பிக்கையுடன் கூடிய பூரண ஈடுபாட்டுடன் இருத்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக நாம் தியானம் செய்தால் அதில் முழு ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். குருவின் வாக்கியத்தில் தத்துவத்தில் நம்பிக்கை பூர்ண ஈடுபாடு போன்றவை இருக்க வேண்டும்.
பக்தி என்பது இறைவன் அல்லது இஷ்ட தெய்வம் அல்லது குருவின் மீது கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பு எனப்படும். பயபக்தி என்றால் இறைவன் அல்லது குரு மீது சிறிது அச்சம் கலந்த பக்தி ஆகும். அதாவது குருவின் உபதேசத்தில் தவறாக ஏதும் செய்துவிடக் கூடாதே, இறைவன் அல்லது குருவின் அதிருப்திக்கு ஆளாகிவிடக்கூடாதே என்று நம் மனதில் எண்ணுவது பயம் கலந்த பக்தி அதாவது பயபக்தி ஆகும்.
விசுவாசம் என்றால் ஆழ்ந்த நம்பிக்கை. "எனக்கு இஷ்டதெய்வம் முருகன் அல்லது ராமன், கிருஷ்ணன், சிவன், ஐயப்பன் என்று ஏதாவது ஒரு தெய்வத்தை வணங்குவது ஆகும். நான் கும்பிடுவது என்னோட இஷ்ட தெய்வம் மட்டும்தான். என்னோட எல்லா நல்லது கெட்டதுக்கும் அவனே பொறுப்பு. அவனின்றி எனக்கு வேறு கதியில்லை" என்று அந்த தெய்வத்திடம் பூர்ண சரணாகதி அடைவது ஆகும். அதே போல குருவிடம் கொள்ளும் நம்பிக்கை ஆகும். "எனது குரு சொல்லி விட்டால் அதற்குப்பின் எனக்கு வேறு வேதவாக்கு இல்லை" என்று குருவை முழுமையாக நம்பி சரணாகதி அடைவது ஆகும்.
நமக்காகவும் நம் நலனுக்காகவும் நமது மனம் நிம்மதியாக இருக்க வேண்டும். நோய் நீங்கி, மனத்தில் பயமும் இல்லாமல் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும். இறைவனை கண்டு நிலையான ஆனந்தத்தை அடையவும் ஆன்மீக உலகத்தையும் நிம்மதியான மனதையும் அடைவதற்கும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் நமக்கு ஒரு செய்தி கூறியிருக்கிறார். இதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சீடர்களே ஒரு எடுத்துக்காட்டாக இன்றும் விளங்குகிறார்கள்.
மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களுக்கு மனிதனைப்போல் மனம் என்பது இல்லை. அதனால்தான் மனம் உள்ளதால்தான் மனிதன் என்று அழைக்கப்படுகிறான் மனிதனுக்கு எண்ணிக்கையற்ற எண்ணங்கள் உதயமாவதற்கு இருப்பிடமாக இருப்பது நம் கண்ணுக்குத் தெரியாததும், அவரவர்களால் மட்டும் உணரக்கூடியதும் மனது ஆகும். இதனை கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ் ‘உன்னையே நீ அறிவாய்’ என்று கூறியது அவரவர் மனதினைத்தான் அவர் கேட்கும்படி சொல்லியிருக்கிறார்.
நீ நல்லவனா கெட்டவனா என்பதை பற்றி மற்றவர்கள் உன்னிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை. உன்னைப்பற்றி அதாவது நல்லவனா கெட்டவனா என்பது பற்றி உன்னோட மனதிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இதனைத்தான் உலகில் பேச்சு வழக்கில் அதனை மனசாட்சி என்று அழைக்கிறோம். மனம் மாசு இல்லாமல் இருக்க வேண்டும், மாசு இல்லாத மனமே மன ஒழுக்கம் எனப்படும். ஒழுக்கம் என்பது மனதில் நல்ல எண்ணங்களுடன் இருந்து, மனதளவில்கூட யாருக்கும் கெடுதல் செய்வதற்கு இடம் தராமல் தூய்மையுடன் இருத்தல் ஆகும்..
சிலபேர் உதட்டளவில் ஒருவரை வாழ்த்தி விட்டு தங்களை நல்லவர்கள்போல் அவர்களிடம் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வார்கள். ஆனால் தங்களது உள்ளத்தில் பொறாமைத் தீயை தங்களையும் அறியாமல் அவர்கள் மீது வளர்த்துக் கொள்வார்கள். இந்த தன்மையானது ஒருவர் தீய செயல்களை மற்றவர்களுக்கு செய்வதைவிட மோசமான தன்மையாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதனைத்தான் வடலூர் வள்ளலார் ‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்’ என்று இறைவனிடம் வேண்டுகிறார்.
இன்னா செய்தாருக்கும் இனியவை செய்யும் குணத்தினை நமது மனதில் வளர்த்துக்கொள்ள வேண்டும். மனிதனுடைய மனம் பகைவனுக்கு அருள்வாய் என்ற மனநிலையில் பக்குவப்பட்ட நிலையில் அவன் மனமும் செயல்பாடுகளும் இருக்க வேண்டும். இத்தகைய மன ஒழுக்கத்தைக் கடைபிடிப்பதற்கு ஆன்மீகம்தான் நமக்கு வழி காட்டுகிறது. அவ்வாறு வாழ்வில் மன ஒழுக்கத்தினை நாம் கடைபிடிக்கும்போது நாம் தேடும் விரும்பும் மன அமைதி நம்மையும் அறியாமல் நம்மைத் தேடி வரும்.
நம்மை யாரும் கவனித்தாலும் கவனிக்காமல் இருந்தாலும் நமது செயல்பாடுகளும் எண்ணங்களும் தூய்மையாக இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இருப்பதைத்தான் ஒழுக்கம் என்ற தூய்மையான சொல்லை சான்றோர்கள் பயன்படுத்தினார்கள். நமது கண், காது. மூக்கு, வாய், மெய் என்ற ஐம்புலங்களுக்கு இந்திரியங்கள் என்று பெயர். நமது இந்திரியங்கள் மூலம் பிறருக்குத் துயரம் அளிக்காமல் வாழ்வில் நல்ல நடைமுறைகளைக் கடைபிடிக்கும் முறையைத்தான் இந்திரிய ஒழுக்கம் என்று சாஸ்திரங்கள் இதிகாசங்கள் புராணங்கள் போன்றவைகள் கூறுகின்றன. உலகில் நல்லவைகளும் தீயவைகளும் கலந்தே காணப்படுகின்றன.
ஐம்புலன்களில் ஒன்றான கண் என்ற இந்திரியத்தால் நல்லவைகளை, நன்மை தரக்கூடிய காட்சிகள் செயல்பாடுகளை மட்டும் பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக நாம் தினந்தோறும் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எடுத்துக் கொள்வோம். தொலைக்காட்சிகளில் வியாபார நோக்கில் பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை காட்டுகிறார்கள். நாம் அனைத்தையும் பார்க்காமல் நமது வாழ்க்கைக்குத் தேவையானவைகளை, நன்மை தரக்கூடிய நிகழ்ச்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து பார்க்க வேண்டும். அதாவது மனதளவில்கூட பாதிப்பு ஏற்படுத்தாத நிகழ்ச்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து பார்க்க வேண்டும். நமது வாழ்க்கைக்குத் தேவையான மன அமைதி தரக்கூடிய நன்மை தரக்கூடிய நிகழ்ச்சிகளை மட்டும் பார்ப்பதற்கு நமது மனதிற்கு, கட்டளையிட வேண்டும்.
உலகில் பொதுவாக கண்கள் வழியேதான் காட்சிகளெல்லாம் மனதிற்குள் சென்று செயல் வடிவங்கள் பெறுகின்றன. அதாவது மனதில் காட்சிகள் பதிவாகி அவை செயல் வடிவம் பெறுகின்றன. நன்மை தரக்கூடிய நிகழ்ச்சிகளை தேர்வு செய்து அவற்றைப் பார்ப்பதால் மட்டும் மனித மனம் நல்லவைகளை பதிவு செய்கிறது. அதனால் நமது எண்ணங்களும் செயல்பாடுகளும் நல்லவையாக இருப்பதைக் காணலாம். நாம் மனதிற்கு நல்லவைகளை மட்டும் பார் என்று கட்டளையிட்டு விட்டால், நமது மனம் அறிவின் வழியாக அதனை தெரிவித்து விடும்.
தற்போது தொலைக்காட்சி தொடர்களில் வரும் நாடகங்களைப் பார்ப்பதால் பெரும்பாலான மக்கள் மன அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். தற்போதைய தொலைக்காட்சி நாடகங்களில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் பெரும்பாலும் வீட்டில் தீமை தரக்கூடிய அதிர்வலைகளையும் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர். அத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் கேட்கும் குழந்தைகள் மனம் என்ன நிலைக்கு மாறும் என்பதை பெற்றோர்கள்தான் சிந்தித்து செயல்பட வேண்டும். குழந்தைகளின் நலனுக்காக இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடர்களை எல்லாம் பார்ப்பதைத் தவிர்க்கும்படி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல தங்கள் ஆழ்மனதிற்கும் கட்டளையிடுங்கள்.
உலகில் பொதுவாக வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டக்கூடிய நேர்மறையான வார்த்தைகள், மனதுக்கு இனிமை தரக்கூடிய மெல்லிசை பாடல்கள் நம் செவியில் ஏதோவொரு நேரத்தில் விழுந்து கொண்டுதான் இருக்கின்றன. அதேபோல் நமது வாழ்க்கைக்குத் தேவையற்ற நம்பிக்கையற்ற நம் மனதிற்கு துன்பம் தரக்கூடிய வன்மையான வார்த்தைகளும் மனதை சீர்குலைக்கும் பேரிரைச்சல்கள் கூடிய வெறுப்படையும் மேற்கத்திய இசைகள் கலந்தும் நம் செவியில் விழுந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஐம்புலன்களில் ஒன்றான செவி என்ற இந்திரியத்தால் வாழ்க்கைக்குத் தேவையான ஆன்மீக விஷயங்களையும் நம்பிக்கை தரக்கூடிய ஆன்மீக அன்பர்களின் சாதுக்களின் தத்துவ வார்த்தைகளையும் கேட்க வேண்டும். மேலும் மனதிற்கு இதம் தரும் அமைதியைத் தரக்கூடிய பக்திப் பாடல்கள் இசை போன்றவற்றினை மட்டும் நம் செவிகள் மூலம் கேட்க வேண்டும். நமது மனம் விரும்பாத தேவையற்ற வார்த்தைகள், மன அமைதியை சீர்குலைக்கும் இரைச்சல் தரக்கூடிய பாடல்கள் போன்றவற்றை நமது செவியில் கேட்பதை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட தேவையற்றவைகளைக் கேட்கும் சூழ்நிலையில் நாம் இருந்தால், நாம் அவ்விடத்தில் இருந்து தயக்கமில்லாமல் விலகிச் சென்று விடுவது நல்லது.
உலகில் நல்லவைகளும் தீயவைகளும் கலந்துதான் காணப்படுகிறது. எனவே ஐம்புலன்களில் ஒன்றான நாசி என்ற இந்திரியத்தால் மனதிற்கு உகந்த நறுமணங்களை மட்டும் நுகர வேண்டும். நறுமணம் மிக்க மலர் கூட்டத்தின் நடுவில் நாம் இருக்கும்போது மனம் அமைதி நிலையில் ஒருவிதமான இன்பத்தினை உணரலாம். துர்நாற்றம் அருகில் நாம் சென்றாலே மனம் வெறுப்பின் நிலைக்கு செல்வதோடு உடலின் ஆரோக்கிய நிலையும் பாதிக்கப்படும். வீட்டில் பல்வேறு வாசனைப் பொருள்களை பூஜையறையில் வைத்திருந்தால், வீட்டில் ஒரு தெய்வீக தன்மை இருக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
நாம் ஐம்புலன்களில் ஒன்றான வாய் என்ற இந்திரியத்தால் வாழ்க்கைக்குத் தேவையான இனிமை தரக்கூடிய வார்த்தைகள் மட்டும் பேச வேண்டும். நாம் எந்த சூழ்நிலையில் பேசினாலும் மற்றவர்கள் மனம் புண்படாதபடி பேசிப் பழகவேண்டும். நல்லவைகளையே, உலகிற்குப் பயன்தரக்கூடிய செயல்பாடுகளைத் தரக்கூடிய இனிமையான வார்த்தைகளை நண்பர்கள் உறவினர்கள் போன்ற மற்றவர்களிடம் பேசிப் பழகுதல் வேண்டும். நாம் மற்றவர்களிடம் பேசும்போது அவர்கள் மனம் புண்படும்படி வருந்தும்படியான வார்த்தைகளை மறந்தும் பேசிவிடக்கூடாது.
நமது வாழ்வில் உண்மையே பேச வேண்டும். உண்மையே பேசுவதால் என்ன பயன் என்று கேட்பவர்கள் ஹரிச்சந்திரன் வரலாற்றினை படித்துப் பாருங்கள். அவன் நாடு நகரம் மனைவி மக்களையும் இழந்தபோதும் அவன் உண்மையே பேசினான். நமது இதிகாசங்கள் புராணங்களிலும் உண்மையே பேச வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுகின்றன.
மகாத்மாகாந்தியிடம் மூன்று குரங்குப் பொம்மைகள் இருந்தன. ஒரு குரங்குப் பொம்மை வாயினைப் பொத்திக்கொண்டு இருக்கும். மற்றொரு குரங்குப்பொம்மை கண்களைப் பொத்திகொண்டு இருக்கும் மூன்றாவது குரங்குப்பொம்மை காதுகளைப் பொத்திக்கொண்டு இருக்கும். மூன்று பொம்மைகள் நமக்கு உணர்த்தும் நீதி என்ன என்றால் தீயவைகளைக் பார்க்காதே, கேட்காதே பேசாதே என்பதை தனித்தனியாக மௌனமாக நமக்கு உணர்த்துகிறது. வாழ்க்கையில் நாம் அனைவரும் இந்த நீதிமுறையை தவறாமல் கடைப்பிடித்து வர வேண்டும். அவ்வாறு பின்பற்றினாலே நமது மனம் ஓரளவுக்கு அமைதியடையும்.
சமாதானம் என்பது ஆன்மீக வழியில் நமது அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்துதல் என்று பொருள்படும். நமது மனதை தொடர்ந்து ஒரு உயர்ந்த பொருளில் லட்சியத்தில் வைத்திருக்கும் சக்திக்கு சமாதானம் எனப்படும். உலக பேச்சு வழக்கில் சமாதானம் என்றால் சண்டை சச்சரவு செய்பவர்களிடம் பேசிக் கலந்து தீர்வு செய்வதற்கு சமாதானம் என்று கூறுவோம். ஆனால் ஆன்மீகத்தில் எந்த ஒரு பொருளில் நமது மனம் ஒருமுகப்படுத்தப்படுகிறதோ அந்த ஒருமுகப்படுத்தும் நிலையையே சமாதானம் என்று கூறுகிறது. (அமைதி தொடரும்)
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்