துண்ட விடக்கை விழைந்துழலும் வீண்நாய் எனவே படக்கருதி ஓடல் பழி - இனிமை, தருமதீபிகை 989
நேரிசை வெண்பா
அண்டங்கள் கோடி அணுவாம் பரநிலையில்
கண்டங்(கு) உரிமை கவரும்நீ - துண்ட
விடக்கை விழைந்துழலும் வீண்நாய் எனவே
படக்கருதி ஓடல் பழி. 989
- இனிமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
அளவிடலரிய பெரிய அண்டங்கள் சிறிய அணுக்கள்போல் இறையிடம் அடங்கியுள்ளன; அந்த அதிசய நிலையை உணர்ந்து தெளிந்து உயர்கதி பெறுக; அவ்வாறு பெறாமல் இழிந்துழல்வது பழியாம்; உனது விழுமிய நிலைமையை விழி திறந்து தெளிக என்கிறார் கவிராஜ பண்டிதர்.
தனது தலைமையையும் நிலைமையையும் உணர்ந்தபோதுதான் மனிதன் உயர்ந்து வருகிறான்; மறந்து விடின் இழிந்து போகிறான்; உண்மையாக உணரவுரியதை உரிமையோடு உணர்வதே ஞானம் என வந்தது. அது வான ஒளியாய் மகிமை தருகிறது.
அறிவு மயமாய் ஆனந்த நிலையமாயுள்ள பரமனை அறிபவர் மெய்ஞ்ஞானிகளாய் மேலான கதிகளை அடைகின்றனர். தெளிந்த கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்த ஒருவன் மகிழ்வது போல் பரிசுத்தமான தன் உள்ளத்தில் பரமனை நோக்கி யோகி உவந்து திளைக்கிறான். உரிய ஆன்மாவில் அரிய பரமான்மாவை நோக்கிப் பெரிய மகான்கள் பேரானந்தம் அடைந்து வருகின்றனர். அவரது காட்சி அதிசய மாட்சியாய் ஒளிமிகுந்துளது.
உள்ளம் தூய்மையாய் உயிரை நோக்குபவர் பேரின்ப வெள்ளத்தில் மூழ்கிக் களிக்கின்றார். வெளியே புலன்களில் இழிந்தவர் புலையான பழி வழிகளிலேயே அழுந்தி இழிசுவைகளையே நுகர்ந்து அவலராய் அழிந்தொழிகின்றார். பழகி வருகிற இழிபழக்கங்கள் எவ்வழியும் மனிதரைப் பாழாக்கி வருகின்றன
புறமே நோக்கிப் பொறி வெறியராய் உழல்பவர் அறிவிலிகளாய் அவகேடுகளையே அடைகின்றார்; அக நோக்குடையவர் தத்துவ ஞானிகளாய் உயர்ந்து நித்திய சுக சீவிகளாய் நிலவி நிற்கின்றார். வெளி விழைவால் இழி புலைகளே விளைகின்றன.
நேரிசை வெண்பா
சகமுகமாய் ஓடிநீ சாகின்றாய் நெஞ்சே!
அகமுகமாய் நாடின் அமிர்தாம்! - யுகமுடிவும்
காணாத பேரின்பம் கண்டு களிக்கலாம்
வீணாய் விளியல் விரிந்து.
தன் நெஞ்சை நோக்கி ஒரு ஞான யோகி இவ்வாறு கூறியிருக்கிறார். உலக நாட்டமாய் ஓடி உழல்பவர் உடலை வளர்த்து உயிரை அழிக்கின்றார்; உணர்வு நாட்டமாய்க் கூடி நிற்பவர் உயிரைப் பரமாயுயர்த்தி உய்தி பெறுகின்றார். இவ்வுண்மையை எண்மையாய் இதில் ஓர்ந்து உணர்ந்து கொள்ளுகிறோம்.
சிறந்த மனிதப் பிறவியை அடைந்தவன் பிறந்த பயனைப் பெறவில்லையானால் அது பாழான சன்மமாய்ப் பழிபடுகின்றது.
நேரிசை வெண்பா
உற்ற பிறவிக்(கு) உரிய பயன்ஓரின்
மற்றோர் பிறவி மருவாமல் - பெற்ற
பிறப்பே இறுதியாய்ப் பேரின்பம் காணும்
சிறப்பே பெறுக தெளிந்து.
மனிதப் பிறவிக்கு உரிய இனிய பயனை இது தெளிவாய் உணர்த்தியுள்ளது. அருமையான தன் உயிருக்கு உரிமையான இனிமையைச் செய்து கொள்ளாதவன் உலக வாழ்வில் எவ்வளவு பெருமையாய் உயர்ந்திருந்தாலும் பேதைப் பித்தனாயிழிந்து பிழைகளை மருவிச் சிறுமையே உறுகிறான்.
ஒரு பெரிய அரசன், செல்வ வளங்களில் சிறந்து உயர்ந்த சுகபோகங்களை அனுபவித்து வந்தான். தேக போகங்களையே சுகித்துக் களித்து ஆன்ம நலனை மறந்திருந்த அவன் இறந்து போனான். அவனுடைய உடலைக் கொண்டு போய் உரிய இடத்தில் தனியே புதைத்தார். ஆறடி அளவுள்ள குழியில் அவ்வுடல் ஆழ்ந்து மறைந்தது. பெரிய நில மண்டலத்தை ஆண்டு வந்த வேந்தன் இப்படி மாண்டு மடிந்தான். கூடக் கொண்டு போனதொன்றும்இல்லையேl' என்று கண்டு நின்றவர் எல்லாரும் கருதி இரங்கினர். இறந்து போகின்றவரை எண்ணி உணரும் போது மண்ணோரிடம் சிறந்த ஞானம் பிறந்து வருகின்றது.
நேரிசை வெண்பா
எண்சாண் உடம்புக்(கு) இடமே மனிதனுக்குக்
கண்காண வந்துளது கண்டிருந்தும் - மண்காண
ஓடி அலைந்தே ஒருபலனும் காணாமல்
வீடி அழிகின்றார் வெந்து.
முடி சார்ந்த மன்னரும் பிடி சாம்பலாய், மடி மண்ணாய் மடிந்து மறைவதை அறிந்திருந்தும் பிறந்த பயனை அறியாமல் வீணே இழிந்து அழிந்தொழிவது வெய்ய மூடமாய் விரிந்துளது.
உற்ற உடல் ஒழியுமுன்னர் உரிய உயிர்க்குறுதி நலனைத் தழுவிக் கொள்ளின் அவன் பெற்ற பிறவி பெருமகிமை அடைகிறது; அவ்வாறு தழுவாதொழியின் வழிவழியே அழிதுயர்களை விளைத்தவனாகிறான். அழிவு நிலை அறிவதே விழுமிய அறிவாம்.
உயிர் உயர் பரமனோடு உறவுரிமையுடையது; அவனுடைய பேரின்ப நிலையை இனிது பெறவுரியது; பழமையின் கிழமையை உணர்ந்து விழுமிய உரிமையை விரைந்து அடைந்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.