குணாதிசயங்களும் நட்பும்
நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு அற்புதமான அரிய படைப்புகள். அப்படி என்றால் நானும் தானே!
அரிய படைப்புகள் ஆனாலும், ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட குணாதிசயங்கள், வழி முறைகள். என் வாழ்வில் இதுவரை என்னை கவனித்த வரையில், நான் மிகவும் தன்மானம் கொண்டவன், உணர்ச்சிவசப்படுபவன்.
இந்த குணாதிசயங்களை நான் விழிப்புணர்வுடன் உணராமல் அறுபது ஆண்டுகள் வாழ்ந்து வந்தேன். அதன் பின்னர், என்னையே நான் அதிகம் ஆராய்ந்து பார்த்த போது, என் எதிர்மறை பண்புகளை மெல்ல மெல்ல அறிந்து, புரிந்து கொண்டேன். அதில் மிகவும் முக்கியமானது மேலே குறிப்பிட்ட தன்மானம் மற்றும் உணர்ச்சிவசம். கெடுதல் விளைவிக்கும் குணங்கள் என்றும் கூறுவார்கள்.
என் வாழ்க்கையை பொறுத்தவரை இந்த இரண்டுமே என் பூரண வளர்ச்சிக்கு, குறைந்த அளவில் உதவியாகவும், அதிக அளவில், தடையாகவே இருந்தும் வருவதாகக் கருதுகிறேன்.
சிலர் இந்த குணங்களை நல்ல குணங்கள் என்றும், சிலர் நல்ல குணங்கள் அல்ல என்றும் கூறுகின்றனர்.
எந்த அளவுக்கு நான் தன்மானம் கொண்டவன் என்றால், ஒருவர் என்னை அவமரியாதையாக பேசிவிட்டார் என்றால், அவர் மீது நான் கொண்ட மரியாதை அனைத்தும் போய்விடும். இந்த சுபாவம் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டும் இல்லை, நான் வேலை செய்த அலுவலகங்கள், நான் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
பள்ளியில் படிக்கையில் ( ஒன்பதாம் வகுப்பு) செல்வம் என்கிற ஒரு தமிழ் ஆசிரியரை, அவர் என்னை அடிக்கடி பரிகாசம் செய்ததற்காக, என் மனதை மிகவும் புண்படுத்தியதற்காக , நான் அவ்வளவு வெறுத்தேன். இப்போது கூட அவரை நினைத்தால் ஒரு வித காழ்ப்புணர்ச்சி என்னுள் எழும். இதைப் போலவே என் அலுவலகத்தில், நான் இரண்டு வருடங்கள் சேர்ந்து பணிபுரிந்த, பிரசாத் என்கிற என் உயர் அதிகாரியை ,எனக்கு கொஞ்சமும் பிடிக்காது. அந்த காலத்தில் அவரை நான் அவ்வளவு சபித்திருக்கிறேன்.
எனக்கு ஒரு பழக்கம், எவரையும் பார்த்த பத்து, பதினைந்து நிமிடங்களில் அவரைப்பற்றி எடை போட்டு கணிப்பது.
அந்த நேரத்தில் ஒருவரை எனக்கு பிடிக்கவில்லை என்றால் அதன் பிறகு எப்போதும் அந்த மனிதரை நான் விரும்பியதில்லை. இரண்டு மூன்று பேர்கள் இதற்கு விதிவிலக்காக இருந்திருக்கலாம்.
எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு சொல்லலாம். ஆனால் வளர்ந்தவர்களுக்கு அல்ல. ஆளைப் பார்த்து நோட்டம் விட்டு , அவர் தன்மைகளை அறிந்த பின் தான் ஒருவரிடம் நட்பு வைக்க வேண்டும் என நினைப்பவன் நான். இப்படி ஒவ்வொருவரையும் ஊடுருவி பார்த்து, கழித்து கட்டி, தற்போது கவனித்தால், எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்பது,விரல் விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கை தான்.
எப்போதாவது, எனக்கு அதிகம் நண்பர்கள் இல்லையே என்று ஒரு ஆதங்கம் ஏற்படும். ஆனால் இப்போது நான் இந்த விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறேன். அதிக நண்பர்கள் இல்லாததால், எனக்கு ஒன்றும் மூழ்கி போய் விடவில்லை. மாறாக, பொன் போன்ற நேரங்கள் எனக்கு கிடைத்தது, கிடைத்து வருகிறது.
காலம் எப்படி இருக்கிறது எனில், பணம் இருந்தால், கொண்டாட்டம், கும்மாளம், நட்பு, அன்பு எல்லாமுமே. நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு செயல் பட்டால், நம்மை யாரும் தோழர்களாக ஏற்க மாட்டார்கள். போனால் வராத நேரத்தை, அவர்களுடன் சேர்ந்து அதிக வெட்டிப் பேச்சு பேசுவது, ஊர் சுற்றி அலைவது, சினிமா, கிளப் போன்றவைகளுக்கு நேரம் செலவிடுவது இப்படி செய்தால் தான் நம்மை நண்பர்களாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
இப்போது நான் மிகவும் தெளிவாக அறிந்து கொண்ட சிறந்த பாடம்" உனக்கு நீதான் உற்ற நண்பன், உனக்கு சரியான பகைவனும் நீயே". இந்த தத்துவத்தை உணர்ந்து வாழ்ந்து வந்தால், ஒருவர் நிச்சயமாக நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும்.