பேதைமை வாழும் உயிர்க்கு மூன்று – திரிகடுகம் 93

நேரிசை வெண்பா

இருளாய்க் கழியும் உலகமும் யாதும்
தெரியா துரைக்கும் வெகுள்வும் - பொருளல்ல
காதல் படுக்கும் விழைவும் இவைமூன்றும்
பேதைமை வாழும் உயிர்க்கு 93

- திரிகடுகம்

பொருளுரை:

அறிவில்லாதவர்க்கிடமாய் அதனால் இருட்டாய் நாள்கழிக்கின்ற இடமும், நன்மை தீமைகளில் ஒன்றும் தெரியாமல் சொல்கின்ற கோபமும், நற்பொருள் அல்லாதவற்றில் அன்புவைக்கச் செய்யும் விருப்பமும் ஆகிய இம்மூன்றும் உடலோடு கூடி வாழ்கின்ற உயிர்கட்கு அறியாமையைத் தருவனவாம்.

கருத்துரை:

அறிவில்லாதவர் இருக்கும் இடமும், நன்மை தீமை தெரியாது கோபித்துரைப்பதும், தீயவற்றில் செல்லும் விருப்பமும் மேன்மேலும் அறியாமைக்கு ஏதுவாகிய காரியங்களாம்.

இருள்: அறியாமைக்கு உவமையாகுபெயர். இடத்தின் நிகழும் உயிர்களின் தன்மையை அவ்விடத்தின் மேலேற்றி இலக்கணையால் இருளாய்க் கழியும் உலகம் என்றார்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Apr-22, 11:09 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

சிறந்த கட்டுரைகள்

மேலே