பிறந்தும் பிறவாதவர் மூவர் - திரிகடுகம் 92

இன்னிசை வெண்பா

விழுத்திணைத் தோன்றா தவனும் எழுத்தினை
ஒன்றும் உணராத ஏழையும் - என்றும்
இறந்துரை காமுறு வானுமிம் மூவர்
பிறந்தும் பிறவா தவர் 92

- திரிகடுகம்

பொருளுரை:

அற ஒழுக்கங்களைப் பெறுதற்குரிய சிறந்த குலத்தில் பிறவாதவனும், இலக்கண நூலை எவ்வளவு சிறிதும் அறிந்து கொள்ளாத பேதையும், எப்பொழுதும் முறைதப்பி சொற்களைப் பேச விரும்புகின்றவனும் ஆகிய இம்மூவரும் மக்கட் பிறப்பிற் பிறந்தும் (பிறப்பின் பயனையடையாமையால்) பிறவாதவராவார்.

கருத்துரை:

நற்குலத்திற் பிறவாதவனும், படிப்பில்லாதவனும் மரியாதை தப்பிப் பேச முயல்கின்றவனும், மனிதர் என்று சொல்லத் தகாதவர்.

விழுத்திணை - விழுப்பமாகிய திணை:

எழுத்து - தன்னை யுணர்த்தும் இலக்கண நூலுக்கு ஆதலால் காரியவாகுபெயர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Apr-22, 11:03 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

மேலே