விழைந்தவரை வேர்சுற்றக் கொண்டொழுகல் வேண்டா - பழமொழி நானூறு 97

இன்னிசை வெண்பா

தழங்குகுரல் வானத்துத் தண்பெயல் பெற்றால்
கிழங்குடைய வெல்லாம் முளைக்குமோ ராற்றால்
விழைந்தவரை வேர்சுற்றக் கொண்டொழுகல் வேண்டா
பழம்பகை நட்பாதல் இல். 97

- பழமொழி நானூறு

பொருளுரை:

முழங்கும் முழக்கத்தையுடைய மேகத்தில் உள்ள குளிர்ந்த நீரைப் பெற்றால் கிழங்குடைய புல் முதலியவெல்லாம் கூட முளைக்கும்;

பழைமையாகப் பகையாயினார் நட்பாக ஒன்றுதல் இல்லையாதலால், சமயம் வாய்த்தபொழுது முரண்கொண்டு நிமிர்ந்து நிற்கும்வரை பகைவருக்குத் துணையாய் நிற்றலை ஒழியும் பொருட்டு விரும்பி அவர்களை அடியோடு நெருங்கிய நட்புடையவர்களாகக் கொண்டொழுதல் வேண்டா;

கருத்து:

பழம்பகைவரை நட்பாகக் கோடல் வேண்டாவென்றது இது.

விளக்கம்:

பழம் பகைவரும் சார்பு பெற்ற துணையானே பகையாய்த் தோன்றுவர் என்பது பெறப்படுதலின் பிறிதுமொழிதலாயிற்று.

'அடியோடு நட்பாகக் கொள்ளற்க' என்றது, அவர் மனம் தீமை செய்யப் பொருந்தும் என்பதறிவித்தற்கு.

ஓராற்றால் விழைந்து என்பது, அவர் பகைவர்க்குத் துணை செய்யாதொழியும் பொருட்டு விரும்பி என்பதாம்.

'ஓர் ஆற்றால் விழைந்து' என்றமையானும், 'வேர் சுற்ற' என்றமையானும் அவரைஇடையிட்டு வைக்க வென்பது.

'பழம்பகை நட்பாதல் இல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Apr-22, 10:50 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே