ஈசன்பால் உள்ளம் மருவி உருகின் உயரின்ப வெள்ளம் பெருகும் விரிந்து - வீடு, தருமதீபிகை 999
நேரிசை வெண்பா
பாசங்கள் ஆகிப் படர்ந்த படரெல்லாம்
நீசங்கள் என்று நினைந்தொதுங்கி - ஈசன்பால்
உள்ளம் மருவி உருகின் உயரின்ப
வெள்ளம் பெருகும் விரிந்து. 999
- வீடு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
பந்த பாசங்களாய்ப் படர்ந்தடர்ந்து தொடர்ந்து வந்த தொடர்புகள் எல்லாம் நீசங்கள் என்று உணர்ந்து விலகி ஈசனை நினைந்து நீ உள்ளம் உருகிவரின் பேரின்ப வெள்ளம் உன் எதிரே பெருகி வரும்; இவ்வுண்மையை ஓர்ந்து உறுதி நலம் காணுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.
பசையாய் ஒட்டி உள்ளத்தை இழுத்து உயிரைத் துயரப் படுத்துவது பாசம் என வந்தது. சீவன் சிவனை அடையாதபடி இடையே தடையாயிருப்பதாதலால் இடையூறு என்ற ஒரு பெயரும் பெற்றது. பந்தம் ஒழிந்தது பதியை அடைந்தது.
பாசம் படிந்தால் நாசம் படிந்த கண்போல் உயிர் குருடு பட்டு உண்மை நிலையை உணராமல் புன்மையான புலைகளிலேயே இழிந்துழலும். நேரே சூரியன் சோதி வீசி நின்றாலும் ஒளியிழந்த கண் அவனைக் காண முடியாது; அதுபோல் பரஞ்சோதியான ஈசன் எங்கும் பிரகாசமாய் என்றும் இன்ப நிலையாய் இருந்தாலும் பாசம் படிந்த சீவர்கள் அவனைக் கண்டு களித்துக் கதி நலம் காண இயலாது.
பாச இருள் ஞான ஒளியால் ஒழிந்து போகும்; அவ்வாறு ஒழியின் உள்ளம் தெளிந்து பரம்பொருளை நேரே உணர்ந்து பேரின்பம் பெறும். புலையான பொய்த் தோற்றங்களைக் கண்டு மயங்காமல் நிலையான மெய்ப்பொருளைத் தெளிவதே ஞானமாதலால் அது உதயமாகவே ஊன மருள்கள் யாவும் ஒருங்கே ஒழிந்து போய் ஏக சுகம் வருகிறது.
ஊனக்கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி
உராத்துனைத் தேர்ந்தெனப் பாசம் ஒருவத்
தண்ணிழ லாம்பதிவிதி எண்ணுமஞ் செழுத்தே. 1
- 012 சாதனவியல், ஒன்பதாஞ் சூத்திரம், சிவஞான போதம்
உலக பாசங்கள் ஆகிய ஆசைப் புலைகள் நீங்கின் சீவனுக்கு ஈசன் இன்ப சோதியாய்த் தோன்றி இனிமை சுரந்தருளுவான் என இது உணர்த்தியுளது. பாசம் ஒருவப் பதி தண் நிழலாம் என்றது ஈண்டு நுண்ணிதாய் ஊன்றி நோக்கி உணர வுரியது.
பிறவித் துயரங்களில் நெடுங்காலம் தவித்துப் பதைத்த தாபமெல்லாம் ஒல்லையில் ஒழிய இறைவனருள் இனிய குளிர் நிழலாய் அரிய பெரிய அதிசய சுகம் தருகிறது; உண்மையான அந்த இன்பநிலை தெரியத் தண்நிழல் கண்எதிர் வந்தது.
பற்றியிருந்த புலையழுக்கு நீங்கவே பரமபதி உரிமையாய்ப் பற்றிக் கொள்ள எல்லையில்லாத பேரின்பத்தை உயிர் எய்தி மகிழ்கிறது. ஈசனை நாடி உருகிவரின் மாசுகள் கழிந்து சீவன் தேசு மிகப்பெற்றுத் திவ்விய சுகத்தையடைகிறது. பதியுடன் பதியவே அதிசய இன்பம் வந்தது.
பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும்
பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத் தாலே
நேசமொடும் உள்ளத்தே நாடிப் பாத
நீழற்கீழ் நில்லாதே நீங்கிப் போதின்
ஆசைதரும் உலகமெலாம் அலகைத்தே ராமென்(று)
அறிந்தகல அந்நிலையே யாகும் பின்னும்
ஓசைதரும் அஞ்செழுத்தை விதிப்படி உச்சரிக்க
உள்ளத்தே புகுந்தளிப்பன் ஊனமெலாம் ஓட. 1
- 025 சாதனவியல், ஒன்பதாஞ் சூத்திரம், சிவஞான சித்தியார்
பரமனை உரிமையாய்க் கருதி உய்யும் வழியை இது காட்டியுளது. மனம் கரைய மாசு கரைந்து தேசு நிறைகிறது.
மருவி நின்ற உலக பந்தங்கள் ஒழிந்த பொழுது மனிதன் உள்ளம் தெளிந்து புனித ஞானி ஆகிறான்; ஆகவே பரமனுக்கும் சீவனுக்கும் உள்ள உறவுரிமைகள் .தெரிய வருகின்றன. உண்மை தெளியவே புன்மையான பிறவித் துயர்கள் நீங்கிப் பேரின்ப முத்தியை அடைகிறான்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
தன்னைத்தான் தெளிய நோக்கித் தன்னிடைத் தணப்பி லாத
என்னுரு வதனில் சேர்ந்தோன் இருவினைச் சிமிழ்ப்பின் எய்தி
மன்னிய திகிரி போலும் பவத்தினில் மயங்கான் ஆகி
உன்னரு முத்தி வீட்டின் உவந்தினி(து) இருப்ப னன்றே.
- கூர்மபுராணம், சாங்கியயோகம் 54
முத்தி வீட்டில் இருக்க உரியவனை இது தெரியச் செய்துள்ளது. தன்னையும் தலைவனையும் அறிபவன் இன்னல் நீங்கி இன்பம் பெறுகிறான். சுக உருவனை மருவினவன் சுகமடைகிறான்.
தன் ஆன்மாவிலுள்ள அந்தப் பரமான்மாவை யார் அறிகின்றாரோ அத்தீரர்களுக்கே நித்திய சுகம் உண்டாகும்; வேறு எவர்க்கும் இல்லை எனக் கடவல்லி என்னும் உபநிடதம் குறித்துளது. இன்பம் இருக்கும் நிலை இனிது தெரிய வந்தது.
ஈசனை அறியவே எல்லாப் பாசங்களும் நாசமாம் எனச் சுவேதாசுவதரம் எனும் உபநிடதம் கூறியுள்ளது.
நிலையில்லாத வெறும் பொருள்களை நிலை என நம்பிப் புலையுறாமல் நிலையுடைய பரம்பொருளை உரிமையாய் நினைந்து வருபவர் உயர்ந்த ஞானிகளாய்ச் சிறந்து பிறவித் துயர்கள் நீங்கிப் பேரின்பம் பெறுகின்றனர். பாசம் அற்றவரே ஈசனை எய்துகின்றனர்.
ஒன்பதிந்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா விளம் மா விளம் மா விளம் மா விளம் விளம்)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
வளங்கு லாவரு மணங்க னார்விழி
..மயக்கி லேமுலை முயக்கி லேவிழு மாந்தர்காள்
களங்கு லாமுட லிறந்து போயிடு
..காடு சேர்முனம் வீடு சேர்வகை கேண்மினோ
துளங்கு நீள்கழ றழங்க வாடல்செய்
..சோதி யானணி பூதி யானுமை பாதியான்
விளங்கு சேவடி யுளங்கொ ளீர்யமன்
..விடுத்த பாசமு மடுத்த பாசமும் விலக்குமே. 55
- சிதம்பரச்செய்யுள் கோவை
ஈசனை நினையுங்கள் எமபாசம் கடந்து இன்பம் அடையலாம் என இது காட்டியிருக்கிறது. மாசு மருவாமல் உயிர் சுகமாய்த் தேசுற வேண்டின் இறைவனையே கருதி உருகிச் சரண் அடைய வேண்டும். தீய இருள் நீங்கத் தூய ஒளி ஓங்குகிறது.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
காய் காய் மா தேமா அரையடிக்கு)
பாயிருக்கத் தரைகிடத்தும் வினையின் பான்மை
..பழமிருக்கக் காயுதிர்க்கும் பழுத்தி டாத
காயிருக்கப் பழமுதிர்க்கும் எனஒண் ணாத
..கழிமடனும் அடுபிணியும் கலியும் நீக்காய்!
சேயிருக்கும் கொன்றையணி சொக்கே மிக்க
..திலகதுதல் கயல்கணெனும் உலகம் ஈன்ற
தாயிருக்க நீஇருக்கத் துணையி லார்போல்
..தளர்ந்திருக்க நீதியுண்டோ சரண்புக் கேனே. 41
- மதுரைப் பதிற்றுப்பத்து
வினையின் நீங்கிய பரமனை அடைந்த போதுதான் வினைத் துயர்கள் நீங்கிச் சீவன் மேலான இன்ப நிலையை அடைகிறது. மாயப் பொருள்களில் மருவிய ஆசைகளை ஒருவித் தூய பரம்பொருளைக் கருதி யுருகுவோரே கதிநலங்களைக் காணும் தகுதிகளை அடைகின்றனர்.
பாசநிக ளங்களெல்லாம் பஞ்சாகச் செஞ்செவே
ஈசஎனை வாவென் றிரங்கினால் ஆகாதோ. - தாயுமானவர்
ஈசனை நினைந்து தாயுமானவர் இவ்வாறு ஏங்கியிருக்கிறார்,
மனிதன் எதனை எண்ணி வருகிறானோ அவ்வண்ணமே நண்ணி வருகிறான். மேலான பரமனைக் கருதின் மேலாகிறான்; கீழான புலைகளை நினைந்து வந்தால் கீழான இழிநிலைகளையே அடைகிறான்.
அற்புத ஆற்றலும் அதிசய ஆனந்தமும் உடையவனாதலால் கடவுளை உரிமையோடு கருதி வருபவர் பெருமகிமைகளோடு பேரின்பங்களையும் ஒருங்கே பெறுகின்றார்,
புனித ஈசனை நேசித்துப் பூசித்து வரப் புண்ணிய போகங்கள் பெருகி வருகின்றன. முனிவரர், யோகியர், ஞானியர், மாதவர், துறவிகள் என உயர் பேர் பெற்றுள்ளவர் யாவரும் பந்த பாசங்கள் ஒழிந்து பரமனை நினைந்து உயர்ந்துள்ள முத்தர்களே.
What better thought than think on God, and daily him to serve? - Tusser
கடவுளை நினைந்து நாளும் தொழுவதைக் காட்டிலும் நல்ல எண்ணம் வேறென்ன உள்ளது? என்னும் இது ஈண்டு எண்ணவுரியது. இறைவனை எண்ண இறைமை நண்ணுகிறது.
ஆண்டவனிடம் அன்பு பூண்டவர் நெருங்கிய கிளை உறவு கொண்டாடி யாண்டும் உரிமையோடு உவந்து துதிக்கின்றனர்.
My God, my Father, and my Friend, Do not forsake me in the end. - Dillon
என கடவுளே! என் தந்தையே, என் நண்பனே என்னைக் காத்தருள்; இறுதியில் கைவிட்டு விடாதே என டில்லன் என்பவர் ஆண்டவனை நோக்கி இவ்வாறு அன்பாய் வேண்டியிருக்கிறார். மாசு படியாமல் மனத்தைப் பாதுகாத்து வருவதே ஈசனையடைவதற்கு நேரே வழியாம். சித்த சுத்தி தெய்வீக நிலையை அருளுதலால் அவ்வாறு வாழ்பவனே ஆனந்த நிலையை அடைகிறான். மனம் புனிதமாக மனிதன் தெய்வம் ஆகிறான்.
Live pure, speak true, right wrong. - Tennyson
சுத்தமாய் வாழ்; உண்மையே பேசு, பிழை நீங்கிச் சீர்திருந்தி ஓங்குக என்னுமிது ஈங்கு அறியவுரியது.
பழுது படியாமல் உள்ளத்தைப் பாதுகாத்து முழுமுதல் பரமனை உரிமையாய் நினைந்து வா; முத்தியின்பம் உன் பக்கம் வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.