ஆயிரத்தை திருப்பி கொடுத்த அதிசய நபர்

நான் கோயம்புத்தூர் வந்து இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள்ளேயே ஒரு புதுமையான ஏமாற்றம் கண்டு பின்னர் வெற்றியும் கண்டேன். இந்த நிகழ்ச்சியைத் தான் இப்போது விவரிக்கப் போகிறேன்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், மார்ச் 17 , 2022 ஒரு நபரை நேரில் சந்தித்தேன். அதற்கு முன் இவருடன் அலைபேசியில் இரண்டு மூன்று முறை பேசியிருக்கிறேன். நான், என்னுடைய தமிழ் கட்டுரைகளை ஒரு புத்தகமாக வெளியிட முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். சுயமாக புத்தகம் வெளியிடுவது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. ஏனெனில், ஏற்கனவே நான்,
எனது இரண்டு ஆங்கில புத்தகங்களை ரூபாய் கிட்டத்தட்ட ஐம்பத்தைந்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்து வெளியிட்டுள்ளேன். ஆனால் இந்த புத்தகங்களை எப்படி விற்பனை செய்வது என்பது எனக்கு மிகவும் பெரிய விஷயமாக இருக்கிறது. இந்த இரண்டு ஆங்கில புத்தகங்களை வெளியிட்டு, ஓராண்டு ஆன பிறகும், இந்த புத்தகங்கள் ஒன்றும் சரியாக விற்பனை ஆகவில்லை.
இதனால், இந்த முறை எனது முதல் தமிழ் புத்தகத்தை வேறு ஏதாவது முறையில் வெளிட நினைத்து, கோயம்புத்தூரில் புத்தகம் வெளியிடும் எவரேனும், என் எழுத்து படைப்புகளை படித்து விட்டு, அவர்களே இந்த புத்தகத்தை வெளியிடுவார்களா என்று அறிந்து கொள்ள முயல்கையில் தான், மேற்கூறிய நபர் எண் எனக்கு வலைதளத்தில் கிடைத்தது.

நேரில் ஒரு ஹோட்டலில் அவரை சந்தித்தேன். அவர் ஏற்கனவே இரண்டு புத்தகங்களை தானாகவே வெளியிட்டு, அதில் குறிப்பாக, ஒரு புத்தகம் நன்றாக விற்று, அவருக்கு லாபத்தை தந்தது என்றார். ஆனால் எந்த புத்தகத்தையும் அவர் எடுத்து வரவில்லை. " முதலில் உங்கள் படைப்புகளை நான் டிசைன் செய்து தருகிறேன். கூடவே, உங்களது படைப்புகளை படித்து, கருத்துக்களை தெரிவிக்கிறேன் " என்றார். பின்னர், " நாம் இந்த புத்தகங்களை புத்தக கண்காட்சிகளில் , ஏதாவது புத்தகக் கடை மூலம், நேரடியாக சென்று விற்கலாம் "என்றும் கூறினார். மனிதர் பார்ப்பதற்கு நல்லா, கொழுகொழு என்று இருந்தார். தான் பெரிய ஆஸ்பத்திரி ஒன்றில், ஒரு மருத்துவரிடம் வேலை செய்து வருவதாகவும் சொன்னார். நான் அவர் சொன்னதை கிட்டத்தட்ட முழுமையாக நம்பினேன். அவர் எனது சில எழுத்து படைப்புகளை படித்து விட்டு, நன்றாக உள்ளது. நிச்சயமாக புத்தகமாக வெளியிடலாம் என்று எனக்கு ஊக்கம் தந்தார்.
அந்த மனிதர் பின்னர்" ஒரு ஆயிரம் ரூபாய் முன் பணம் கொடுங்கள். நான் ஒரு வாரத்தில் புத்தகத்தின் முகப்பு டிசைன் செய்து உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் " என்றபோது, " அப்படியே, இதோ ஆயிரம் ரூபாய் " என்று அவரிடம் அந்த தொகையை கொடுத்தேன். அப்போது அவரிடம் கூறினேன் " உங்களை நம்புகிறேன். நமக்கு இடையில் இருக்க வேண்டியது நம்பிக்கை மற்றும் நாணயம் " என்று. அவரும் அதற்கு பலமாக தலையை அசைத்தார். நான் என்னுடைய படைப்புகளை அவரது ஈமெயிலுக்கும் அனுப்பி வைத்தேன்.

அதன் பிறகு ஒரு வாரம் வரை அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. எனவே வாட்ஸ்அப்பில் அவருக்கு செய்தி வைத்தேன். அவர் உடனடியாக பதில் தரவில்லை. பின்பு," உங்கள் படைப்புகள் நன்றாக இருக்கிறது. நீங்கள் எழுத்தாளர் தான் " என ஒரு செய்தி வைத்தார். அதன் பின்னர் மீண்டும் மௌனம் சாதித்தார். இரண்டு வாரங்கள் கழித்தும் ஒன்றும் தகவல் இல்லை என்பதால், நான் அலைபேசியில் அவரை இரண்டு முறை அழைத்தேன். ஆனால் அவர் இரண்டு முறையும் போனை எடுக்கவில்லை.
இதனால் நான் அவருக்கு கொஞ்சம் கடினமான வார்த்தைகள் கொண்ட செய்தியை வாட்ஸ்அப்பில் வைத்தேன். அவரிடமிருந்து ஒன்றும் பதில் இல்லை. அதன் பின்னர் நான் என்னுடைய பாணியில் " நீங்கள் செய்வது முறையல்ல. ஒப்புக்கொண்டபடி நீங்கள் செய்யத் தவறினால் அது ஏமாற்று வேலை என மெசேஜ் வைத்தேன். அங்கிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை என்பதால் மீண்டும் என்னுடைய பாணியில் இரண்டு மூன்று முறைகள் அவருக்கு மெஸஜ் வைத்தேன். அவருக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. " நான் பணத்தை திருப்பி கொடுக்கிறேன். ஆனால் இந்த தேவையில்லாத உங்கள் கவிதை மற்றும் வாசகங்களை நிறுத்துங்கள். இல்லையேல் பணம் தர மாட்டேன் " என்று.
நான் உடனே " நீங்கள் பணத்தை திரும்ப தராவிட்டால், போலீஸ் புகார் கொடுப்பேன், உங்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து உங்களது இந்த ஏமாற்று வேலையை பற்றி கூறுவேன். அது மட்டும் இல்லை, இங்குள்ள ரோட்டரி மையங்களில் உங்கள் மோசடி செய்ய நினைக்கும் நடவடிக்கையை தெரிவிப்பேன் " என்று.

அடுத்த பத்து நிமிடங்களில் நான் கொஞ்சம் கூட எதிர்பாராத வகையில், எனக்கு" போன்பே " மூலம் அவரிடமிருந்து , நான் அவருக்கு கொடுத்த ஆயிரம் ரூபாய் என் பாங்கு அக்கவுண்டுக்கு இருப்பில் சேர்க்கப்பட்டது.

பணம் எனக்கு வந்த அடுத்த நிமிடம், நான் அவரது போன் எண்ணை முடக்கி வைத்துவிட்டேன்.

ஏற்கனவே நான் பலரிடம் ஏமாந்து இருக்கிறேன். இந்த தடவையும் , அவரிடம் நம்பிக்கை வைத்து, கொஞ்சம் துணிச்சலுடன் முன் பணத்தை கொடுத்தேன். இந்த முறையும் ஏமாந்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது, அந்த நபரிடமிருந்து பணத்தை மீண்டும் பெற்றதை என் நல்ல நேரமாக கருதுகிறேன். இந்த மனிதர், நான் எடுக்கவிருந்த நடவடிக்கைகளை பார்த்து பயந்திருப்பார் என்று தான் தோன்றியது.

திருடனிடமிருந்து மீண்டும் பணம் கிடைப்பது , சாதாரண விஷயம் அல்ல: இந்த உண்மை கதையை, உங்களை விட்டால், யாரிடம் போய் சொல்ல?

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (12-Apr-22, 4:40 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 28

சிறந்த கட்டுரைகள்

மேலே