தமிழின் வேர் புரட்சிக்கவிஞர் கவிஞர் இரா இரவி
தமிழின் வேர் புரட்சிக்கவிஞர்!
கவிஞர் இரா. இரவி
******
பாவேந்தர் பாடிய பாடல்களில் பல
பைந்தமிழைப் போற்றிப் புகழ்ந்தவையே அதிகம்!
உயிருக்கு நிகராகத் தமிழை நேசித்தவர்
உன்னத தமிழுக்கு வேராக நிலைத்தவர்!
தெருவெல்லாம் தமிழ்முழக்கம் முழங்கிட வேண்டியவர்
தெருவில் கடைகளில் தமிழ்ப்பலகை வேண்டியவர்!
தமிழ் பற்றி எத்தனையோ கவிஞர்கள் பாடினாலும்
தன்னிகரில்லா புரட்சிக்கவிஞருக்கு ஈடாகப் பாடவில்லை!
தமிழ் உணர்வு தமிழ் இன உணர்வு பாடல்களில்
ததும்பி வழிந்தது தமிழகம் பாடி மகிழ்ந்தது!
பாடல்கள் மட்டுமல்ல வசனங்களிலும் பாவேந்தர்
பைந்தமிழை விதைத்து நாளும் வளர்த்தவர்!
கனக சுப்புரத்தினம் இயற்பெயர் தமிழை
கற்கண்டாகப் பாடியதால் பாரதிதாசனாக உயர்ந்தவர்!
புரட்சிக்கவிஞர் என்ற பட்டம் முற்றிலும் பொருந்தும்
புரட்சியை கவிதை வரிகளில் வடித்த கவிஞர்!
தந்தை பெரியாரின் பகுத்தறிவு கருத்துக்களை
தரணி முழுவதும் பரவிட வகை செய்தவர்!
மூடநம்பிக்கைகள் ஒழிவதற்கு பாடுபட்டவர்
முத்தமிழ் வளர்த்திட்ட முத்தமிழ் வித்தகர்!
அவருக்கு இணை அவர் மட்டுமே
வேறு எவரையும் இணையாக்க முடியாது!
வைர வரிகளில் என்றும் வாழ்கிறார்
வளமான தமிழருக்கு மேலும் வளம் சேர்த்தவர்!
உலகம் பாராட்டும் உன்னதப் படைப்புகளை
ஓய்வின்றி படைத்து பரிசும் விருதும் வென்றவர்!
எண்ணிலடங்கா இலக்கியங்களை யாத்தவர்
எண்ணங்களில் தமிழுக்கு முன்னுரிமை தந்தவர்!
தமிழின் வேராக என்றும் விளங்கி வருபவர்
தமிழ் மரம் செழிக்க உரமாகவும் இருப்பவர்!
பாவேந்தர் என்ற பட்டத்திற்கு பொருத்தமானவர்
பாக்களில் பாமாலை தொடுத்து வழங்கியவர்!