சேத்திரத் திருவெண்பா - பாடல் 15 - சாயாவனம் என்ற சாய்க்காடு
சேத்திரத் திருவெண்பா, ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (பல்லவ முதலாம் பரமேஸ்வரன்
கி.பி 670 – 675) பாடியது.
நேரிசை வெண்பா
அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்
குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் - நெஞ்சமே
போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்
சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து. 15
குறிப்புரை :
(இவ்வெண்பாக்கள் யாவும் `யாக்கை (இந்த மானிடப் பிறப்பில் நாம் பெற்ற உடலின்) நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்பதையே அறிவுறுத்துகின்றன).
இவ்வெண்பா, ' பலர் இருந்து புலம்பாமுன் பூம்புகாரை அடுத்துள்ள (சாயாவனம்) சாய்க்காடு என்ற தளத்தினைச் சேர்ந்து அங்கு உறையும் இறைவன் சாயாவனேஸ்வரைக் கைகூப்பி வணங்கு' என்று கூறுகிறது.
பொழிப்புரை:
நெஞ்சமே! மைதீட்டிய கண்களையுடைய மகளிர் உன்னையும், உன் உடல் நிலைமையையும் கண்டு அருவருத்து, உன் தலைமுடி வெளுத்து உடலும் வளைந்து கூன் விழுதற்கு முன், உன் உடலும் சுடுகாடு போய்க் கூடவிட, பின்னர்ப் பலர் இருந்து புலம்பாமுன் பூம்புகாரை அடுத்துள்ள (சாயாவனம்) சாய்க்காடு என்ற தளத்தினைச் சேர்ந்து அங்கு உறையும் இறைவன் சாயாவனேஸ்வரைக் கைகூப்பி வணங்கு என்கிறார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார்.
குறிப்புரை:
அஞ்சனம் – மை, மையெழுதிய கண்ணார் - மகளிர். பதம் - நிலைமை
அருவருக்கப்படுவதும் உடலமே
.
கோடுதல் - வளைதல்; கூன் விழுதல், கூடப்படுங் காடு - சுடுகாடு.
காடு போய்க் கூடவிட, பின்னர்ப் பலர் இருந்து புலம்பாமுன்` என்க.
பைஞ்சாய் எனும் கோரைப்புற் காடாக இருந்ததால், இத்தலம் இப்பெயர் பெற்றது.
ஆதிசேடனது நாகமணி ஒளி வீசியதாலும் (இதனை சாய் - ஒளி என்பர்) இப்பெயர் பெற்றது.
சாய்க்காடு: புலவர் பாடும் புகழுடைய பூம்புகார் நகரத்தைச் சார்ந்தது திருச்சாய்க்காடாகும். தேவாரத்தில் பூம்புகார்ச் சாய்க்காடு என்றும், காவிரிப்பூம்பட்டினத்துச் சாய்க்காடு என்றும், அப்பதி குறிக்கப்படுகின்றது. இக்காலத்தில் சாயாவனம் என்பது அதன் பெயர்.
சாய்க்காடு சங்ககாலத்திலும் சிறப்புற்று விளங்கிய ஊர்களில் ஒன்று. இவ்வூர் தமிழ்நாட்டில் சீர்காழிக்குத் தென்கிழக்கில் 11.5 கி.மீ தொலைவில், காவிரிப்பூம்பட்டினத்துக்கு அருகில், காவிரியாற்றின் வடகரையில் உள்ளது. சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது.