சேத்திரத் திருவெண்பா - பாடல் 16 - திருவாசி என்னும் திருப்பாச்சிலாச்சிராமம்

சேத்திரத் திருவெண்பா, ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (பல்லவ முதலாம் பரமேஸ்வரன்
கி.பி 670 – 675) பாடியது.

நேரிசை வெண்பா

இட்ட குடிநீர் இருநாழி ஓருழக்காச்
சட்டவொரு முட்டைநெய் தான்கலந்(து) - அட்ட
அருவாய்ச்சா றென்றங் கழாமுன்னம் பாச்சில்
திருவாச்சி ராமமே சேர். 16

குறிப்புரை :

(இவ்வெண்பாக்கள் யாவும் `யாக்கை (இந்த மானிடப் பிறப்பில் நாம் பெற்ற உடலின்) நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்பதையே அறிவுறுத்துகின்றன).

இவ்வெண்பா, 'திருவாசி என்னும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறையும் மாற்றறிவரதனைச் சென்று வணங்கு' என்று கூறுகிறது.

பொழிப்புரை:

ஒரு முட்டையளவான விளக்கெண்ணெயை இருநாழியளவு நீரிற் கலந்து, அதனை ஓர் உழக்களவாகச் சுண்டக் காய்ச்சி எடுத்து அரியசாறு என்றும், கசாயம் என்றும், உடலுக்கு நல்லது என்றும் வாயில் ஊற்றி, ’குடியுங்கள்', என்று முயன்று சொல்லி சுற்றத்தார் அழுவதற்கு முன்னால் திருவாசி என்னும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறையும் மாற்றறிவரதனைச் சென்று வணங்கு என்கிறார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார்.

அட்ட - காய்ச்சி எடுக்கப்பட்ட,

அருவாய்ச் சாறு - அரிய சாறு, கசாயம்,

வாய் - வாயில் ஊற்றத்தக்க `சாறு` என்பதன் பின், `குடியுங்கள்` என்று சொல்லி சுற்றத்தார் அழுவார்கள்,

முட்டை, முட்டை வடிவமாக எண்ணெய் முகப்பதற்குச் செய்து வைக்கப்படும் சிறிய அகப்பை.

திருப்பாச்சிலாச்சிராமம்: திருவாசி மாற்றறிவரதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 62 வது சிவத்தலமாகும்.

திருச்சி நகரிலிருந்து முசிறி செல்லும் சாலையில் 14 கி.மீ தொலைவில் திருவாசி பேருந்து நிறுத்தம் வரும். ஊருக்குள் செல்லும் ஒரு கிளைச்சாலையில் அரை கி.மீ தொலைவில் இக்கோவில் உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்து உள்ளது.

இது சுந்தரர் பொன் பெற்ற தலமென்பதும், கொல்லி மழவனின் புதல்விக்கு நேர்ந்த முயலகன் நோயைச் சம்பந்தர் தீர்த்த தலமென்பதும் தொன்நம்பிக்கை (ஐதிகம்).

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Apr-22, 12:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே