யாவரையும் வஞ்சித்தோம் என்று மகிழன்மின் – நீதிநெறி விளக்கம் 94

நேரிசை வெண்பா

வஞ்சித்(து) ஒழுகும் மதியிலிகாள்! யாவரையும்
வஞ்சித்தோம் என்று மகிழன்மின்! - வஞ்சித்த
எங்கும் உளனொருவன் காணுங்கொல் என்றஞ்சி
அங்கம் குலைவ(து) அறிவு 94

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

பொய்க்கோலம் பூண்டு பிறரை வஞ்சித்து நடக்கும் மதியீனர்களே!

எல்லாரையும் நாம் வஞ்சித்து விட்டோம் என்று நீங்கள் மகிழ்ச்சி கொள்ளாதீர்கள்.

வஞ்சித்தவற்றை எங்கும் நிறைந்த இறைவன் காண்கின்றானென்று நடுங்கி உங்கள் உடல் பதறுவதே உங்களுக்கு அறிவுடைமையாகும்.

விளக்கம்:

இறைவன் 'எங்குமிருக்கிறார், எல்லாம் அறிவார்' என்னும் உண்மையை மக்கள் அறியாமை காரணமாக 'மதியிலிகாள்' என்றார்.

மனிதர் தண்டிப்பதிலும் இறைவன் தண்டனை கொடிதாகலின், ‘அங்கங் குலைவதறிவு’ என்றார்.
மதியாவது பொருளின் இயல்பை ஆராய்ந்து அளந்தறிவது.

கருத்து:

எங்கும் நிறைந்த இறைவன் அறியாத செயல் யாதுமில்லை யாகையால், பிறரை வஞ்சித்தோம் என்று மகிழ வேண்டாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Apr-22, 12:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

மேலே